மதிமுக துணை பொதுச்செயலாளராக இருந்து வரக்கூடிய மல்லை சத்யாவுக்கும், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் முதன்மை செயலாளர் துரை வைகோவுக்கும் இடையே கருத்து மோதல் அதிகரித்து வருகிறது. mallai sathya protest against vaiko
கடந்த மாதம் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் மல்லை சத்யா, ‘ஜனநாயக முறையில் வாக்கெடுப்பு நடத்தி கட்சியை விட்டு என்னை நீக்குங்கள்’ என வெளிப்படையாக பேசினார். அதன்பிறகு நடந்த நிர்வாக குழு கூட்டத்தில் சத்யாவை பொதுச்செயலாளர் வைகோ நேரடியாக எச்சரித்து பேசினார்.
அதைத்தொடர்ந்து ‘துரோகி’ என்ற வார்த்தையால் மெளனத்தை கலைத்த சத்யா, வைகோவுக்கு எதிராக ஊடகங்களில் பேசத் தொடங்கினார்.
கட்சியை விட்டு நீக்குவார்கள் என சத்யா எதிர்பார்க்கிறார். ஆனால் வைகோவோ, அவராகவே கட்சியை விட்டு வெளியேற வேண்டும் என பார்க்கிறார். ஆனால் இன்று வரையில் வைகோவும் கட்சியை விட்டு எடுக்கவில்லை. சத்யாவும் வெளியேறவில்லை.
இந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி வைகோவை எதிர்த்து, உண்ணாவிரதம் போராட்டம் நடத்த காவல்துறையிடம் அனுமதி கேட்டிருந்தார். அதனை ஏற்றுக்கொண்ட காவல்துறையும், காலை 10 மணி முதல் 5 மணி வரையில் சென்னை சேப்பாக்கம் சுவாமி சிவானந்தா சாலையில் உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி கொடுத்துள்ளனர்.
சத்யாவின் உண்ணாவிரத போராட்டத்திற்கு பலம் சேர்க்கும் வகையில், மதிமுகவில் இருந்து விலகி சென்றவர்கள் மற்றும் தற்போது மதிமுகவில் இருக்கக்கூடிய நிர்வாகிகளும் ஆதரவு கரத்தை நீட்டுவதாக சொல்கிறார்கள் சத்யாவின் ஆதரவாளர்கள்.
சத்யாவும் தனது பலத்தைக் காட்ட, பெரும் கூட்டத்தைக் கூட்ட ஏற்பாடுகள் செய்து வருகிறார்.
ஆனால் திமுக கூட்டணியில் உள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் ’எனக்கு எதிராக பேச காவல்துறை அனுமதியா?’ என்று அதிருப்தியில் இருந்து வருவதாக சொல்கிறார்கள் மதிமுக நிர்வாகிகள்.