நா.மணி
அரசியல் என்றால் என்ன?
நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் கடந்து விட்டது. இந்த நேரத்தில் “அரசியல் என்றால் என்ன?” என்று கேட்டால் என்ன பதில் கிடைக்கும்? “அரசியல் நமக்கு எதுக்குப்பா?” என்பது தொடங்கி பல்வேறு எதிர் கேள்விகள் வரும். சரியான பதில் எத்தனை பேரிடமிருந்து வரும்? சரி, ஓரிடத்தில் கொஞ்சம் பேரை உட்கார வைத்து “அரசியல் என்றால் என்ன?” என்ற குழு விவாதம் நடத்தினால் எப்படி இருக்கும்? அதனையும் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். முடிந்தால் பரிசோதனை செய்தும் பார்க்கலாம். இப்போது அரசியல் என்றால் என்ன என்ற எளிய விளக்கத்தை பார்ப்போம்.
“அரசியல் என்பது மனிதர்கள் வாழ்வதற்கான விதிகளை உருவாக்குவது. கிடைக்கும் வளங்களைப் பகிர்ந்து கொள்ளும் முறைகளைத் தீர்மானிக்கும் அமைப்பு” என்று கூறலாம். அரசியலே சமூகத்தின் அதிகாரம் என்று எவ்வாறு கட்டமைக்கப்படுகிறது? சமூகத்தை நிர்வகிக்கும் முடிவுகளை யார் எடுக்கிறார்கள்? யாருக்கு அதன் பயன்கள் சென்று சேர்கின்றன என்பதைத் தீர்மானிக்கும் செயல்முறை என்றும் கூறலாம். இது ஒரு புரிதலுக்கான விளக்கமேயன்றி முழுமையான விளக்கம் அல்ல.
அரசியல் என்றால் கல்வி, வேலை, சோறு

அரசியலை வாழ்வோடு தொடர்புபடுத்துவது எப்படி என்ற கேள்விக்கு, நாம் வாழ உணவு வேண்டும். குடிக்க குடிநீர் வேண்டும். உணவுப் பொருட்களின் விலையைப் பொருத்தே நாம் உண்ணும் உணவின் தரம் இருக்கிறது. அதில் அடங்கியுள்ள சத்துக்கள் இருக்கின்றன. உடல் ஆரோக்கியம் இருக்கிறது. இந்த உணவுப் பொருட்களின் விலைகளுக்கும் அரசியலுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. எனவே அரசியல் என்பது சோறு என்று சொல்லிக் கொடுக்க வேண்டும்.
குடியிருக்கும் வீடும் குடிக்கும் தண்ணீரும் அரசியலுடன் இரண்டறக் கலந்து இருக்கின்றன. எல்லோருக்கும் தரமான, சமமான கல்வி என்பது ஓர் அரசியல் செயல்திட்டம். “எல்லாக் குடிமக்களும் சமமானவர்கள்; எல்லோரும் ஓர் குலம்; எல்லோரும் ஓர் நிறை.” எல்லோருக்கும் சமமான தரமான மருத்துவம் கிடைக்கும் பாதையிலேனும் நடக்கத் தொடங்க வேண்டும். உழைக்கத் தயாராக உள்ள அனைத்து பிரிவு மக்களுக்கும் வேலை வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுப்பது, அதற்கு ஏற்றவாறு பொருளாதாரத்தை நிர்வகிப்பது — இவை அனைத்தும் அரசியலின் பங்குகள்.
எனவே,
அரசியல் என்பது சோறு
அரசியல் என்பது வேலை
அரசியல் என்பது மருந்து
அரசியல் என்பது கல்வி
அரசியல் என்பது ஆரோக்கியம்
அரசியல் என்பது உரிமை
என்று எளிமையாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
யார் அரசியல்வாதி

ஆட்சி, அதிகாரம், ஆளுகை, சட்டங்கள், நிர்வாகம், வளங்களின் பங்கீடு — இதனைச் செய்யத் தயாராக முன்னுக்கு வருபவர்களை அரசியல்வாதிகள் என்கிறோம். இவர்களின் கொள்கை நிலைப்பாடுகளுக்கேற்ப அரசியல் கட்சிகளாகப் பிரிந்து நிற்கிறார்கள் என்று கொள்ளலாம். இந்த அரசியல்வாதிகள் மேலே குறிப்பிட்ட மக்கள் தேவைகளை எப்படி அணுகுகிறார்கள் என்பதே அரசியலாகவும் அரசியல் விவாதங்களாகவும் உருவெடுக்க வேண்டும். இதனை ஒட்டி குடிமக்கள் கேள்வி கேட்டால் பொறுப்புடன் பதில் கூற வேண்டும்.
உண்மையான அரசியல் களம் எப்படி இருக்கிறது?

அரசியல்வாதிகளில் ஒரு பகுதியினர் கடவுள், பக்தி, மதத்தை அரசியலின் மைய நீரோட்டத்திற்கு எடுத்து வருகின்றனர். மதத்தையே பிரதான அரசியல் களமாக மாற்றுகின்றனர். கல்வி, வேலை, மருத்துவம், ஆரோக்கியம், அடிப்படை வசதிகள் பற்றி பேசாமல் மதத்தைப் பயன்படுத்தி மக்கள் வாக்குகளைச் சேகரிக்கிறார்கள். பொதுவாக மதம் பற்றி பேசும் போது கைகொடுக்கவில்லை என்றால், மதத்தை பயன்படுத்தி மக்களைப் பிளவுபடுத்துகிறார்கள். பிளவுகள் பதட்டத்தை உருவாக்குகின்றன. பதட்டம் கலவரங்கள் வரை செல்கிறது. இந்த சூழ்நிலையில் மக்கள் தங்கள் உரிமைகளைப் பற்றி பேசாதபடி செய்து விடுகிறது. மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்காத போது அது மேலும் மேலும் அதிகரிக்கிறது. பிரச்சினைகளிலிருந்து தப்பிக்க மேலும் மேலும் அரசியலை மதவாதத்திற்குள் இழுத்துச் செல்கிறார்கள். மதவாதத்திற்கான புதிய புதிய பிரச்சினைகளைத் தேடுகிறார்கள் அல்லது உருவாக்குகிறார்கள்.
உரிமைக்கான முழக்கங்கள் உருமாற்றம் அடையும்
ஒரு குறிப்பிட்ட மதத்தவரை உணர்வுமயப்படுத்திவிட்டால், “கடவுளை காப்போம்; மதத்தை காப்போம்; மத வழிபாட்டை மீட்போம்” என்ற முழக்கங்களே போதுமானதாக இருக்கின்றன.
“கடவுள், மதம், பக்தி என்பதெல்லாம் நம்பிக்கை சார்ந்தது. அதற்கும் அரசியலுக்கும் என்ன சம்பந்தம்? அரசியல் என்பது வாழ்க்கை; அது பற்றி பேசு” என்று மக்கள் ஒத்த குரலில் குரல் எழுப்பும் நாள் வர வேண்டும். பக்தி, மத நம்பிக்கை என்பது கூட ஒரே மதத்தைச் சார்ந்த அனைத்து மக்களுக்கும் ஒரே மாதிரி இல்லை. பல்வேறு மக்களுக்கு பல்வேறு விகிதாச்சாரங்களில் இந்த நம்பிக்கை அளவுகோல் இருக்கிறது. இதனை மாற்றி அமைக்கவும் மதம் அரசியலில் பயன்படுகிறது. “மதம், பக்தி என்பது நம்பிக்கை; அரசியல் என்பது எங்கள் உரிமைகளைக் கேட்பது” என மக்கள் ஓங்கி ஒலிக்க வேண்டும்.
மதவாத அரசியலும் தனியார்மயமும்
மதரீதியான அணிதிரட்டல் என்று வரும் போது அரசியல் செயலற்றுப் போகிறது. மதம் என்னும் உணர்வு நிலைப்பட்ட மக்களாக மக்களை மாற்றி அமைத்து விட்டால், சக மனிதர்கள் மீது தங்களை அறியாமலேயே வெறுப்பை உருவாக்க முடியும். கல்வி, வேலை, மருத்துவம், ஆரோக்கியம் பற்றிய கேள்விகளும் எதிர்பார்ப்புகளும் பண்பாட்டு சண்டைகளாக மாற்றப்படலாம். மதவாதம் தலைதூக்கி நிற்கும் இடங்களில் தனியார்மயம் துரிதமாக நடக்கும். தனியார்மயம் மேலும் மேலும் வருவாய் ஏற்றத் தாழ்வுகளை உருவாக்கும்.

ஏற்றத் தாழ்வுகளில் சிக்கி வேலை கிடைக்காமல் தவிக்கும் மக்களை, எதிரியாக சித்தரிக்கப்பட்ட மதப்பிரிவினரால் உங்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்று திசைதிருப்பி தீ மூட்டலாம். அல்லது ஏற்கனவே எரியும் தீயில் எண்ணெய் வார்க்கலாம். மற்றொரு பிரிவு மக்களிடம், இடஒதுக்கீடுகளால் தான் உங்களுக்கு உரிய இடம் கிடைக்கவில்லை என்று கொளுத்திப் போடலாம்.
அரசியல் புரிதல் என்பது அரசியலின் அடிப்படைகளைப் புரிந்து கொண்டு கட்சி அரசியலைப் புரிந்து கொள்வது. அரசியல் பொருளாதாரத்தைப் புரிந்து கொள்வது. இதனை ஒட்டி கேள்வி கேட்கப் புரிந்து கொள்வது. உரிமைகளுக்காகப் போராட வேண்டும் என்று புரிந்து கொள்வது. அரசியல் நம் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் என்றால், நாம் அந்த அரசியலை எவ்வளவு தீர்க்கதரிசனத்தோடு பார்க்க வேண்டும் என்று புரிந்து கொள்ள வேண்டும்.
மதவாத அரசியலும் அடிமைத்தனமும்
அரசியல் மதவாதமானால் மக்கள் தங்களை அறியாமலேயே அடிமைகளாகி விடுவார்கள். மதவாத அரசியலை மக்கள் புரிந்து கொண்டால் நல்ல குடிமக்களாக மாற முடியும். அரசியலில் மதத்தை கலப்பவர்களை, மதத்தை வைத்து அரசியல் செய்பவர்களை “போலி அரசியல்வாதிகள்” என்று குரல் உயர்த்திச் சொல்லலாம்.
கட்டுரையாளர்

நா.மணி, பேராசிரியர். மேனாள் தலைவர் தமிழ் நாடு அறிவியல் இயக்கம்.
