தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த நட்சத்திரங்களில் யார் அடிக்கடி வெளிநாடுகளுக்கு குடும்பத்துடன் பயணம் மேற்கொள்வார் என்று கேட்டால், ’மகேஷ்பாபு’ என்று அங்கிருப்பவர்கள் கண்களை மூடிக்கொண்டு சொல்வார்கள். அந்தளவுக்கு அவரது ‘பேமிலி டூர்’ பிரபலம்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒளிபரப்பான ’கௌன் பனேகா குரோர்பதி’யின் தெலுங்கு பதிப்பு நிகழ்ச்சியில், அதனைத் தொகுத்து வழங்கிய ஜுனியர் என்.டி.ஆர். இதனைக் குறிப்பிட்டு மகேஷ்பாபுவைக் கிண்டலடித்திருந்தார். அந்த அளவுக்குப் பயணங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள் அவரது குடும்பத்தினர்.
தற்போது அதனை உறுதிப்படுத்தும் வகையில், அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெற்ற ராப் பாடகி லேடி காகாவின் நிகழ்ச்சியில் பங்கேற்ற புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார் மகேஷ்பாபுவின் மனைவி நம்ரதா சிரோத்கர்.

மகன் கௌதம், மகள் சித்தாரா மற்றும் உறவினருடன் இருப்பதாக உள்ளன அப்புகைப்படங்கள். நிகழ்ச்சி நடந்த மேடை, அரங்கு, அங்கிருந்த உற்சாகச் சூழல் ஆகியவற்றையும் பதிவிட்டிருக்கிறார்.
“அற்புதமான நிகழ்ச்சி. ஒவ்வொரு கணத்தையும் ரசித்தோம்” என்று லேடி காகாவைப் பாராட்டியிருக்கிறார் நம்ரதா.
’இந்த புகைப்படத்தில் மகேஷ்பாபுவைக் காணோமே’ என்று தேட வேண்டியதில்லை. ராஜமௌலியின் படப்பிடிப்பில் கலந்துகொண்டிருப்பதால், இந்த சுற்றுலாவில் அவர் இணையவில்லையாம்..!