“ஆடு நனையுதேன்னு ஓநாய் அழுத கதையா இருக்கு” – எடப்பாடிக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி

Published On:

| By Pandeeswari Gurusamy

Sekar Babu

திமுக கூட்டணில் அங்கீகாரம் இல்லாத கட்சிக்கு அதிக தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்த நிலையில், 2011-இல் தேமுதிக அதிமுக கூட்டணியில் இருந்தபோது 41 இடங்கள் ஒதுக்கப்பட்டன. அன்றும் அந்தக் கட்சிக்குத் தேர்தல் அங்கீகாரம் இல்லை என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நேற்று (மார்ச் 25) அதிமுக – பாஜக கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிகளின் விபரங்களை அறிவித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலில் வழிபாடு நடத்தினார். பின்னர் அதே தொகுதியில் தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார்.

ADVERTISEMENT

அப்போது பேசிய அவர், “திமுக கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் எவ்வளவோ போராடியும், கடந்த தேர்தலை விடக் குறைவான தொகுதிகளையே பெற்றுள்ளன. அங்கீகரிக்கப்பட்ட கட்சியான விசிகவும் போராடி 8 தொகுதிகளை மட்டுமே பெற்றுள்ளது. ஆனால், அங்கீகாரம் இல்லாத ஒரு கட்சிக்கு அதிக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன,” என தேமுதிகவை மறைமுகமாக விமர்சித்தார்.

இந்நிலையில் அமைச்சர் சேகர்பாபு இன்று (மார்ச் 26) சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “ஆடு நனைகிறதே என்று ஓநாய் கவலைப்பட்ட கதையாக, திமுக கூட்டணியில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளை விட அங்கீகாரம் இல்லாத கட்சிக்குக் கூடுதல் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். நான் அவரை வரலாற்றைத் திரும்பிப் பார்க்கச் சொல்கிறேன்.

ADVERTISEMENT

2011-இல் தேமுதிக அதிமுக கூட்டணியில் இருந்தபோது 41 இடங்கள் ஒதுக்கப்பட்டன. அன்று அந்தக் கட்சிக்குத் தேர்தல் அங்கீகாரம் இல்லை. ஆனால், அதே கூட்டணியில் இருந்த சிபிஐ, சிபிஎம் போன்ற கட்சிகளுக்குத் தேர்தல் அங்கீகாரம் இருந்தது. அன்று அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளை விட, அங்கீகாரம் இல்லாத கட்சிக்குத்தான் கூடுதல் இடங்கள் ஒதுக்கப்பட்டன என்பதை அவர் நினைவில் கொள்ள வேண்டும்.”

இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share