“அங்கீகாரம் இல்லாத கட்சி” : தேமுதிகவை மறைமுகமாக சாடிய ஈபிஎஸ்

Published On:

| By Kavi

eps campaign

அங்கீகாரம் இல்லாத கட்சிக்கு அதிக இடங்களை கொடுத்துள்ளனர் என்று தேமுதிகவை விமர்சித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. மொத்தம் 5 முனை போட்டி நிலவும் நிலையில், அதிமுக தலைமையில் என்.டி.ஏ கூட்டணி அமைந்துள்ளது.

ADVERTISEMENT

இந்த கூட்டணியில் உள்ள பாஜக, பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (மார்ச் 25) வெளியிட்டார்.

தொடர்ந்து சென்னை, மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்த எடப்பாடி பழனிசாமி, அந்த தொகுதியில் பிரச்சாரத்தை தொடங்கினார்.

ADVERTISEMENT

அப்போது பாமக, பாஜக, அதிமுக தொண்டர்கள் அந்தந்த கட்சி கொடிகளை ஏந்தி, எடப்பாடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட மயிலாப்பூர் தொகுதியில் மக்கள் மத்தியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டிருக்கிறோம். ஓரிரு நாட்களில் அனைத்து தொகுதிகளுக்குமான பட்டியல் வெளியிடப்படும்.

ADVERTISEMENT

ஆனால் திமுகவில் என்ன நடக்கிறது. 20 நாட்களாக கூட்டணி அமைக்க போராடி கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு கட்சியும் பதறி கொண்டிருக்கிறது. போராடி , போராடி தொகுதிகளை பெற வேண்டிய சூழ்நிலை அந்த கூட்டணியில் இருக்கிறது.

அதிமுக அப்படியல்ல.. எங்கள் கூட்டணி கட்சித் தலைவர்கள் சுதந்திரமாக இருக்கிறார்கள். ஆனால் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் அடிமையாக இருந்துகொண்டிருக்கிறது. 10 ஆண்டுகாலமாக தொடர்ந்து திமுக கூட்டணியில் இருப்பதாகவும் கூட்டணிக் கட்சித் தலைவர்களும், முதல்வர் ஸ்டாலினும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆக, 10 ஆண்டு காலம் திமுகவுக்கு இவர்கள் அடிமையாக இருந்துகொண்டிருக்கிறார்கள். அடிமையாக இருந்ததால்தான் 2021 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட தொகுதிகளைக் காட்டிலும் இந்த முறை குறைவான தொகுதிகளை பெற்றுள்ளீர்கள்.

ஆக திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் எண்ணி பார்க்க வேண்டும். திமுக ஆட்சியை புகழ்ந்து பாட வேண்டும் என்று உங்களை பயன்படுத்தி கொண்டார்கள். ஆனால் தேர்தல் வருகிற போது உங்களுக்கு தகுந்த அந்தஸ்தை கொடுக்காத கட்சி திமுக.

கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள் போராடி பார்த்தார்கள். எவ்வளவோ முயற்சி செய்தார்கள். ஆனால் கடந்த தேர்தலில் போட்டியிட்ட தொகுதியை விட குறைவான தொகுதிகளைத்தான் பெற்றுள்ளார்கள்.

விசிகவும் போராடி 8 தொகுதிகளைத் தான் பெற்றுள்ளது. இது அங்கீகரிக்கப்பட்ட கட்சி.

ஆனால் அங்கீகாரம் இல்லாத கட்சிக்கு அதிகம் இடம் கொடுத்திருக்கிறார்கள். இதுதான் திமுக” என தேமுதிகவை மறைமுகமாக விமர்சித்தார்.

திமுகவை நம்பியவர்கள் நடுரோட்டில் தான் நிற்க வேண்டும் என்று கூறிய எடப்பாடி பழனிசாமி, அதிமுக கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு உரிய மரியாதை கொடுக்கப்படும்” என குறிப்பிட்டார்.

🔴LIVE: மயிலாப்பூரில் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் நேரலை

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share