ராஜ்யசபா சீட்.. தனிச் சின்னத்தில் போட்டி.. திமுகவுடன் பேசியது என்ன? மதிமுக விளக்கம்

Published On:

| By Mathi

MDMK DMK Tallks

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தனித் சின்னத்தில் போட்டியிட இருப்பதாகவும் மதிமுகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்க வேண்டும் என்றும் திமுகவின் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை குழுவிடம் கோரிக்கை வைத்துள்ளதாக மதிமுக தெரிவித்துள்ளது.

மதிமுகவின் ஆடிட்டர் அர்ஜூனராஜ் (அவைத் தலைவர்), மு.செந்திலதிபன் (பொருளாளர்), சு.ஜீவன் (உயர்நிலைக் குழு உறுப்பினர்), வி.சேஷன் (தேர்தல் பணிச் செயலாளர்) ஆகியோர் அடங்கிய குழு சென்னை அண்ணா அறிவாலயத்தில் டிஆர் பாலு தலைமையிலான திமுகவின் தொகுதிப் பங்கீட்டு குழுவுடன் இன்று பிப்ரவரி 23-ந் தேதி பேச்சுவார்த்தை நடத்தியது.

ADVERTISEMENT

இந்தப் பேச்சுவார்த்தை குறித்து மதிமுக அவைத் தலைவர் ஆடிட்டர் அர்ஜூனராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இன்றைய பேச்சுவார்த்தை மிகவும் சுமூகமாக நடைபெற்றது. எங்களுடைய வேண்டுகோள், கோரிக்கைகளை திமுக குழுவிடம் சமர்ப்பித்துள்ளோம். இன்னும் ஓரிரு நாட்களில் மீண்டும் அவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை முடிவுகளை உங்களுக்கு தெரிவிக்கிறோம். சொந்தம் எப்போதும் தொடர் கதைதான்.. அது முடிவு இல்லாதது. அதனால் தொடரும்.

தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை முடிந்த பிறகு உங்களுக்குத் தெரிவிக்கிறோம். நாங்கள் எத்தனை தொகுதிகள் கேட்டோம் என்பதை பின்னர் தெரிவிப்போம். கடந்த முறையை விட கூடுதலான தொகுதிகள் கேட்டுள்ளோம்.
திமுகவிடம் ராஜ்யசபா சீட் கேட்டுள்ளோம்.

ADVERTISEMENT

திமுக குழுவிடம் எந்தெந்த தொகுதிகள் என பட்டியல் எதுவும் தரவில்லை.

முஸ்லிம் லீக் கட்சியினரைக் கேட்டது போல எங்களை தொகுதிகளைக் குறைத்து கொள்ளுங்கள் என திமுக குழு சொல்லவில்லை. அந்த மாதிரியான பேச்சு வரவே இல்லை.

ADVERTISEMENT

இத்தேர்தலில் மதிமுக தனி சின்னத்தில்தான் போட்டியிடும் என தெரிவித்துள்ளோம். இவ்வாறு ஆடிட்டர் அர்ஜூனராஜ் தெரிவித்தார்.

2021-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் மதிமுகவுக்கு
மதுராந்தகம்
சாத்தூர்
பல்லடம்
மதுரை தெற்கு
வாசுதேவநல்லூர்
அரியலூர்

ஆகிய 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இந்த 6 தொகுதிகளிலும் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டியிட்டது. இத்தேர்தலில் மதிமுக 4-ல் வெற்றி பெற்றது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share