இலங்கைத் தமிழ்ச் சொந்தங்களுக்கு நிரந்தரக் குடியுரிமை பெற்றுத் தரப் போராடுவோம்! – மு.க.ஸ்டாலின்

Published On:

| By Pandeeswari Gurusamy

இலங்கைத் தமிழ்ச் சொந்தங்களுக்கு நிரந்தரக் குடியிருப்புகளை வழங்கி வருகிறோம். நிரந்தரக் குடியுரிமையும் பெற்றுத் தரப் போராடுவோம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இன்று (பிப்ரவரி 24) கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியம், பெருமாள்புரத்தில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய 90 புதிய வீடுகள் திறந்து வைக்கப்பட்டன. இந்தத் திட்டத்திற்கு 7 கோடியே 85 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களே இந்த வீடுகளைத் திறந்து வைத்தனர்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியின்போது முதல்வர் ஸ்டாலின் புதிதாகக் கட்டப்பட்ட வீடுகளைப் பார்வையிட்டு, முகாம் வாழ் தமிழர்களுடன் கலந்துரையாடினார். அவர்கள் தங்களுக்கு நியாயவிலைக் கடை மற்றும் சமுதாய நலக் கூடம் அமைத்துத் தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இந்தக் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித் தருமாறு தொடர்புடைய அலுவலர்களுக்கு முதல்வர் உத்தரவிட்டார்.

இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில்,”இலங்கைத் தமிழ்ச் சொந்தங்களுக்கு நிரந்தரக் குடியிருப்புகளை வழங்கி வருகிறோம்!
நிரந்தரக் குடியுரிமையும் பெற்றுத் தரப் போராடுவோம்!

ADVERTISEMENT

இலங்கைத் தமிழர்களுக்கு வீடுகள், அவர்களின் குழந்தைகள் உயர்கல்வி பயில 3 கல்வியாண்டுகளில் 5,771 மாணவர்களுக்கு 11.07 கோடி ரூபாய் கல்வி உதவித்தொகை, சுயஉதவிக் குழுக்களுக்கு நிதி, திறன் மேம்பாட்டுப் பயிற்சி உள்ளிட்டவற்றை வழங்கி அவர்களின் வாழ்வாதாரம் பேணி வருகிறது நமது Dravidian Model அரசு!

நீண்டகாலமாக இந்திய மண்ணில் வசித்து வரும் அவர்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய குடியுரிமையை இந்திய அரசு விரைந்து வழங்கும் என எதிர்பார்க்கிறோம். அதுவரை நம் குரல் தமிழ்ச் சொந்தங்களுக்காகத் தொடர்ந்து ஒலிக்கும்!” என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இந்த நிகழ்ச்சி, தமிழக அரசின் Dravidian Model கொள்கையின் கீழ் இலங்கைத் தமிழர்களின் நலனுக்காகத் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும். முகாம் வாழ் தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு அரசு அளித்து வரும் ஆதரவு இதன் மூலம் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.” என தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share