தமிழகத்தில் இந்த மாதம் பெண்களுக்கு ரூ.5,000 வழங்கியது மற்றும் இந்த ஆண்டு பொங்கல் பரிசாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3,000 வழங்கியதற்கான நிதி எவ்வாறு சமாளிக்கப்பட்டது என்பது குறித்து நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 2026-27 ஆம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (பிப்ரவரி 17) சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். அப்போது, பொங்கல் பரிசு மற்றும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு ரூ.5,000 வரவு வைக்கப்பட்டது போன்ற கூடுதல் செலவினங்களை தமிழக அரசு எவ்வாறு சமாளித்தது என்பதை அவர் தெளிவாக விளக்கினார்.
அவர் பேசுகையில், குடும்பத்திற்கு ரூ.3,000 வீதம் பொங்கல் பரிசு மற்றும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு ஒருமுறை சிறப்பு நிதியாக ரூ.5,000 (பிப்ரவரி மாதத்தில் வழங்கப்பட்டது) என ஒட்டுமொத்தமாக தமிழக அரசுக்கு ரூ.10,849 கோடி கூடுதலாக செலவு ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இந்தக் கூடுதல் செலவினங்கள் ஏற்பட்டுள்ள நிலையிலும், வளர்ச்சி சாராத செலவினங்களில் ஏற்பட்ட சேமிப்பின் காரணமாக ஒட்டுமொத்த செலவினங்களின் உயர்வு ரூ.5,713 கோடியாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
2026-27 ஆம் ஆண்டுக்கான இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் ஒட்டுமொத்த வருவாய் செலவினங்கள் ரூ.3,93,272 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2025-26 ஆம் ஆண்டுக்கான திருத்த மதிப்பீடுகளுடன் ஒப்பிடுகையில் 3.79 சதவீதம் வளர்ச்சி கொண்டதாகும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
