“எங்களையும் மிரட்டப் பார்க்கிறார்கள்!” – NDA கூட்டணியை விளாசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

Published On:

| By Pandeeswari Gurusamy

DMK MK Stalin

பாஜகவின் சதி அரசியல் தமிழகத்தில் அம்பலமாகிவிட்டது என்றும், அவர்கள் மீது மக்களுக்கு எவ்வித நம்பிக்கையும் இல்லை என்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

பாஜகவின் “வாஷிங் மெஷின்” அரசியல்

ADVERTISEMENT

சென்னையில் இன்று (பிப்ரவரி 23) தனியார் தொலைக்காட்சி நடத்திய கருத்தரங்கில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் , “மற்ற மாநிலங்களில் கட்சிகளை மிரட்டி, ஆட்சிகளைக் கவிழ்த்து, தங்கள் ஆட்சியை நிறுவ பாஜக ‘வாஷிங் மெஷின்’ அரசியலைப் பயன்படுத்தியது. தற்போது அதே பாணியைத் தமிழகத்திலும் புகுத்தி கூட்டணி அமைத்துள்ளனர். இவர்களது கூட்டணி என்பது முழுக்க முழுக்க ஊழல்வாதிகளை மிரட்டி அமைக்கப்பட்ட ஒரு கூட்டணியே ஆகும்,” என்று சாடினார்.

மேலும், கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சர்களாக இருந்த பலர் மீது ரெய்டுகள் நடத்தப்பட்டு, 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், “கூட்டணிக்காக அவர்களை இப்போது பாஜக பாதுகாக்கிறது. முன்னாள் அமைச்சர்கள் சிலர் மீது FIR பதிவு செய்ய விடாமல் நீண்ட ஆண்டுகளாக ஆளுநர் மூலமாக தடுத்து வைத்துள்ளனர். இந்த லட்சணத்தில் ED, IT, CBI ஆகியவற்றை வைத்து எங்களையும் மிரட்டப் பார்க்கிறார்கள். எதற்கும் அஞ்சாமல் அவர்களை ஒரு கை பார்க்க நாங்களும் தயாராகவே உள்ளோம்,” என ஆவேசமாகத் தெரிவித்தார்.

ADVERTISEMENT

அதிமுக மீதான விமர்சனம்

“பாஜகவின் கிளைக் கழகச் செயலாளர் போலச் செயல்படும் பழனிசாமி போன்ற ‘ஆமாம் சாமிகள்’, பாஜகவை உள்ளே கொண்டு வர நினைக்கிறார்கள். பாஜக உள்ளே நுழைந்தால் என்ன நடக்கும் என்பதற்கு மகாராஷ்டிராவே சாட்சி. அங்கு மாநிலக் கட்சிகளை உடைத்து ஆட்சிக்கு வந்தவர்கள், முஸ்லிம்களுக்கான 5% இட ஒதுக்கீட்டை ரத்து செய்துள்ளனர். மகளிர் உதவித்தொகை திட்டத்தில் 28 லட்சம் பெண்களை நீக்கியுள்ளனர். இதையேதான் தமிழகத்திலும் செய்ய நினைக்கிறார்கள். மண் குதிரையை நம்பி யாராவது ஆற்றில் இறங்குவார்களா?” என்று கேள்வி எழுப்பினார்.

ADVERTISEMENT

மாநில சுயாட்சியே தீர்வு

எங்களைப் பொறுத்தவரை எங்களது லட்சியங்களும் கடமைகளும் மிகப் பெரியவை. அதை நோக்கிய பயணம்தான் எங்களது தேர்தல் அறிக்கைகள். எல்லோருக்கும் எல்லாம், எங்கும் தமிழ், எதிலும் தமிழ், அனைத்துத் துறை வளர்ச்சி, அனைத்து மாவட்ட வளர்ச்சி என்று மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்திக் கொண்டு வருகிறோம்.

மாநில சுயாட்சி என்பது அறிஞர் அண்ணா எங்களுக்கு வழங்கிய உயில். மாநில அரசுகளே மக்களுக்கு நெருக்கமானவை. எனவே, ஒன்றிய அரசு தங்களுக்குத் தேவையான அதிகாரங்களை மட்டும் வைத்துக்கொண்டு மற்றவற்றை மாநிலங்களுக்கு வழங்க வேண்டும்.

பிரதமர் வெளிநாடுகளுக்குச் சென்று வளர்ச்சியைப் பார்க்கிறார். இந்தியாவும் அத்தகைய வளர்ச்சியை அடைய வேண்டுமானால், மாநில சுயாட்சிக்கான சட்டத் திருத்தத்தைக் கொண்டு வர வேண்டும்.

தமிழ்நாடு vs NDA

“சமத்துவம், சமூக நீதி, மதச்சார்பின்மை ஆகிய கருத்தியல்களே இந்தியாவிற்கு உண்மையான வளர்ச்சிப் பாதையை உருவாக்கும். அந்தப் பாதையைத் தான் ‘திராவிட மாடல்’ காட்டுகிறது. தமிழகத்தில் நடக்கவிருப்பது ஜனநாயகத்திற்கும் பாசிசத்திற்கும் இடையிலான தேர்தல். ‘தமிழ்நாடு vs NDA’ என்ற இந்தத் தேர்தலில் தமிழ்நாடுதான் நிச்சயம் வெல்லும்,” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியாகத் தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share