தமிழகத்தில் திமுக – தவெக இடையேதான் போட்டி என எந்த மேடையில் பேசி இருக்கிறோம் என அமைச்சர் கே.என். நேரு கேள்வி எழுப்பி உள்ளார்.
கோவை காந்திபுரம் பகுதியில் செம்மொழிப் பூங்கா கட்டுமான பணிகள் இறுதி நிறைவடையும் நிலையில் உள்ளது. இந்நிலையில் இன்று மாலை (நவம்பர் 15) செம்மொழி பூங்கா பணிகளை நகராட்சி துறை அமைச்சர் கே.என் நேரு , முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். ஆய்விற்கு பின்னர் நகராட்சி துறை அமைச்சர் கே. என்.நேரு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “செம்மொழிப் பூங்காவை திறந்து வைக்க இந்த மாத இறுதியில் முதல்வர் வர இருக்கிறார் என தெரிவித்தார்.
செம்மொழி பூங்கா பணிகளை நேரில் பார்வையிட்டு பணிகளை விரைவாக முடிக்க அறிவுறுத்தி உள்ளோம். ஒரு வார காலத்திற்குள் பணிகள் முடியும் . இன்னும் இரண்டு முதல் மூன்று வேலைகள் மட்டும் தான் உள்ளது. வேலைகள் அனைத்தும் முடிந்து இந்த மாத இறுதிக்குள் பூங்கா பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என தெரிவித்தார்.
அப்போது செய்தியாளர்கள் துப்புரவு பணியாளர்கள் பணி நிரந்தரம் குறித்த எழுப்பினர். அதற்கு பதில் அளிக்காமல் அடுத்த கேள்வியை கேளுங்கள் என தெரிவித்தார். இருப்பினும் துப்புரவு பணியாளர்கள் குறித்து செய்தியாளர்கள் மீண்டும் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அமைச்சர், இன்று காலை கூட அவர்களுக்காக ஆறு திட்டங்களை முதல்வர் அறிவித்து இருக்கிறார். ரூ.17 லட்சம் செலவில் வீடுகள், 3 வேளை சாப்பாடு, குழந்தைகள் படிப்பிற்கு மானியம் , மருத்துவ வசதி என அனைத்தும் கொடுத்து இருக்கிறது. அவர்களை கவனிக்காமல் இல்லை, பல இடங்களில் தனியார் மயப்படுத்தி இருக்கின்றனர். இது இந்திய அளவில் எடுக்கப்பட வேண்டிய முடிவு என்றார்.
பீகார் வெற்றி தமிழகத்தில் எதிரொலிக்கும் என பாஜக கூறுகின்றனரே என்ற கேள்விக்கு, பாஜக வேறு என்ன சொல்வார்கள்? உண்மையில் தேர்தலில் நாங்கள் தான் ஜெயிப்போம். அதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என தெரிவித்தார்.
அதேபோல் தமிழகத்தில் திமுக, தவெக இடையேதான் போட்டி என்பதை திமுக மேடைகளிலேயே உறுதிபடுத்துவதாக தவெக தலைவர் விஜய் பேசி இருப்பது குறித்த கேள்விக்கு, எந்த திமுக மேடையில் உறுதிபடுத்தி பேசி இருக்கிறோம் என கேள்வி எழுப்பினார். எந்த மேடையில் உறுதிப்படுத்தினோம் என்பதை அவரிடமே கேளுங்கள், எங்களிடம் ஏன் கேட்கின்றீர்கள் என்றார்.
அமைச்சர் கே.என்.நேருவின் குடும்பத்தினர் திருப்பதிக்கு 44 லட்ச ரூபாய் நன்கொடை கொடுத்தது குறித்த கேள்விக்கு, என் குடும்ப உறவினர்கள் கொடுத்தார்கள், எனக்கு தெரிந்து இருந்தால் அனுமதித்து இருக்க மாட்டேன் என்றார்.
