புத்தாண்டு பிறந்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில், தொழில்நுட்ப உலகில் ஒரு செய்தி காட்டுத்தீ போலப் பரவி ஊழியர்களை வயிற்றைக் கலக்கச் செய்தது. மென்பொருள் ஜாம்பவானான மைக்ரோசாப்ட் (Microsoft) நிறுவனம், ஜனவரி மாதத்தில் மிகப்பெரிய ஆட்குறைப்பு நடவடிக்கையை எடுக்கப்போவதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால், தற்போது அந்தத் தகவலுக்கு மைக்ரோசாப்ட் நிறுவனம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
பரவிய வதந்தி என்ன? கடந்த சில நாட்களாகச் சமூக வலைதளங்கள் மற்றும் சில இணையதளங்களில் ஒரு செய்தி வைரலானது. அதன்படி, “மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது செலவுகளைக் குறைப்பதற்காக, ஜனவரி 2026-ல் சுமார் 11,000 முதல் 22,000 ஊழியர்களை ஒரே நேரத்தில் பணிநீக்கம் (Mass Layoffs) செய்யத் திட்டமிட்டுள்ளது” என்று கூறப்பட்டது. ஏற்கனவே உலகப் பொருளாதாரச் சூழல் மந்தமாக இருக்கும் நிலையில், இந்தச் செய்தி ஐடி ஊழியர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.
மைக்ரோசாப்ட் அளித்த விளக்கம்: ஊழியர்களின் பதற்றத்தைத் தணிக்க, மைக்ரோசாப்ட் நிறுவனம் உடனடியாகக் களத்தில் இறங்கியது. இந்த வதந்திகள் குறித்துப் பதிலளித்துள்ள மைக்ரோசாப்ட் செய்தித் தொடர்பாளர், “வெளியான தகவல்கள் அனைத்தும் 100 சதவீதம் தவறானவை (100 percent wrong)” என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
- “நிர்வாக மறுசீரமைப்பு அவ்வப்போது நடக்கும் சாதாரண விஷயம் என்றாலும், வதந்திகளில் கூறப்படுவது போலப் பல்லாயிரக்கணக்கானோரைப் பணிநீக்கம் செய்யும் திட்டம் எதுவும் நிறுவனத்திடம் இல்லை” என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
ஏன் இந்த அச்சம்? பொதுவாகவே ஜனவரி மாதம் என்பது டெக் நிறுவனங்களுக்கு முக்கியமான காலம். கடந்த காலங்களில் கூகுள், அமேசான், மெட்டா போன்ற நிறுவனங்கள் ஆண்டின் தொடக்கத்தில் ஆட்குறைப்பு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன. மேலும், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் பல வேலைகள் தானியங்கிமயமாகி வருகின்றன. மைக்ரோசாப்ட் நிறுவனமும் AI துறையில் அதிக முதலீடு செய்து வருவதால், பழைய வேலைவாய்ப்புகள் பறிபோகுமோ என்ற பயம் ஊழியர்கள் மத்தியில் உள்ளது. அந்த பயமே இந்த வதந்தி இவ்வளவு வேகமாகப் பரவக் காரணமாக அமைந்தது.
நிம்மதிப் பெருமூச்சு: மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இந்தத் தெளிவான மறுப்புச் செய்தி, அந்நிறுவனத்தில் பணிபுரியும் லட்சக்கணக்கான ஊழியர்களுக்குப் பெரிய நிம்மதியை அளித்துள்ளது. “வேலை போகுமோ” என்ற பயத்தில் இருந்தவர்களுக்கு, “வேலைக்கு ஆபத்து இல்லை” என்ற செய்தி இனிப்பான செய்தியாக அமைந்துள்ளது.
சமூக வலைதளங்களில் வரும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களை நம்பிப் பீதியடைய வேண்டாம் என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர். மைக்ரோசாப்ட் ஊழியர்களுக்கு ‘ஆல் இஸ் வெல்’!
