தமிழகத்தில் எந்த குடும்பத்தை எடுத்துக் கொண்டாலும் அவர்களில் ஒருவராவது நமது அரசின் திட்டங்களில் பயனடைந்திருப்பார்கள். உண்மையான அரசியல் என்றால் என்ன என்று மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டும் செயல்பாடுகள் பாஜகவை கடுமையாக எரிச்சல் அடைய வைக்கிறது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளர்.
சென்னையில் இன்று (பிப்ரவரி 23) தனியார் தொலைக்காட்சியின் கருந்தரங்கில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசுகையில்,தமிழகத்தைத் தவிர வேறு எந்த மாநிலங்களால் 11.19 சதவீதம் என்ற பொருளாதார வளர்ச்சியை சாதிக்க முடிந்துள்ளது? எப்படிப்பட்ட சூழலில் நாங்கள் சாதித்திருக்கிறோம்? ஜனநாயகத்திற்கும், கூட்டாட்சிக்கும் கொஞ்சம் கூட மதிப்பு தராத பாஜக ஆட்சி ஒன்றியத்தில் ஆளுகிறது. எதிர்க்கட்சிகள் ஆளக்கூடிய மாநிலங்களை எந்த அளவிற்கு வஞ்சகத்தோடு அவர்கள் அணுகுகிறார்கள் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். ஆளுநர்கள் மூலமாக நிர்வாக சிக்கல்களை ஏற்படுத்துவதில் தொடங்கி, செயற்கையான நிதிச் சுமையை உருவாக்கி மாநிலங்களை முடக்க நினைப்பதுவரை அத்தனை செயல்களையும் செய்து கொண்டிருக்கிறார்கள். இது மட்டும்தான் அவர்களுக்குத் தெரிந்த பாலிடிக்ஸ்.
இதையெல்லாம் அரசியல் தளத்திலும் ஆட்சி அதிகாரத்திலும் எதிர்கொண்டு, “வளர்ச்சி அரசியல் என்றால் தமிழ்நாட்டைப் பாருங்கள்” என்று வளர்ச்சி அரசியலில் தமிழ்நாடு வளர்ந்திருக்கிறது. அதுவும் ஒரு தரப்பிற்கான வளர்ச்சி அல்ல; “எல்லோருக்கும் எல்லாம்” என்ற பரந்துபட்ட வளர்ச்சி. பெண்கள், மாணவர்கள், இளைஞர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், நெசவாளர்கள், தொழில் முனைவோர், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், திராவிடர்கள், மாற்றுத்திறனாளிகள் எல்லோரையும் உயர்த்தும் அரசியலை நாங்கள் முன்னெடுத்துள்ளோம்.
நாங்கள் செய்துள்ளதுபோல் எங்கள் திட்டங்களை வேறு எந்த மாநிலங்களும் செய்திருக்கிறார்களா என்று கேள்வி எழுப்பினார். தமிழகத்தில் எந்த குடும்பத்தை எடுத்துக் கொண்டாலும் அவர்களில் ஒருவராவது நமது அரசின் திட்டங்களில் பயனடைந்திருப்பார்கள். உண்மையான அரசியல் என்றால் என்ன என்று மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக் காட்டும் செயல்பாடுகள் பாஜகவை கடுமையாக எரிச்சல் அடைய வைக்கிறது. அவர்களது சதி அரசியல் அம்பலமாகி அவமானப்பட்டு அசிங்கப்பட்டு நிற்கிறார்கள் என்றார்.
