தமிழ் சினிமாவில் சின்னச் சின்ன பாத்திரங்களில் நடித்து, மெல்ல குணசித்திர பாத்திரங்கள், வில்லன் வேடம், நாயக அவதாரம் என்று வளர்ந்தவர்கள் பலர் உண்டு. 2010க்குப் பிறகு அப்படி வெளிச்சம் பெற்றவர்கள் என்று விஜய் சேதுபதி, காளி வெங்கட், தினேஷ் உட்படச் சிலரைச் சுட்டிக்காட்ட முடியும். வாய்ப்பு தேடிய காலங்களில் இவர்களோடு பழகிய பலரில் ஒருவர், நடிகர் முனீஸ்காந்த்.
சுமார் இரண்டு டஜன் படங்களில் சிறு பாத்திரங்களில் தலைகாட்டிய இவரை ‘முனீஸ்காந்த்’ ஆக அறிமுகப்படுத்தியது ‘முண்டாசுப்பட்டி’. அந்த பாத்திரம் தந்த தயவால், ராமதாஸ் என்ற பெயரையே ‘முனீஸ்காந்த்’ என மாற்றிக்கொண்டார்.
அவரிடம் ‘எப்போ ஹீரோ ஆகப் போறீங்க’ என்று பத்திரிகையாளர்கள் கேட்கும்போதெல்லாம், ‘இப்ப நல்லாத்தானே போயிட்டிருக்கு’ என்று பதில் சொல்வது முனீஸ்காந்தின் வழக்கம். ‘ராட்சசன்’ உட்படச் சில படங்களில் ‘சீரியசாக’ நடித்தபோதும், நகைச்சுவை பாத்திரங்களுக்கே முக்கியத்துவம் தருவது தான் அடுத்தடுத்த வாய்ப்புகளுக்கு வழி வகுக்கும் என்பதாகவே அவரது பதில்கள் ‘பெரும்பாலும்’ இருக்கும்.
அப்படிப்பட்டவர் இப்போது ஒரு படத்தில் ‘கதை நாயகனாக’ மாறியிருக்கிறார். படத்தின் பெயர் ‘மிடில் கிளாஸ்’.
புதுமுக இயக்குனர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்குகிற இப்படத்தில் முனீஸ்காந்தின் ஜோடியாக நடிக்கிறார் விஜயலட்சுமி. ‘சென்னை 600028’ நாயகிதான் இவர்.

விஜய் டிவி ‘குரைசி’, காளி வெங்கட், ராதாரவி, கோடாங்கி வடிவேலு, மாளவிகா அவினாஷ், வேல ராமமூர்த்தி உட்படப் பலர் நடிக்கிற இப்படத்திற்கு பிரனவ் முனிராஜ் என்பவர் இசையமைக்கிறார்.
’மரகத நாணயம்’, ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ என வித்தியாசமான படங்களைத் தயாரித்த மறைந்த ஜி.டில்லிபாபுவின் ஆக்சஸ் பிலிம் பேக்டரி இப்படத்தைத் தயாரிக்கிறது.
நடுத்தர மக்களின் வாழ்வனுபவங்களைச் சொல்கிற வகையில் அமைந்த ‘டூரிஸ்ட் பேமிலி’, ‘குடும்பஸ்தன்’ என்று சில படங்கள் ‘மெகா ஹிட்’ ஆகின. அந்த வரிசையில் ‘மிடில் கிளாஸ்’ இடம்பெறுமா என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது இப்படத்தின் மோஷன் போஸ்டர்.
இன்னும் சில மாதங்களில் படம் வெளியாகிறபோது, அதற்கான பதில் கிடைத்துவிடும்..!
