Z Fims சார்பில், C புதுகை மாரிஸா எழுதி இயக்கி தயாரிக்க, பிளாக்பாண்டி, செண்ட்ராயன், வடிவுக்கரசி, ஷகீலா, ஆகியோர் நடிப்பில், ஹாரர் காமெடியாக உருவாகியுள்ள படம் “மாஸ்க்”.
2017-ல் பதிவு செய்து தயாரித்த தனது படத்தின் டைட்டிலை தனக்கு தெரிவிக்காமல், தற்போது வெற்றிமாறன் வழங்கும் படத்திற்கு கொடுத்துவிட்டதாக இயக்குநர் மாரிஸா குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து மாரிஸா கூறுகையில், “2017-ம் ஆண்டு எங்கள் படத்தை துவக்கியபோது, ஜாக்குவார் தங்கம் தலைவராக இருக்கும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ‘மாஸ்க்’ எனும் டைட்டிலை முறையாக பதிவு செய்தோம். படம் துவங்க கால தாமதமானதால், பட டைட்டிலுக்கான புதுப்பித்தல் தொகையையும் செலுத்தி வந்தோம்.
கொரோனா காலகட்டத்தில் எதுவும் இயங்காததால் அந்த நேரத்தில் பணம் கட்டவில்லை. கொரோனா முடிந்த பிறகு புதுப்பித்தலுக்கான மொத்த தொகையையும் செலுத்த சென்றோம். அப்போது ஜாக்குவார் தங்கம் “படத்தை முடித்துவிட்டு வாருங்கள். டைட்டில் உங்களுக்குத்தான்…” என்று உறுதி கூறினார்.
முன்னதாக இயக்குநர் ஆதிராஜன் ‘மாஸ்க்’ என்ற டைட்டிலில் படத்தை துவக்க அப்போது ஜாக்குவார் தங்கத்திடம் முறையிட்டேன். “டைட்டில் உங்களுடையதுதான். யாருக்கும் NOC தரவில்லை” என்று உறுதியளித்தார். வெற்றிமாறன் தயாரிப்பில் மாஸ்க் படம் உருவாக்கப்படுவதாக தகவல் வந்தபோதே உடனே மீண்டும் முறையிட்டேன். ஆனால், அப்போதும் “டைட்டில் உங்களுடையதுதான். யாருக்கும் NOC தரவில்லை” என்று உறுதி அளித்தார்.
தற்போது வெளியீட்டுத் தேதி குறிப்பிட்டு போஸ்டர் வந்த பிறகு அவரிடம் முறையிட்ட போது, எந்த பதிலும் இல்லை. அவரை நேரில் சந்தித்து கேட்டபோது “நான் மாஸ்க் குழுவினரிடம் பேசி உனக்கு இழப்பீடு வாங்கி தருகிறேன்” என்றார். பின் நான்கு நாட்கள் அலையவிட்ட பிறகு, மீண்டும் அவரிடம் கேட்டபோது, “இப்ப யார் வேண்டுமானாலும், எந்த டைட்டில் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். அதை ஒன்றும் செய்ய முடியாது..” என்று பதிலளித்தார். நான் மீண்டும், மீண்டும் கேட்ட பிறகு “மேனேஜர் எனக்கு தெரியாமல் டைட்டில் தந்துவிட்டார்” என்றார். இது எப்படி நடந்தது..? இது குற்றம்தானே.?
2017ல் -இருந்து ‘மாஸ்க்’ படத்தை உயிரைக் கொடுத்து உருவாக்கி வரும் எனக்கு இந்த பதில் எனக்கு பெருத்த ஏமாற்றத்தை தந்தது. தயாரிப்பாளர் சங்கம் ஒப்புதல் கடிதம் இல்லாமல் எந்த படமும் சென்சார் செய்ய முடியாது என்ற நிலையில், எப்படி அவர்கள் டைட்டில் வைக்க முடியும்..? நான் ‘ஜனநாயகன்’ டைட்டில் வைக்க முடியுமா..? அதை நான் சென்சார் செய்தால், இவர்கள் ஒப்புதல் தருவார்களா?
இதற்கான பதில் வேண்டும் என தயாரிப்பாளர் சங்கம், பெப்சி திரைப்பட தொழிலாளர்கள் சங்கம், இயக்குநர்கள் சங்கம் மூன்றிலும் கடிதம் அனுப்பியும், நேரில் முறையிட்டும், யாரிடமிருந்தும் முறையான எந்த பதிலும் இல்லை நடவடிக்கையும் இல்லை.
இயக்குநர் சங்க தலைவர் ஆர்.வி.உதயகுமாரை சந்தித்து கேட்டேன். அவர் என்னை ஒரு இயக்குநராக மதித்து எந்த பதிலும் தரவில்லை. அவருமே “சென்சார் முடிந்துவிட்டது. இனி யாரும் ஒன்றும் செய்ய முடியாது” என்று கூறினார். தமிழ் திரையுலகில் அனைத்து இடங்களில் முறையிட்டும், எந்த ஒரு தீர்வும் இல்லை.
என் படம் முழுமையாக முடிந்துவிட்டது. சென்சாருக்கு தயாராகிவிட்டது. இப்போது நான் பத்திரிக்கை ஊடகங்களைத்தான் நம்புகிறேன். என்னை ஏமாற்றிய தயாரிப்பாளர் சங்கத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். எனக்கான நியாயம் பெற்றுத் தரப்பட வேண்டும். முதலில் மாஸ்க் டைட்டில் வைத்த எனக்கு அந்த டைட்டிலை பெற்றுத்தர வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்” என்கிறார், மாரிஸா.
- ராஜ திருமகன்
