சட்ட கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்துள்ள ஓராண்டு சட்ட முதுகலை பட்டதாரிகளின் விண்ணப்பத்தை நிராகரிக்கக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. MHC allows PG graduate
தமிழகத்தில் உள்ள அரசு சட்டக்கல்லூரிகளில் காலியாக உள்ள இணை பேராசிரியர், உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு மே 11-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்பம் கடந்த மார்ச் 3-ஆம் தேதியோடு முடிவடைய இருந்த நிலையில், மார்ச் 18-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும், உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஓராண்டு முதுகலை சட்டப்படிப்பை தகுதியாக கருத முடியாது, இரண்டு ஆண்டுகள் முதுகலை சட்டப்படிப்பை நிறைவு செய்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பாணையில் குறிப்பிட்டிருந்தது.
இதனை எதிர்த்து தேர்வர்கள் ஆண்டாள், சையது அன்சாரி உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பாக நேற்று (மார்ச் 5) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர்கள் ஜெய்பரத், கவிதா அகியோர் ஆஜராகி, “அரசு சட்டக்கல்லூரி உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு ஓராண்டு முதுகலை சட்டப்படிப்பை முடித்தவர்களையும் விண்ணப்பிக்க அனுமதிக்க வேண்டும்” என்று வாதிட்டனர்.
இதனையடுத்து நீதிபதி கார்த்திகேயன், “ஓராண்டு சட்ட முதுகலை படிப்பில் பட்டம் பெற்றுள்ள மனுதாரர்களிடமும் இப்பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பங்களை பெறலாம். ஒருவேளை அவர்கள் ஏற்கனவே விண்ணப்பித்திருந்தால் விண்ணப்பங்களை நிராகரிக்கக்கூடாது” என்று இடைக்கால உத்தரவு பிறப்பித்தார்.
மேலும், இதுதொடர்பாக தமிழக அரசின் உயர்கல்வித்துறை, சட்டத்துறை, ஆசிரியர் தேர்வு வாரியம் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை மார்ச் 13-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். MHC allows PG graduate