காங்கிரஸில் கிரிஷ் சோடாங்கர் பேசுவது பற்றி கருத்து இல்லை. ராகுல் காந்தியும் எங்களுடைய தலைவர் ஸ்டாலினும் பேசுவது தான் முடிவு என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
தவெக எங்களுக்கு வெளிப்படையாக அழைப்பு விடுத்தது. கூட்டணி அமைக்கத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளது. அதாவது அவர்கள் எங்கள் பலத்தை அங்கீகரித்துள்ளனர். தற்போது நாங்கள் திமுக தலைமையுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என கிரிஷ் சோடங்கர் நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து இன்று (பிப்ரவரி 26) புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி, “காங்கிரஸில் கிரிஷ் சோடாங்கர் பேசுவது பற்றி எங்களுக்கு கருத்து இல்லை. ராகுல் காந்தியும் எங்களுடைய தலைவர் ஸ்டாலினும் பேசுவது தான் முடிவு. அதுதான் இறுதி.
அகில இந்தியாவிலேயே எந்த ஒரு கூட்டணிக்கட்சித் தலைவரும் இந்த அளவுக்கு தோழமை கட்சிகளை அனுசரித்து அரவணைத்துச் சென்றதாக ஒரு வரலாறு கிடையாது. அந்தப் புதிய வரலாற்றை கடந்த 10 ஆண்டுகாலமாக தமிழக அரசியல் வரலாற்றிலே உருவாக்கிக் கொண்டிருப்பவர் ஸ்டாலின்.
நிச்சயமாக அவர் எந்தக் காலத்திலும் எல்லோரையும் அரவணைத்துச் செல்லும் குணம் கொண்டவர். விட்டுக்கொடுப்பவர் கெட்டுப்போவதில்லை என்கிற பழமொழிக்கு ஏற்ப எந்தக் காலத்திலும் அவருக்குக் கெடுதல் வராது. திராவிட மாடல் ஆட்சி மீண்டும் தொடரும்.
புதிய புதிய கட்சிகள் தேர்தலுக்கு வருவதால் எங்களுக்கு இன்னும் பலமும் சக்தியும் அதிகரித்துள்ளது.
புதுசா கட்சி தொடங்கியவர்களை பற்றி எல்லாம் கவலையே இல்லை, அதெல்லாம் புதுக்கட்சி, அவங்களுக்குத் தேர்தல் வேலைகள் என்றால் என்ன என்பதையும் முதலில் பூத் கமிட்டி போட்டு கற்றுக் கொள்ளட்டும்
மேலும் கூட்டணி விமர்சனம் குறித்த கேள்விக்கு, “அறிவாலயத்துக்குப் பக்கத்தில் டீ குடிக்க வருபவர்களை எல்லாம் கூட்டணிக்குக் கூப்பிடும் அவசியம் எங்களுக்கு இல்லை.
ஆனால் அப்படிப் பேசியவர்களுடைய நிலைமை அப்படி இருக்கலாம். ஏன் என்றால் அவர்கள்தான் ஈ ஓட்டிக்கொண்டு இருக்கிறார்கள, யாரு வருவார்கள் என்று கதவைத் திறந்து வைத்துக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் எங்களைப் பொறுத்தவரைக்கும் நாங்கள் யாரும் டீ குடிக்க வருபவர்களை கூப்பிட்டு வச்சு பேச வேண்டிய அவசியம் திமுக கூட்டணிக்கு இல்லை என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றாகத் தெரியும்.
இன்னும் தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. அதனால் யார் வேண்டுமானாலும் திமுக கூட்டணிக்கு வரலாம்.” என தெரிவித்தார்.
