காங்கிரஸ் கட்சி 117 தொகுதிகளையும் ஆட்சி அதிகாரத்தில் பங்கும் கேட்பதால் திமுக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
நீலகிரியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, நெல்லையில் காங்கிரஸ் கட்சியின் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோலங்கர் பேசுகிறார்.. அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் திமுக பாதிக்கு பாதி சீட்டு தர வேண்டும் என்று.. மொத்தம் 234 தொகுதிகள் உள்ளன.. இதில் காங்கிரஸ் கட்சி 117 தொகுதிகளைக் கேட்கிறது. அதோட ஆட்சியில் பங்கு வேண்டும் என கேட்கிறார்.
காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ, அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெறாது; அப்படி வெற்றி பெற்றால் எங்களுக்கும் ஆட்சியில் பங்கு வேண்டும் என பேசியிருக்கிறார். ஆக, திமுக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுவிட்டது.. ஆக, ஆட்சியில் பங்கு வேண்டும் என்று கோஷம் எழுப்பப்பட்டுவிட்டது.திமுக கூடாரம் காலியாகப் போகிறது.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் கே.எஸ். அழகிரி 4 நாட்களுக்கு முன்னர கொடுத்த பேட்டியில், 60 ஆண்டுகாலமாக ஏதாவது ஒரு கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி வைக்க, சாறை அவர்கள் குடிக்க- சக்கையை மட்டும் நாங்கள் பார்க்க்கும் சூழ்நிலை இருக்கிறது; அரசாங்கத்திலும் ஆட்சியிலும் பங்கு பெறுவோம் என்பது காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என பேசியிருக்கிறார். காங்கிரஸ் கட்சிக்கு இப்போதாவது ஞானோதயம் வந்துள்ளது. இதனால் திமுக- காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் ஆரம்பாகிவிட்டது என்பது தெளிவாக தெரிகிறது என்றார்.
