இந்திய அரசியலில், பதவியில் இருக்கும் ஒரு மாநில முதல்வர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராக நேரில் ஆஜராகி வாதாடியது, நாடு முழுவதும் கவனத்தை பெற்றுள்ளது.
தமிழ்நாடு, மேற்கு வங்கம் என தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் தேர்தல் ஆணையம் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தை மேற்கொண்டது.
இதில் தமிழகத்தில் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். மேற்கு வங்கத்தில் 57 லட்சம் பேர் நீக்கப்பட்டிருக்கிறார்கள்.
இந்தநிலையில் தமிழகத்திலிருந்து திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் “வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணியின் போது முரண்பாடுகள் உள்ளதாக கண்டறியப்பட்டவர்களின் பெயர் பட்டியலை விளக்கத்துடன் வெளியிட வேண்டும்” என்று தேர்தல் ஆணையத்துக்கு கடந்த ஜனவரி 29ஆம் தேதி அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
இந்தசூழலில் நேற்று (பிப்ரவரி 4) மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது மேற்கு வங்க முதல்வரே நேரில் ஆஜராகி வாதாடினார். ஒரு நாட்டின் முதல்வர் உயரிய நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி வாதாடியது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான நீதிபதிகள் ஜோய்மல்யா பாக்சி மற்றும் விபுல் பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் ஆஜரான மம்தா பானர்ஜி, முறையான அரசாணைகள் அல்லது ஆவணங்களுக்குப் பதிலாக, வாட்ஸ்அப் போன்ற செயலிகள் மூலம் முறைசாரா முறையில் தேர்தல் ஆணையம் உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. அது தேர்தல் ஆணையம் அல்ல… வாட்ஸ் அப் ஆணையம்.
இந்த ஆணையம், புதிதாக வாக்காளர்களை சேர்க்க ஆர்வம் காட்டவே இல்லை… மாறாக ஏற்கனவே உள்ளவர்களை நீக்குவதில் மட்டுமே குறியாக இருந்தது.
தகுதியுள்ள, உண்மையான வாக்காளர்கள் முறையான காரணங்களின்றி நீக்கப்பட்டிருக்கிறார்கள். இது ஜனநாயகத்தின் அடிப்படை உரிமையைப் பாதிக்கும் செயல் இல்லையா… ” என்று தனது மாநில மக்களுக்காக வாதங்களை முன்வைத்தார்.
தொடர்ந்து சமூகத்தின் விளிம்புநிலை மக்கள் மற்றும் பெண்களின் உரிமைகள் குறித்து பேசிய மம்தா பானர்ஜி, “திருமணத்திற்குப் பிறகு பெண்களின் குடும்பப் பெயர் மாறுவதைக் காரணமாகக் கொண்டு, அவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்படுகிறது. இது அநீதி இல்லையா… போதிய ஆவணங்கள் இல்லாத காரணத்தாலோ அல்லது நடைமுறைச் சிக்கல்களாலோ ஏழை வாக்காளர்கள் பட்டியலிலிருந்து ஓரங்கட்டப்படுவதைத் தடுக்க வேண்டும்.
அடிமட்டத்தில் பணியாற்றும் உள்ளூர் பூத் நிலை அதிகாரிகளின் கருத்துக்களையும் முடிவுகளையும் புறந்தள்ளிவிட்டு, வெளியிலிருந்து வரும் இந்த அதிகாரிகள் தன்னிச்சையாகச் செயல்படுவது, உள்ளூர் நிர்வாக அமைப்பைச் சிதைப்பதற்கு சமம்” என்று கூறினார்.
மம்தா பானர்ஜியின் உணர்ச்சிகரமான மற்றும் விரிவான வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், இந்தியத் தேர்தல் ஆணையம் மற்றும் மேற்கு வங்க தலைமைத் தேர்தல் அதிகாரி ஆகியோருக்கு இந்த விவகாரம் குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
இந்தியாவில் பல அரசியல் தலைவர்கள் ஏற்கனவே பயிற்சி பெற்ற வழக்கறிஞர்களாக உள்ளனர். கபில் சிபல், அபிஷேக் சிங்வி, பி. சிதம்பரம், வைகோ போன்றவர்கள் பல்வேறு வழக்குகளில் ஆஜராகியிருக்கிறார்கள். ஆனால் முதல்வர் பதவியில் இருந்து கொண்டு மம்தா ஆஜராகியிருப்பது, அரிதான நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது.
இதற்கு முன் எந்தெந்த வழக்குகளில் மம்தா ஆஜராகியிருக்கிறார்?

மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் இருந்தபோது எதிர்க்கட்சியில் இருந்த மம்தா பலமுறை நீதிமன்றத்தில் ஆஜராகியிருக்கிறார்.
2003ஆம் ஆண்டு அப்போதைய கொல்கத்தா மாநகராட்சி ஆணையர் தேபாஷிஷ் சோம் அளித்த புகாரின் அடிப்படையில், மாநகராட்சியின் மேயர்-இன்-கவுன்சில் உறுப்பினர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து வழக்கறிஞராகத் தனது கருப்பு அங்கியை அணிந்து கொண்டு நீதிமன்றத்திற்குள் வந்த மம்தா பானர்ஜி, இந்தக் கைதுகள் அனைத்தும் அப்போதைய இடதுசாரி அரசாங்கத்தின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று ஆவேசமாக வாதாடினார். இதனால் கைது செய்யப்பட்ட அந்த உறுப்பினர்களுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
1993ல் இடதுசாரி அரசாங்கத்திற்கு எதிராக, “வாக்காளர் அடையாள அட்டை கட்டாயம்” என்ற கோரிக்கையை முன்வைத்து இளைஞர் காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதில் காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். அதோடு மட்டுமின்றி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது “கலவரம் செய்தல்” மற்றும் “வன்முறை” ஆகிய பிரிவுகளின் கீழ் அரசு வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் போராட்டக்காரர்கள் சார்பில் ஆஜரான மம்தா, காவல்துறை தனது கண்மூடித்தனமான வன்முறையை நியாயப்படுத்துவதற்காகவே இத்தகைய பொய் வழக்குகளைப் போட்டுள்ளது என்று ஆணித்தரமாக வாதங்களை முன்வைத்தார்.
1996ல் ரீஜண்ட் பார்க் காவல் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தியதாக பங்கஜ் பானர்ஜி எம்.எல்.ஏ மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கிலும் ஆஜரான மம்தா, காவல்துறை பொய் வழக்கை போட்டு கைது செய்திருப்பதாக பங்கஜ் பானர்ஜிக்கு ஆதரவாக வாதாடினார்.
1990 சமயத்தில் தட்சிண தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள குமார்கஞ்ச் பகுதியில் காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரு மாணவர் கொல்லப்பட்டார். இது அந்தப் பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அப்போது ஒரு மாநிலத் தலைவராக வளர்ந்து கொண்டிருந்த போதிலும், பாதிக்கப்பட்ட ஏழை மாணவனின் குடும்பத்திற்காக நீதிகேட்டு, கொல்கத்தாவிலிருந்து வெகு தொலைவில் உள்ள பலூர் மாவட்ட நீதிமன்றத்திற்கு மம்தா பானர்ஜி நேரில் சென்று ஆஜராகினார்.
துப்பாக்கிச் சூடு நடத்துவதற்குப் போதுமான காரணங்கள் இருந்ததாகக் காவல்துறை முன்வைத்த வாதங்களை கடுமையாக எதிர்த்த மம்தா பானர்ஜி, தற்காப்பிற்காகச் சுட்டோம் என்று காவல்துறை சொல்வது முற்றிலும் பொய்யானது. அது ஒரு திட்டமிட்ட படுகொலை என பாதிக்கப்பட்டவர் தரப்பில் வாதிட்டார்.
இதுபோன்று பல்வேறு வழக்குகளில் வாதாடிய மம்தா தற்போது 33 ஆண்டுகளுக்கு பிறகு உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகியிருக்கிறார்.
மம்தா பானர்ஜி, கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள ஜோகேஷ் சந்திர சவுத்ரி சட்டக் கல்லூரியில் சட்டத்தில் இளங்கலை பட்டம் பெற்றவர்…
ஒரு வழக்கமான ‘தொழில்முறை வழக்கறிஞராக’ இல்லாவிட்டாலும், அவர் ஒரு நேர்காணலில் மேற்கு வங்க மாநில பார் கவுன்சிலில் சேர்ந்துள்ளதாகக் கூறியுள்ளார்.

கொல்கத்தா உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் 2023 உறுப்பினர்கள் கோப்பிலும் அவரது பெயர் உறுப்பினராக பட்டியலிடப்பட்டுள்ளது.
கடந்த 30 தசாப்தங்களில் மம்தா பானர்ஜியின் நீதிமன்றப் பயணத்தை பார்த்தால், அது அதிகாரத்திற்கு எதிரான ஒரு தொடர் போராட்டத்தைக் காட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
