’மாஸ்டர்’ படத்தில் லெக்சரர் ஆக வந்து தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் மாளவிகா மோகனன். அதற்கு முன்பே ‘பேட்ட’யில் சசிகுமார் ஜோடியாக தோன்றியிருந்தார். இருபது வயது இளைஞனுக்குத் தாயாகவும் நடித்திருந்தார்.
சமீபத்தில் வெளியான ‘ஹ்ருதயபூர்வம்’ படத்தில் மோகன்லால் உடன் நடித்திருந்தார். அதற்காக ரசிகர்களின் பாராட்டுகளையும் பெற்றார் மாளவிகா. அந்த பட புரோமோஷன் நிகழ்ச்சிகளில் மோகன்லாலின் நடிப்பு, படப்பிடிப்பில் அவரது இருப்பு பற்றிய தனது அனுபவங்களைப் பகிர்ந்திருந்தார்.
இந்த நிலையில் மம்முட்டியின் பிறந்தநாளான செப்டம்பர் 7 அன்று, தனது இன்ஸ்டாகிராமில் அவரை வாழ்த்தியிருந்தார் மாளவிகா.
அந்த பதிவில், ‘நான் நடிக்க வரக் காரணம் மம்முட்டி தான்’ என்று குறிப்பிட்டு ஒரு புகைப்படத்தையும் பகிர்ந்திருந்தார். ஒரு படப்பிடிப்பின்போது மம்முட்டியைச் சந்தித்துப் பேசியபோது, அவர் எடுத்த புகைப்படம் அது என்றும் குறிப்பிட்டிருந்தார் மாளவிகா.

அந்த நேரத்தில், ஒளிப்பதிவாளர் என்.அழகப்பன் இயக்கிய ‘பட்டம் போலே’ படத்திற்கான நாயகி தேடல் நடந்து கொண்டிருந்ததாம்.
அதில் துல்கர் சல்மான் ஜோடியாக நடிக்க மாளவிகா மோகனனை ‘ரெகமெண்ட்’ செய்தாராம் மம்முட்டி. ’அப்படித்தான் நான் நடிக்க வந்தேன்’ என்றிருக்கிறார்.
“என்னோட வாழ்க்கையில முதல் ஆடிஷன் அதுதான். ஒரு ஜாம்பவான் நடிகர் கையால் புகைப்படம் எடுப்பது எத்தனை பேருக்கு கொடுத்து வைத்திருக்கும்?” என்று சொன்ன மாளவிகா, ‘என்னை சினிமா எனும் மாயஜால உலகத்திற்கு அழைத்து வந்ததற்கு நன்றி’ என்றும் அந்த பிறந்தநாள் வாழ்த்தில் தெரிவித்திருக்கிறார்.