கோவை தெற்கு தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜி வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார்.
அதிமுகவின் கோட்டையாகக் கருதப்படும் கோவை மாவட்டத்தில் செந்தில் பாலாஜியை நிறுத்தியதன் மூலம், திமுக கோவையை குறிவைத்து அரசியல் காய்களை நகர்த்தத் தொடங்கியுள்ளது.
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் திமுக கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. அதிமுக 9 தொகுதிகளை கைப்பற்றிய நிலையில், கூட்டணிக் கட்சியான பாஜக கோவை தெற்கு தொகுதியில் வெற்றி பெற்றது. அந்தத் தொகுதியில் பாஜகவின் வானதி சீனிவாசன், மக்கள் நீதி மையம் தலைவர் கமலஹாசனை சிறிய வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்து வென்றார். திமுக கூட்டணியில் போட்டியிட்ட மயூரா ஜெயக்குமார் 3 அவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.
தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு 2011, 2016 மற்றும் 2021 ஆகிய மூன்று தேர்தல்களிலும் கோவை தெற்கில் அதிமுக கூட்டணியே வெற்றி பெற்றுள்ளது. 2011 மற்றும் 2016ல் அதிமுக வெற்றி பெற்ற நிலையில் 2021ல் பாஜக வெற்றி பெற்றது.
இந்த முறை அதிமுக கோவை தெற்கு தொகுதியில் முன்னாள் எம்எல்ஏ அம்மன் அர்ஜுனனை களமிறக்கியுள்ளது. முன்னாள் எம்எல்ஏ வானதி சீனிவாசன் பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ள கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
கோவை தெற்கு தொகுதியை காங்கிரஸ் கேட்டிருந்த நிலையிலும், திமுக கோவை தெற்கு தொகுதியில் வலுவான வேட்பாளரை களம் இறக்க திட்டமிட்டு செந்தில் பாலாஜிக்கு வாய்ப்பு வழங்கி உள்ளது.
மேற்கு மண்டல பொறுப்பாளராக செயல்பட்டு வரும் செந்தில் பாலாஜி, கோவையை மையமாகக் கொண்டு செயல்பட்டால் கட்சியின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும் என்பதால், அவரை கரூருக்கு பதிலாக கோவை தெற்கில் போட்டியிட வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அதிமுகவில் கோவை மாவட்டத்தில் வலுவான செல்வாக்கு கொண்டிருக்கும் நிலையில், அவருக்கு எதிராக செந்தில் பாலாஜியை களமிறக்குவது திமுகவுக்கு சரியான உத்தி எனக் கருதப்படுகிறது.
முன்னதாக கோவையில் செந்தில் பாலாஜி களம் காண வாய்ப்பு உள்ளது என நமது மின்னம்பலம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதமே செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
