தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் சீனியர் அமைச்சர்களில் ஒருவராக ஐ.பெரியசாமி உள்ளார்.
கடந்த 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் ஆத்தூர் தொகுதியில் வெற்றி பெற்றார்.
திமுக துணை பொதுச் செயலாளராகவும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராகவும் உள்ள ஐ.பெரியசாமிக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அவரது குடும்பத்தினர் கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள தனியார் மருத்துமனையில் அனுமதித்துள்ளனர்.
வயிறு தொடர்பான பிரச்சனைகள் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதுவரை மருத்துவமனை சார்பில் அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி வயிறுவலி, ஜீரண கோளாறு, நெஞ்சு எரிச்சல் காரணமாக மதுரை மீனாட்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.