மனித வாழ்வில் நாம் ஒவ்வொருவரும் பல்வேறு நெருக்கடிகளையும், சவால்களையும், எதிர்கொள்ளும் போது எல்லாம் சரியாகிவிடும் என நம்மை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த சுற்றத்தார், நண்பர்கள் என எத்தனை பேர் இருந்தாலும் நமக்கான நம்பிக்கையை தருவது நமது மனம்தான்.
ஆனால் அந்த மனநலமே கேள்விக்குறியானால் என்ன சிக்கல் வரும் என்பதற்கு உதாரணம்தான் சாலை ஓரங்களில் தான் யார் என்பதையே முழுமையாக உணர முடியாமல், குடும்பங்களால் புறக்கணிப்புக்கு உள்ளாகி பாதுகாப்பு இல்லாமல் சமூகத்தில் போராடிக் கொண்டிருக்கும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள்.
ஆனால் அவர்களுக்கும் முறையான மருத்துவ சிகிச்சைகளும், உரிய பராமரிப்பும், தக்க ஆலோசனைகளும் இருந்தால் இந்த பூமியில் இயல்பான ஒரு வாழ்க்கையை வாழ முடியும் என்றால் நம்ப முடிகிறதா? அதற்கு உதாரணமாக மனநோய் பாதிப்பிலிருந்து மீண்ட மனிதர்களையும், அவர்களை இயல்பு வாழ்க்கைக்கு கொண்டு வர உதவும் தமிழக அரசின் அற்புதமான ‘மீண்டும் இல்லம்’ திட்டம் குறித்தும் இங்கு பார்க்கலாம்.

மீண்டும் இல்லம் திட்டம்!
மருத்துவ வளர்ச்சி, பொருளாதார தன்னிறைவு, காப்பீடு போன்றவற்றால் ஒரு நபர் நோயிலிருந்து மீண்டு வர குடும்பத்தினர் எடுக்கும் முயற்சிகள் அளப்பரியது. ஆனால், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் விசயத்தில் எல்லா குடும்பங்களும் அப்படி நடந்து கொள்வதில்லை. மனநலம் பாதிக்கப்பட்டால், அவர் மீள்வது கடினம் என்ற எண்ணத்தால் சிறிய மருத்துவ முயற்சிகள் கூட எடுக்காமல் அப்படியே தெருவில் கைவிடப்படுகிறார்கள். உரிய சிகிச்சை அளித்தால் மனநல பிரச்சனைகளிலிருந்து கடந்து வர முடியும் என நம்பிக்கை அளித்து, 8 பெண்களை தொழில் முனைவோர்களாக மாற்றி இருக்கிறது, தமிழக அரசின் ‘மீண்டும் இல்லம்’ திட்டம்.
இந்த திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊமபாளையம் பகுதியில் ஜெயா, ஹம்ஸா, கோமதி , நிஷா என்ற நான்கு பெண்கள் ஆவின் பாலகம் ஒன்றை நடத்தி வருகின்றனர்.

“மீண்டும் வீடு” திட்டம் தந்த நம்பிக்கை குறித்து ஹெல்பிங் ஹார்ட்ஸ் தன்னார்வ அமைப்பின் நிறுவனர் கணேஷ் மின்னம்பலத்திடம் கூறுகையில், சாலைகளில் சுற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ சிகிச்சை மற்றும் அக்கறையான அணுகுமுறையை வழங்கும் போது விரைவில் குணமடைந்து விடுகின்றனர். ஆனால் குணமடைந்தவர்களை அவர்களின் குடும்பங்களை கண்டறிந்து சேர்க்க முயற்சிக்கையில் பல சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது. சில குடும்பங்களில் அவர்களை சேர்த்துக் கொண்டாலும் நிறைய குடும்பங்களில் அவர்களை ஏற்க மறுக்கின்றனர்.
தொழில் முனைவோர்
குணமான பின்பும் குடும்பங்கள் ஏற்க மறுக்கும் நபர்களுக்காக தமிழக அரசு “மீண்டும் இல்லம்” என்ற திட்டத்தை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் முதல்கட்டமாக கோவை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்திற்கு தலா 2 வீடுகளுக்கு ரூ.10 லட்சம் நிதி கடந்தாண்டு ஒதுக்கப்பட்டுள்ளது. கோவையில் மனநல பாதிப்பு ஏற்பட்டு பூரண குணமான பின்பும் வீடுகளுக்கு செல்ல முடியாத 8 பெண்களுக்கு ஆவின் பாலகம் அமைத்து தந்துள்ளோம்.
குடும்பங்களாக வாழும் வாய்ப்பு!
மீண்டவர்கள் சராசரியான வாழ்க்கை வாழ்வதற்கு வீட்டு வாடகை, அத்தியாவசிய பொருட்கள் அரசு நிதியில் வழங்கப்பட்டுள்ளது. இவர்களாலும் சராசரி வாழ்க்கை வாழ முடியும் என்பதை நிரூபிக்கும் வகையில் நான்கு, நான்கு பேராக இரண்டு குடும்பங்களாக வாழ்ந்து வருகின்றனர். மீண்டும் இல்லம் திட்டத்தில் பொதுவாக வீடு உணவுப்பொருட்கள், வழங்கப்படுகிறது. ஆனால் கோவை மாவட்டத்தில் முன்மாதிரியாக அவர்களுக்கு ஆவின் பாலகம் போன்ற தொழில் வாய்ப்பும் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது” என்றார்.

இது குறித்து மன நல ஆலோசகர் அபிசா மின்னம்பலத்திடம் கூறுகையில், “மனநோய் நிரந்தரமான நோயல்ல. மீட்கப்பட்டு மறுவாழ்வளிக்கப்பட்ட பெண்கள் சீசோபெர்னியா ( மனச்சிதைவு), பைபோலார் ( இருமுனைய சிதைவு) ஓசிடி (பெரு விருப்ப கட்டாய மனப்பிறழ்வு) ,சொமாட்டாபெர்ம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள். இவர்கள் சிகிச்சைக்கு பின் குணமாகிவிட்டனர்.
முதல்முறை இவர்கள் சிகிச்சைக்கு வந்தபோது அவர்களை பற்றியே அவர்களுக்கு தெரியவில்லை. சுமார் இரண்டு ஆண்டுகள் தீவிர சிகிச்சைக்கு பின் தான் அவர்களை பற்றியும், அவர்கள் குடும்பத்தை பற்றியும் தெரிந்து கொள்ள முடிந்தது.
சாலைகளில் மீட்கப்படும் மனநோயாளிகளில் பெரும்பாலானவர்களுக்கு சீசோபெர்னியா (மனச்சிதைவு) பாதிப்பு உள்ளது. காதுகளில் சத்தம் கேட்டுக்கொண்டே இருப்பது, இல்லாத ஒன்றை இருப்பது போல பார்ப்பது இதுபோன்ற பாதிப்புகள் அவர்களிடம் காணப்பட்டது. சொமாட்டாபெர்ம் பாதிப்பில் இருந்தவர்களுக்கு உடலில் எந்த பிரச்சனை இல்லையெனிலும் மருத்துவரை பார்க்க வேண்டும், மருந்துகள் வாங்க வேண்டும், ஊசி செலுத்த வேண்டும் போன்ற எண்ணங்கள் இருக்கும். இவர்களை தொடர் சிகிச்சைகள் மூலம் குணப்படுத்த முடியும். குரோனிக் இல்னெஸ் பாதிப்புகளை நீண்ட கால பயிற்சிகள் மற்றும் சிகிச்சைகள் மூலம் குணப்படுத்தலாம். குணமடைந்த பின் நகை தயாரிப்பு, தையல் பயிற்சி, கூடை பின்னுதல் போன்ற திறன் வளர்ப்பு பயிற்சிகள் வழங்கப்படுகிறது. இதன் மூலம் சமூக ரீதியாகவும், பொருளாதாரத்திலும் அவர்கள் சுய சார்போடு விளங்க நம்பிக்கை அளிக்கப்படுகிறது.
அவர்களும் சராசரி வாழ்க்கையை சிரமமின்றி வாழலாம் என்பதற்கு ஆவின் பாலகம் ஒரு புது நம்பிக்கையை அளித்துள்ளது. முதலில் குணமடைந்த பெண்கள் தங்களால் தங்களையே பார்த்து கொள்ள முடியாது என்ற எண்ணத்தில் இருந்தனர். தொடர்ச்சியான நம்பிக்கைகள் மற்றும் வழிகாட்டுதல்களால் இன்று அவர்கள் தொழில் முனைவோராகி தங்கள் வாழ்க்கையை சிறப்பாக எதிர்கொள்கின்றனர். மனநோய் பாதிப்பில் இருந்து மீள முடியாது என்ற எண்ணம் நம் சமூகத்தில் உள்ளதால் குடும்பங்கள் ஏற்றுக்கொள்ளாத இந்த நான்கு பெண்களும் ஒரே குடும்பமாகி உடன்பிறந்த சகோதரிகளை போல ஒருவரையொருவர் நன்றாக பார்த்து கொள்கின்றனர்.
மனநோய் பாதிப்புடன் மீட்கப்பட்டு இன்று தொழில்முனைவோராய் பரிணமித்துள்ள ஜெயா மின்னம்பலத்திடம் கூறுகையில், நான் பிஎஸ்சி படித்துள்ளேன். எனது வீட்டில் அப்பா, அண்ணன் மற்றும் தங்கை உள்ளனர். நான் மன நல பாதிப்புக்கு உள்ளான நாட்களில் வீட்டில் இருந்து தனியே வந்தேன். என்னை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சையளித்தனர். 2 வருட சிகிச்சைக்கு பின் தற்போது குணமாகி கடையில் வேலை மற்றும் கணக்கு வழக்குகளை கவனித்து வருகிறேன். குணமான பின்பு வீட்டில் போய் பார்த்தபோது அவர்கள் அங்கு இல்லை. என்னைபோல் மீட்கப்பட்டு குணமடைந்தவர்களோடு ஒரே குடும்பமாக வாழ்ந்து வருகிறேன்” என மகிழ்ச்சி பொங்க தெரிவித்தார்.

அதேபோன்று ஊமபாளையம் கிளையை வழி நடத்தும் வி. கோமதி மின்னம்பலத்திடம் கூறுகையில்,
எனது சொந்த ஊர் கோவை. எனது கணவர், 6 வயது மகள் மற்றும் 10 மாத மகன் வசித்து வந்தேன். குழந்தைகளை மாமியார் பொறுப்பில் விட்டு விட்டு வேலைக்கு சென்று வந்தேன். மாமியார் வீட்டில் இருந்த என் மகள் மீது எனது கணவரின் அண்ணனின் மனைவி கொதிக்கும் எண்ணெயை ஊற்றிவிட்டார். இதனால் அவரை நான் அடித்து விட்டேன். பின்னர் என்னை கருணை இல்லத்தில் சேர்த்தனர். எனது அம்மாவும் அங்குதான் இருந்தார். அம்மா இறந்த பின் எனது தங்கை எனக்கு வீடு எடுத்து கொடுத்தார். நான் வேலைக்கு சென்று அவருக்கு பணம் தந்து வந்தேன். திடீரென வீட்டை காலி செய்ய சொன்னார்கள், இரண்டு நாளில் வருகிறேன் என்று சொன்ன தங்கையும் வரவில்லை. இதனால் ரோட்டிற்கு வந்து அம்மா வேண்டும், அப்பா வேண்டும் என அழுதபடி சுற்றிக்கொண்டிருந்தேன். 6 மாதத்திற்கு பிறகு நான் மீட்கப்பட்டு காப்பகத்திற்கு கொண்டு வரப்பட்டேன்.
எனக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஒரு வாரம் நன்றாக தூங்க வைக்கப்பட்டேன். பின்பு அங்கு சமையல் வேலைகளில் உதவியாக பணி செய்தேன். பின்னர் தையல் பயிற்சி அளித்தனர். காப்பகத்தில் இருந்து நான் இந்த வீட்டிற்கு அழைத்து வரப்பட்டேன். இங்கு நாங்கள் நான்கு பேரும் ஒற்றுமையாக இருக்கிறோம். திலகா மேடம் தான் டீ தயாரிக்க கற்றுகொடுத்தார். தற்போது இந்த வேலையில் இருப்பதால் மற்றவர்கள் என்னை மரியாதையாக பார்க்கின்றனர். ஆவின் பாலகத்தில் தேநீர், பிஸ்கெட் நன்றாக விற்பனையாகிறது. நல்ல தரமாக பொருட்களை வழங்குகிறோம். தினசரி ரூ.1000 வருமானமாக கிடைக்கிறது”என வாழ்வின் மீதான புது நம்பிக்கையோடு புன்னகைக்கிறார்.
சமூகத்தில் வெறும் புறக்கணிப்புகளை மட்டுமே பார்த்த மனிதர்கள் ஒன்றிணைந்து குடும்பமாக வாழ்வதும், தொழில் முனைவோராக பரிணமித்து இருப்பதும் புது நம்பிக்கையை கொடுக்கும் விதமாக உள்ளது.