ADVERTISEMENT

மம்தாவின் ஆத்திரமூட்டும் பேச்சு…. : உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில்!

Published On:

| By Kavi

மேற்கு வங்கத்தில் நடைபெற்று வரும் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியின் போது தேர்தல் அதிகாரிகள் பணி செய்யவிடாமல் தடுக்கப்படுவதாகவும், அவர்கள் மிரட்டப்படுவதாகவும் உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. 

தமிழகத்தை போலவே மேற்கு வங்கத்திலும் இந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதை முன்னிட்டு தேர்தல் ஆணையம், வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தை மேற்கொண்டது. இதில் 57 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருக்கிறார்கள். 

ADVERTISEMENT

இதுதொடர்பாக மேற்கு வங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் முதல்வர் மம்தா பானர்ஜியே நேரில் ஆஜராகி வாதாடினார். தேர்தல் ஆணையம், வாட்ஸ் அப் ஆணையம் போல செயல்படுவதாக பரபரப்பான வாதங்களை முன்வைத்தார். 

இந்த நிலையில் தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் இன்று (பிப்ரவரி 6) பதில் மனு தாக்கல் செய்துள்ளது. 

ADVERTISEMENT

அதில், “மேற்கு வங்கத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணியின் போது தேர்தல் அதிகாரிகள் மிரட்டப்பட்டனர். பணி செய்ய விடாமல் தடுக்கப்பட்டனர். வேறு எந்த மாநிலத்திலும் இதுபோன்று நடைபெறவில்லை. மற்ற மாநிலங்களில் சுமூகமாக பணிகள் நடந்த போது, மேற்கு வங்கத்தில் மட்டும் வன்முறை சம்பவங்களும் நடந்தன. இதுதொடர்பாக புகார் அளித்தால்  வழக்குப்பதிவு செய்ய மாநில அரசு தயக்கம் காட்டுகிறது. 

தேர்தல் அதிகாரிகள் தடைகளை எதிர்கொள்ளும் ஒரே மாநிலம் மேற்கு வங்கம்தான்.  

ADVERTISEMENT

குறிப்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி,  மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் வகையிலும், ஆத்திரமூட்டும் விதமாகவும் பேசி வருகிறார்.  தேர்தல் அதிகாரிகள் மத்தியில் ஒருவிதமான அச்சுறுத்தலான சூழலை உருவாக்கியுள்ளது. இதன் காரணமாக   சில அதிகாரிகள் இந்தச் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியிலிருந்து  தங்களை விடுவிக்குமாறு மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் கடிதம் சமர்ப்பித்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளது. 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share