திருப்பூரில் திருமணமான 10 மாதத்தில் பெண் ஒருவர் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூரைச் சேர்ந்த பட்டதாரி பெண் ரிதன்யா, திருமணமாகி வெறும் 77 நாட்களில் கணவர் கவின் குடும்பத்தினர் கொடுத்த வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது குறித்த வழக்கு நடைபெற்று வரும் நிலையில் தற்போது திருப்பூரில் மேலும் ஒரு பெண் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் தாராபுரம் சாலை பிரெண்ட்ஸ் கார்டன் பகுதியைச் சேர்ந்த சுகந்தி மகள் பிரீத்திக்கும் , ஈரோடு மாவட்டதைச் சேர்ந்த சதீஸ்வருகும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15ம் தேதி திருமணம் நடந்தது. பெற்றோர் நிச்சயித்த இந்த திருமணத்தின்போது பெண்ணுக்கு வரதட்சணையாக 120 சவரன் நகை, 25 லட்சம் பணம், மற்றும் 38 லட்சம் மதிப்பிலான இன்னோவா கார் உள்ளிட்ட சீர் வரிசையை கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் பிரீத்தியின் குடும்பத்தினர் பூர்வீகச் சொத்து விற்கும் சூழலில் மேலும் ரூ.50 லட்சம் கேட்டு கணவர் குடும்பத்தினர் கொடுமைப் படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் பிரீத்தி கடந்த ஒரு மாதத்திற்கு முன் கணவர் வீட்டிலிருந்து வெளியேறி தாயின் வீட்டில் தங்கியிருந்துள்ளார்.

இந்தசூழலில் வரதட்சணை கொடுமையால் கடும் மன உளைச்சலில் இருந்த பிரீத்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து நல்லூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமாகி 10 மாதத்தில் பெண் உயிரிழந்ததால் ஆர்டிஓ விசாரணையும் நடைபெற்று வருகிறது.
திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரேதப்பரிசோதனை செய்யப்பட்ட பிரீத்தியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட இருந்த நிலையில் அங்கு வந்த திருப்பூர் மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரனை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கணவர் உள்ளிட்ட குடும்பத்தினரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.
இதைத்தொடர்ந்து ஆர்டிஓ விசாரணை அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆணையர் உறுதியளித்த நிலையிலும் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கொங்கு மண்டலத்தில் பரவலாக வரதட்சணை பிரச்சனை இருப்பதாக ரிதன்யா தற்கொலையை தொடர்ந்து பல தரப்பினரும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்த நிலையில் தற்போது அதே வரதட்சணை கொடுமையால் பிரீத்தி தற்கொலை செய்ததாக வெளியாகி உள்ள செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.