தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மக்கள் பணியில் பங்கு கேட்டால் அது எப்படி சதியாகும் என்று காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் அடுத்த சில மாதங்களில் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளுக்கு இடையே கூட்டணி பேச்சுவார்த்தைகள் களைகட்டியுள்ளன. திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இதில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாணிக்கம் தாகூர் எம்பி மற்றும் பிரவீன் சக்கரவர்த்தி உள்ளிட்ட சிலர், ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையைத் தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று இந்தியா டுடே கருத்தரங்கில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், “ஆட்சியில் பங்கு என்பது தமிழ்நாட்டிற்கு ஒத்து வராது. இது எங்களுக்கும் தெரியும், காங்கிரசுக்கும் தெரியும். கூட்டணியில் சச்சரவு என்று சொல்வது கூட்டணியை முறிக்க நடக்கும் திட்டமிட்ட சதி. இந்த சதி குறித்து நாங்கள் கவலைப்படவில்லை. காங்கிரசும் கவலைப்படவில்லை” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
முதல்வர் பேச்சை தொடர்ந்து நேற்று மாணிக்கம் தாகூர் எம்பி, “கூட்டணி ஆட்சியா? அல்லது ஒரு கட்சி ஆட்சியா? என்பதை மக்கள் முடிவு செய்வார்கள். 2006-ல் மக்கள் தீர்ப்பைச் செயல்படுத்தாதது நம் தவறு” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் இன்று அவர் தனது எக்ஸ் பதிவில், “தோழமையில் மக்கள் பணியில் பங்கு கேட்டால் அது எப்படி சதியாகும்?” எனத் தெரிவித்துள்ளார்.
