2025ஆம் ஆண்டுக்கான மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை போட்டிகள் நிறைவு விழா கொண்டாட்டம் சென்னை நேரு விளையாட்டரங்கில் இன்று (அக்டோபர் 14) நடைபெற்றது.
பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், மாற்றுத் திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என 5 பிரிவுகளில் ஆண்கள், பெண்களுக்காக தனித்தனியாக 37 வகையான விளையாட்டுப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன.
மொத்தம் 13 நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியில் 109 தங்கப்பதக்கம், 90 வெள்ளி, 82 வெண்கலம் என 281 பதக்கங்களுடன் சென்னை அணி சாம்பியன் பட்டம் வென்றது. அதற்கு அடுத்ததாக 36 தங்கம், 22 வெள்ளி, 30 வெண்கலம் என 88 பதக்கங்களுடன் செங்கல்பட்டு அணி 2வது இடமும், 33 தங்கம், 27 வெள்ளி, 35 வெண்கலம் என மொத்தம் 95 பதக்கங்களுடன் 3வது இடமும் வென்றது.
நிறைவு விழாவில் கலந்துகொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்ற அணிகள், வீரர், வீராங்கனைகளுக்கு பரிசு வழங்கி கெளரவித்தார்.
பின்னர் விழாவில் அவர் பேசுகையில், “தமிழ்நாட்டு விளையாட்டுத்துறையின் பொற்காலமாக திராவிட மாடல் ஆட்சி இருக்கிறது. தேசிய போட்டியாக இருந்தாலும், சர்வதேச தொடராக இருந்தாலும் போட்டிகளை நடத்துவதில் தமிழகம் உயர்தரமாக உள்ளது.
தமிழ்நாடு மாதிரி வேறு எந்த மாநிலமும் விளையாட்டு மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு உதவி செய்து இருக்கமாட்டார்கள் என்று பெருமையாக நெஞ்சை நிமிர்த்தி நான் சொல்கிறேன்.
இந்த விளையாட்டால் தமிழகம் வாங்கி இருக்கும் சில விருதுகளை மட்டும் இங்கே சொல்கிறேன். சிஐஐ அமைப்பு சார்பில் எஸ்டிஏடி விளையாட்டு வணிக விருது 2023 வழங்கப்பட்டது. 2 ஆண்டுகளுக்கு தி இந்து ஸ்போர்ட்ஸ் ஸ்டார் ஏசஸ் விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. ஜெம் அவார்ட்ஸ் 2025 வழங்கப்பட்டுள்ளது. செஸ் சாம்பியன் குகேசுக்கு கேல் ரத்னா விருது கிடைத்துள்ளது. 2024ம் ஆண்டு அர்ஜூனா விருது 4 விருதுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இப்படி எத்தனை விருதுகள் தமிழ்நாட்டை தேடி வந்தாலும், நாங்கள் பெரியதாய் நினைக்கும் விருது எது தெரியுமா? தமிழ்நாட்டில் விளையாட்டை Career – ஆக எடுத்து நிச்சயம் நம்மால் சாதிக்க முடியும் என்று அரசு திட்டத்தின் மீது நம்பிக்கை வைத்து இவ்வளவு ஆயிரம் பேர் போட்டியில் பங்கெடுக்கிறார்களே உங்களின் நம்பிக்கை தான் எங்களுக்கான பெரிய விருதாக அமைந்துள்ளது.
விளையாட்டுகளை வளர்க்க, திறமையான வீரர்களை கண்டறிந்து ஊக்குவிக்க, உரிய அங்கீகாரம் வழங்க 37 கோடி ரூபாய் பரிசுத்தொகையுடன் இந்த முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளை நடத்தியிருக்கிறோம்.
கடந்த ஆட்சியில் நான் அமைச்சராக இருந்தபோது உள்ளாட்சித் துறையில் செய்த பல சாதனைகளை பட்டியலிட்டு, ‘உள்ளாட்சித் துறையின் அமைச்சராக நான் இருக்கலாம்’ என நினைக்கிறேன் என விழா ஒன்றில் தலைவர் கலைஞர் கூறினார்.
அதேபோல விளையாட்டு துறையை நானே கவனிக்கலாம்னு ஏக்கம் எனக்கு இப்போது வந்துள்ளது. அதற்கு துணை முதலமைச்சர் உதயநிதியின் பணிகள்தான் காரணம்.
தமிழக வீரர்கள் வெற்றிமேல் வெற்றிகளை குவித்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு காரணமாக பயிற்சியாளர்களுக்கு பாராட்டுக்களையும், வாழ்ததுகளையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்” என ஸ்டாலின் தெரிவித்தார்.