”உச்ச நீதிமன்றத்தில் இறுதி தீர்ப்பு வரும் வரை புதிய வக்ஃப் திருத்தச் சட்டத்தின் படி வக்ஃப் வாரியம் திருத்தி அமைக்கப்பட மாட்டாது” என அமைச்சர் நாசர் உறுதியளித்துள்ளார்.
மத்திய அரசு கடந்த ஏப்ரல் மாதம் கொண்டு வந்த புதிய வக்ஃப் திருத்தச் சட்டத்தை எதிர்த்து திமுக உட்பட பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தன. அந்த வழக்கில் கடந்த 15-ம் தேதி உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.
அதில், வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு முழுவதுமாக தடை விதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், இந்த சட்டத்தின் சில பிரிவுகளுக்கு மட்டும் தடைவிதித்தும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
குறிப்பாக, வக்ஃப் திருத்தச் சட்டம் 2025 -இல், ஒருவர் வக்ஃப் வாரியத்திற்கு சொத்தை நன்கொடையளிக்க ஐந்து ஆண்டுகள் இஸ்லாம் மதத்தை பின்பற்றி இருக்க வேண்டும் என்ற விதியை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. ஒருவர் இஸ்லாம் மதத்தை பின்பற்றுபவரா என்பதை தீர்மானிப்பதற்கான விதிகள் வகுக்கப்படும் வரை இந்த திருத்தம் நிறுத்தி வைக்கப்படுவதாகவும் உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்திருந்தது.
மேலும் வக்ஃப் என அறிவிக்கப்பட்ட சொத்து அரசாங்க சொத்தா என்பதை தீர்மானித்து உத்தரவுகளை பிறப்பிக்கும் அதிகாரத்தை மாவட்ட ஆட்சியருக்கு வழங்கும் முடிவும் நிறுத்தி வைத்து உத்தரவிட்டனர்.
இந்த நிலையில் தான் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் நாசர் இஸ்லாமிய மக்களுக்கு நம்பிக்கையளிக்கும் விதமாக இன்று அறிக்கை வெளியிட்டார்.
அதில் “1995 ஆம் ஆண்டு வக்ஃப் சட்டத்தினை ஒன்றிய அரசு திருத்தம் செய்து, ஒருங்கிணைந்த வக்ஃப் மேலாண்மை, அதிகாரமளித்தல், செயல்திறன் மற்றும் மேம்பாட்டுச் சட்டம், 1995-னை கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி நடைமுறைப்படுத்தியது.
இச்சட்டத்திற்கு திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து, உச்சநீதிமன்றத்திலும் வழக்குத் தொடுத்தது. இதே போல் பல்வேறு தரப்பினரும் இச்சட்டத்தினை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். இவ்வாறு தொடுக்கப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த 15ஆம் தேதி இடைக்கால தீர்ப்பு வழங்கியுள்ளது.
தற்போது, மேற்கண்ட வக்ஃப் சட்ட திருத்தம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், இவ்வழக்கில் இறுதி தீர்ப்பு வரும் வரை. ஒன்றிய அரசு அவசர அவசரமாக நடைமுறைப்படுத்திய புதிய வக்ஃப் திருத்தச் சட்டத்தின் படி வக்ஃப் வாரியம் திருத்தி அமைக்கப்பட மாட்டாது” என நாசர் உறுதியாக தெரிவித்துள்ளார்.