நிதி ஆயோக் கூட்டத்தை முதல்வர் ஸ்டாலின் புறக்கணிக்க முடிவு செய்துள்ளது மிகவும் நாடகத்தனமானது என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று (ஜூலை 24) விமர்சித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் 2024-25 ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் பீகார் மற்றும் ஆந்திராவிற்கு அதிகமான திட்டங்களும், நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்ட நிலையில், தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு எந்தவித சிறப்பு திட்டங்களும் நிதியும் ஒதுக்கப்படவில்லை.
இதனையடுத்து நேற்று மாலை செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின், மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்பிற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக வரும் 27ஆம் தேதி டெல்லியில் நடைபெற இருக்கும் நிதி அயோக் கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை என்று அறிவித்தார்.
ஆளும் திமுக மட்டுமின்றி எதிர்க்கட்சியான அதிமுக உட்பட மற்ற கட்சித் தலைவர்களும் மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழக அரசு புறக்கணிக்கப்பட்டுள்ளது குறித்து கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில், நிதி ஆயோக் கூட்டத்தை முதல்வர் ஸ்டாலின் புறக்கணிக்க முடிவு செய்துள்ளது மிகவும் நாடகத்தனமானது என அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
காங்கிரஸ் ஆட்சியை விட அதிக நிதி ஒதுக்கீடு!
இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிரதமர் மோடியின் திறமையான தலைமையின் கீழ் 2024-25ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய அரசு நேற்று தாக்கல் செய்தது.
குறைந்த வருமானம் உள்ளவர்கள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் பட்ஜெட் வடிவமைக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பட்ஜெட்டில் தமிழகத்தின் பெயரை குறிப்பிடவில்லை என்ற அடிப்படையில், அனைத்து மாநில முதல்வர்கள் அடங்கிய நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்க முடிவு செய்துள்ளது மிகவும் நாடகத்தனமானது.
பட்ஜெட் உரையில் குறிப்பிடப்பட்டுள்ள மாநிலங்களுக்கு மட்டுமே பலன் கிடைக்கும் என்று மக்களைத் தவறாக வழிநடத்த தமிழக முதல்வர் ஸ்டாலின் முயற்சிக்கிறார்.
ஆனால் கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை காங்கிரஸ் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் 6 பட்ஜெட் உரைகளில் தமிழகத்தை சேர்க்க தவறியதை எளிதாக மறந்துவிட்டார். இதன்மூலம் அந்த ஆண்டுகளில் தமிழ்நாட்டுக்கு எந்தத் திட்டமும் வழங்கப்படவில்லை என கூறுகிறாரா?
UPA அரசாங்கத்தின் கீழ் ஆண்டுகளை 2014 மற்றும் 2024 க்கு இடையில் NDA அரசாங்கத்தில் வந்த பட்ஜெட் அறிவிப்புகள் மூலம் தமிழகம் பத்து மடங்கு அதிகமாகப் பெற்றது என்பது அவருக்குத் தெரியாதா?
வெற்று நாடகங்களைக் கைவிட வேண்டும்!
மாநிலத் தேவைகளை நிவர்த்தி செய்யும் நோக்கில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணிப்பதன் மூலம் தமிழக முதல்வர் என்ன சாதிக்க விரும்புகிறார்?
கடந்த ஐந்தாண்டுகளாக நாடாளுமன்றத்தில் தங்கள் தொகுதிகளுக்காகப் பேசத் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக எம்பிக்கள், தொகுதி தொடர்பான எந்தப் பிரச்சினையையும் தீர்க்கத் தவறிவிட்டனர் என்பது உண்மைதான்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் சுயவிளம்பரத்தை நோக்கமாகக் கொண்ட இத்தகைய வெற்று நாடகங்களைக் கைவிட்டு, அதற்குப் பதிலாக நமது மாநிலத்தின் வளர்ச்சிக்காக ஆக்கபூர்வமான அரசியலைத் தொடர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.” என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
பட்ஜெட் எதிரொலி : தொடர்ந்து சரியும் தங்கம் விலை… நகைக்கடையில் குவியும் பெண்கள்!
Share Market : பட்ஜெட்டில் indexation ரத்து… முதலீட்டாளர்கள் அதிர்ச்சி!
Comments are closed.