இந்தித் திணிப்பு வெறியில் எல்லை மீறும் பா.ஜ.க.! – மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

Published On:

| By Pandeeswari Gurusamy

MK Stalin

திருச்சி மண்டல ரயில்வே அலுவலகத்தின் நுழைவு வாயிலுக்கு “கர்தவ்ய த்வார்” என இந்தியில் பெயர் எழுதப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்திற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று (மார்ச் 4) கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பா.ஜ.க. அரசின் இந்தித் திணிப்பு: நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்!

ADVERTISEMENT

இந்தித் திணிப்பு வெறியில் எல்லை மீறிச் சென்று கொண்டிருக்கிறது பா.ஜ.க.!

‘மொழி ஒன்று – வரி வடிவம் மூன்று’ எனும் வகையில் இந்திப் பெயரையே தமிழ், ஆங்கிலத்திலும் எழுதி வைக்கும் இழிவான Hindi Imposition செயலில் இறங்கியுள்ளது ஒன்றிய பா.ஜ.க. அரசு!

ADVERTISEMENT

திருச்சி மண்டல இரயில்வே அலுவலக நுழைவு வாயிலில் ‘கர்தவ்ய த்வார்’ என எழுதி வைத்துள்ளனர்.

வருங்கால வைப்பு நிதி அலுவலகங்களில் (EPFO) ஏற்கெனவே ‘பவிஷ்ய நிதி பவன்’ என்ற பெயரைத் திணித்து விட்டனர்.

ADVERTISEMENT

குற்றவியல் சட்டங்களுக்கும் சமஸ்கிருதப் பெயரைத்தான் ஆங்கில வரிவடிவத்தில் எழுதுகின்றனர்.

ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சகத்தின் பெயர் ‘ஜல் சக்தி’ ஆகிவிட்டது.

மகாத்மா காந்தி நூறு நாள் வேலைத் திட்டப் பெயர் மாற்றத்திலும் இதே வேலையைத்தான் காட்டினார்கள்.

கொட்டமும், ஆணவமும் கூடிக்கொண்டே போகிறது. தமிழர்களின் சுயமரியாதையைச் சீண்டிப் பார்க்கும் இவர்களுக்குச் சரியான பாடம் புகட்ட வேண்டும்!

தமிழ், ஆங்கிலப் பெயர்களிலும் இந்தியைத் திணிக்கும் முயற்சியைக் கைவிட்டு, உடனடியாக அங்கு சரியான தமிழ்ப் பெயர்கள் இடம்பெற வேண்டும். இல்லையென்றால் தமிழர்களின் சூட்டை ஒன்றிய பா.ஜ.க. அரசு உணர வேண்டி இருக்கும் என்று எச்சரிக்கை விடுக்கிறேன்.
Stop Hindi Imposition” என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை உண்மையான மக்கள் பிரச்சினைகள் குறித்து எப்போது பேசப் போகிறீர்கள்? என்று முதல்வருக்கு கேள்வி எழுப்பி உள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே,

எப்போதெல்லாம் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு, நீதிமன்றங்களில் கொட்டு வாங்கி, செய்யும் ஊழல் எல்லாம் வெளிவந்து, பொதுமக்கள் மத்தியில் திமுகவுக்கு எதிரான கடும் எதிர்ப்பு எழுகிறதோ, அப்போதெல்லாம், அறிவாலயத்தில் உள்ள ஒரு பழைய தகரப் பெட்டியைத் திறந்து, இந்த இல்லாத இந்தித் திணிப்பை எடுத்துக் காட்டு என்று உங்கள் தந்தை சொல்லிவிட்டுச் சென்றாரா?

இந்த ஏமாற்று அரசியல் அவர் காலத்தோடு முடிந்து விட்டது. இனியும் இந்த புளித்துப் போன காமெடி செய்து கொண்டிருக்காமல், நீங்கள் ஆட்சிக்கு வந்த நாளிலிருந்து பெருகியிருக்கும் ஊழல், கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள், போதைப் பொருள்கள் புழக்கம், என, உண்மையான மக்கள் பிரச்சினைகள் குறித்து எப்போது பேசப் போகிறீர்கள்?” என கேள்வி எழுப்பி உள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share