சென்னை, பாரிமுனைப் பகுதியில் கள ஆய்வில் ஈடுபட்ட தவெக நிர்வாகிகள் மீது, ஆளும் கட்சியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட ரவுடிகள் அராஜகத் தாக்குதல் நடத்தியதாகவும், இது திமுகவின் தோல்வி பயத்தையே இது காட்டுகிறது என தவெக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், தவெகவினருக்கும் பொது மக்களுக்கும் தான் பிரச்சனை என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை அசோக் நகரில் இன்று (பிப்ரவரி 11) காலை அமைச்சர் சேகர் பாபு முதல்வர் படைப்பக பணிகளை ஆய்வு செய்தார். இதைத் தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது இடைக்கால பட்ஜெட் குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு, “எதிர்க்கட்சியினர் அரண்டு போகும் அளவிற்கு அறிவிப்புகள் நிறைய வெளியாகும்” என்றார்.
முதல்வர் பொய் சொல்வதாக எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்தது குறித்த கேள்விக்கு, “எடப்பாடி பழனிசாமி அரிச்சந்திரன் வீட்டிற்கு அடுத்த வீட்டில் குடியிருந்தவர். அவர் வாயில் இருந்து உண்மையைத் தவிர வேறு எதுவுமே வராது. பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமான் தான் எடப்பாடி பழனிசாமி. அவருடைய கட்சியிலிருந்து தற்போது வெளியேறியிருக்கும் கு.ப.கிருஷ்ணன், செங்கோட்டையன் போன்றவர்களிடம் கேட்டால் அவரது வண்டவாளம் தண்டவாளத்திற்கு வரும்” என்றார்.
ஆட்களை வைத்து அடித்ததாக தவெகவினரின் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, “பொதுமக்களுக்கும் தவெகவினருக்கும் தான் சண்டை. பொதுமக்கள் பாதிக்கப்பட்டு தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஆனால் நீங்கள் தவெகவினர் சொன்னதையே பதிவு செய்து வருகிறீர்கள். உண்மை நிலையை களத்திற்குச் சென்று விசாரியுங்கள். அதேபோல் பாதிக்கப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்கள் யார் என்பதை விசாரியுங்கள். முழுக்க முழுக்க பொதுமக்கள். இது பொதுமக்களுக்கும் அந்த கட்சியைச் சார்ந்தவர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல். எப்படி பனையூரில் பிரச்சனைகள், மோதல்கள் நடந்து கொண்டிருக்கிறதோ அதேபோன்ற ஒரு மோதல் இது. தீர விசாரித்து உண்மையை மக்களுக்கு தெரிவியுங்கள்” என்றார்.
தேர்தலில் சென்னை தொகுதிகளில் திமுகவிற்கான வெற்றி வாய்ப்பு குறித்த கேள்விக்கு, “சென்னையில் உள்ள 22 தொகுதிகளிலும் திமுக தான் ஜெயிக்கும் என நம்பிக்கை தெரிவித்தார். “செயிண்ட் ஜார்ஜ் கோட்டை எந்நாளும் எங்கள் முதல்வர் வசம் இருக்கும். அதை எந்த சக்தியாலும் தவிர்க்க முடியாது” என்று தெரிவித்தார்.
