சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மகாராஷ்டிராவைத் தொடர்ந்து ஒடிஷா எல்லை பகுதிகளிலும் சரணடைய தயாராக இருப்பதாக மாவோயிஸ்டுகள் அறிவித்துள்ளனர்.
ஆயுதப் புரட்சி மூலம் இந்தியாவில் கம்யூனிச அரசாங்கத்தை அமைக்க முடியும் என்ற நம்பிக்கையில் போராட்டத்தை நடத்தி வந்தனர் மாவோயிஸ்டுகள். தற்போது மாவோயிஸ்டுகள் இயக்கத்துக்கு எதிரான பாதுகாப்பு படையினரின் நடவடிக்கை தீவிரமடைந்துள்ளது; மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவாக இருந்த பழங்குடி பகுதிகள், பொது நீரோட்டத்துடன் இணைந்து கொண்டிருக்கின்றன.
இதனையடுத்து மாவோயிஸ்டுகள், தங்களது ஆயுதப் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்க முடியவில்லை. இதனால் சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா மாநிலங்களில் ஆயிரக்கணக்கான மாவோயிஸ்டுகள், ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைந்து வருகின்றனர்.
இந்த பின்னணியில் சத்தீஸ்கர்- ஒடிஷா எல்லை பகுதிகளில் செயல்படும் மாவோயிஸ்டுகள் குழுவின் தளபதி சுனில், சனிக்கிழமையன்று ஒரு பக்க அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “ஆயுதப் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்க முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது. ஏற்கனவே தளபதிகள் பலரும் போராளிகளுடன் சரணடைந்துள்ளனர்; அதே பாதையில் கரிதாபந்த் பிராந்தியத்தைச் சேர்ந்த நாமும் சரணடைவோம் என தெரிவித்துள்ளார்.
