கலைஞரின் கவலை அரை நூற்றாண்டு கடந்த பிறகும் மாறவில்லை – தங்கம் தென்னரசு

Published On:

| By Pandeeswari Gurusamy

தமிழகத்தில் 2026-27 ஆம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (பிப்ரவரி 17)சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.

அப்போது, கலைஞர் 55 ஆண்டுகளுக்கு முன்பு 1971-72 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்ட அறிக்கையில் தெரிவித்திருந்த கருத்தை அமைச்சர் தங்கம் தென்னரசு சுட்டிக் காட்டினார். அதில், “வரி விதிக்கும் உரிமை மத்திய அரசிடம் குவிந்து கிடக்கிறது. ஆனால், மக்கள் நலனைப் பேணி பெருக்குவதற்கான பெரும் பகுதி செலவை ஏற்க வேண்டிய பொறுப்பு மாநில அரசுகளிடம் நிறைந்து கிடக்கிறது. இவ்வாறு உரிமை ஒருபுறமும், கடமை பொறுப்பு மறுபுறமும் இருக்கும் விந்தை நிலைதான் நம்முடைய சிக்கல்கள் அனைத்திற்கும் அடிப்படைக் காரணமாகும்.

ADVERTISEMENT

எனவே, நிதி வருவாயைப் பகிர்ந்து கொள்ளும் தற்போதைய முறையை மாற்றி அமைக்க வேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம். தேவை ஏற்படும் எனில் இதன் பொருட்டு அரசியலமைப்புச் சட்டத்தையும் திருத்தி ஆக வேண்டும்” என கலைஞர் கவலையோடு பதிவு செய்த சூழல், அரை நூற்றாண்டு காலம் கழிந்த பிறகும் மாறவில்லை என்பது வருந்தத்தக்கது என்றார்.

மேலும், 16வது நிதிக்குழு அறிக்கை தமிழ்நாட்டுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. அனைத்து மாநிலங்களும் மத்திய வரிகளின் பகிர்ந்தளிக்கத்தக்க நிதியில் மாநிலங்களுக்கான பங்கு அதிகரிக்க வேண்டும் என தெளிவாகக் கூறியிருந்த போதிலும், மாநிலங்களுக்கான பங்கு 41% ஆக தொடர்வதாக நிதி ஆணையம் பரிந்துரைத்துள்ளது. மேலும், மேல் வரி மற்றும் கூடுதல் கட்டணங்கள் விதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்வது குறித்து மாநில அரசுகள் முன்வைத்த கோரிக்கைகள் மீது நிதிக் குழுவின் அறிக்கையில் எந்த விதமான பரிந்துரையும் இடம்பெறவில்லை என்பது வருந்தத்தக்கது.

ADVERTISEMENT

மாநிலங்களுக்கு இடையிலான கிடைமட்ட பகிர்வில் மீண்டும் ஒருமுறை தமிழ்நாட்டிற்கு உரிய நியாயமான பங்கு வழங்கப்படாமல் நிதிக்குழு பாரபட்சமாக நடந்து கொண்டுள்ளது. ஒன்பதாவது நிதி ஆணையம் காலத்தில் தமிழ்நாட்டிற்கான பங்கு 7.931 சதவீதமாக இருந்து வந்த நிலையில், தொடர்ந்து வந்த நிதி குழுக்கள் அதனை குறைத்து வந்தன. இந்தப் பங்கு 4.079 சதவீதமாக குறைந்ததால் ரூ.3.17 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

இது தமிழ்நாடு அரசின் நிலுவைக் கடனில் சுமார் 33 சதவீதத்திற்கு சமமானதாகும்.16வது நிதிக்குழு பரிந்துரைகளில் நமது அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கு முறையே 23.74% மற்றும் 13.27% அளவில் உயர்வு வழங்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டிற்கு வெறும் 0.44 சதவீதம் என்ற மிகச் சிறிய உயர்வே வழங்கப்பட்டுள்ளது. இது ஒப்பிடத்தக்க மாநிலங்களுள் மிகவும் குறைவானதாகும்.

ADVERTISEMENT

நாம் பெருந்தன்மையை எதிர்பார்க்கவில்லை. சமநிலையினை உறுதி செய்யும் நியாயத்தை மட்டுமே கோரி இருந்தோம். ஆனால், 16வது நிதிக்குழுவும் அந்தக் கடமையிலிருந்து தவறி உள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share