காப்பி அடிக்கிறார்கள்… கதாசிரியரை கொன்றது யார்? – வைரமுத்து ஆதங்கம்!

Published On:

| By christopher

They are copying from another movie : Vairamuthu

கௌதமன் இயக்கி கதாநாயகனாக நடித்திருக்கும் திரைப்படமான ‘படையாண்ட மாவீரா’ வரும் 19ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தில் சமுத்திரக்கனி, பூஜிதா பொன்னாடா, இளவரசு, ‘பாகுபலி’ பிரபாகர், சரண்யா பொன்வண்ணன், ‘ஆடுகளம்’ நரேன், மன்சூர் அலிகான், ரெடின் கிங்ஸ்லி, ‘நிழல்கள்’ ரவி , ‘தலைவாசல்’ விஜய், சாய் தீனா உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.

கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் மற்றும் சாம் சி. எஸ். இசையமைத்திருக்கிறார்கள்.

ADVERTISEMENT

வட தமிழகத்தில் பெரும்பான்மையாக வாழும் வன்னிய மக்களின் தலைவர்களில் ஒருவராக வாழ்ந்து மறைந்த ‘காடுவெட்டி’ குருவின் சுயசரிதையை தழுவி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வி கே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் நிர்மல் சரவணனராஜ், எஸ். கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நேற்று (செப்டம்பர் 10) நடைபெற்றது.

ADVERTISEMENT

தொழில்நுட்பத்தால் பின்னோக்கி செல்லும் சினிமா!

அப்போது பாடலாசிரியரும், கவிஞருமான வைரமுத்து பேசுகையில், ”கௌதமன் சமகாலத்தில் மதிக்கத்தக்க ஒரு இயக்குநர். சமரசம் இல்லாத போராளி. கலைத் துறையில் தமிழ் இன உணர்வோடும், மொழி உணர்வோடும் இயங்குகிற சிலரில் இவரும் ஒருவர். அவர் என் இளைய தம்பி என கொண்டாடுவேன். எனவே கௌதமன் இயக்கியிருக்கும் படைப்பு வெற்றி பெற வேண்டும். அவருடைய படைப்பு மக்களால் கொண்டாடப்பட வேண்டும் என வாழ்த்துவதற்காக வருகை தந்திருக்கிறேன்.

இன்றைய காலகட்டத்தில் திரைப்படங்களின் நோக்கும், போக்கும் துன்பப்படுகிற நிலையில்தான் இருக்கிறது. இன்றைக்கு 200 திரைப்படங்கள் வெளியானால் அதில் 10 படங்கள்தான் வெற்றிக்கு அருகில் வருகின்றன என்று குறிப்பிட்டிருக்க வேண்டும்.

ADVERTISEMENT

படையாண்ட மாவீரா படத்திற்கு மிகப்பெரிய பலம் இருக்கிறது. நம்மிடம் மிகப்பெரும் நடிகர்கள் இருக்கிறார்கள், மிகப்பெரும் தயாரிப்பாளர்கள் இருந்தார்கள், இருக்கிறார்கள், மிகப் பெரிய ஒளிப்பதிவாளர்கள் இருக்கிறார்கள், மிகப் பெரிய தொழில் நுட்ப வல்லுனர்கள் இருக்கிறார்கள். ஆசியாவின் சிறந்த திரையரங்குகள் தமிழகத்தில் உள்ளன. இவ்வளவு இருந்தும் தமிழகத்தில் படங்கள் ஏன் வெற்றி பெறவில்லை என்றால், இவர்கள் வாழ்க்கையைப் பார்த்து படம் எடுக்காமல் படத்தை பார்த்து படம் எடுக்கிறார்கள்.

படம் என்பது பிம்பம். வாழ்க்கை என்பது நிஜம். ரத்தமும், கண்ணீரும், வியர்வையும் கலந்த ஒரு உண்மையான பிம்பம். அந்த வாழ்க்கையில் இருந்து கடந்து சென்ற வாழ்க்கை, தொட்ட வாழ்க்கை, துன்புற்ற வாழ்க்கை, துன்பப்படுத்திய வாழ்க்கை, சக மனிதனை துன்புறுத்தி சென்ற வாழ்க்கை இவற்றை நீ படமாக எடுத்தால்.. பார்வையாளர்களுக்கும், படைப்புக்கும் ஒரு தொடர்புத் தன்மை ஏற்பட்டிருக்கும். இந்த தொடர்பு தன்மையற்று போனதால் பல திரைப்படங்கள் ரசிகர்களிடமிருந்து அந்நியப்பட்டு போயின என நான் நினைக்கிறேன்.

எட்டு கோடி பேர் மக்கள் தொகை கொண்ட இந்த தமிழகத்தில் சினிமாவை திரையரங்கத்திற்கு சென்று பார்க்கும் மக்களின் எண்ணிக்கை 35 லட்சமாக சுருங்கி விட்டார்கள். இதற்கு காரணம் என்ன என்று பார்த்தோமானால் சினிமா தொழில்நுட்பத்தால் துண்டாடப்பட்டு விட்டது. தொழில்நுட்பத்தால் வளர்ந்த சினிமா, இன்று அதே தொழில்நுட்பத்தால் பின்னடைவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதை வருந்தத்தக்கதாகவே கருதுகிறேன்.

அதிலும் தமிழ் சினிமாவில் கதாசிரியர் என்று ஒருவர் இருந்தார், அவரை கொன்றது யார்? திரைக்கதை ஆசிரியர் என்று ஒருவர் இருந்தார், அவரை அழித்தது யார்? வசனகர்த்தா என்று ஒருவர் இருந்தார், அவரை மழித்து வழித்தெடுத்தது யார்?

படையாண்ட மாவீரா படத்தை பொருத்தவரை இது வாழ்க்கை, ரத்தம், கண்ணீர், வியர்வை என ஒரு உண்மையான போராளியின் போராட்ட கதையாக இருப்பதால், இதில் கற்பனைகளுக்கு இடமில்லை. விதண்டாவாதங்களுக்கு இடமில்லை. இதில் இருக்கும் நிஜம் படத்தின் பலம் மட்டுமல்ல, வெற்றி பெறுவதற்கான விஷயம் என்று நான் நினைக்கிறேன்.

ஒரு படத்தின் வெற்றி என்பது அந்தப் படத்தை காண வரும் ரசிகர்களை பொறுத்தது. தமிழர்களை பொறுத்தது என நான் கருதுகிறேன்.

மலையூர் மம்பட்டியான், கரிமேடு கருவாயன், சந்தனக் காட்டு வீரப்பன் போன்ற வாழ்ந்த வீரர்களின் அசகாய சூரத்தனத்தை மக்கள் கொண்டாடுவார்கள், ரசிப்பார்கள். அந்த வரிசையில் இந்த படையாண்ட மாவீரா படத்தையும் மக்கள் ரசிப்பார்கள். கொண்டாடுவார்கள் என நம்புகிறேன்” என வைரமுத்து பேசினார்.

தமிழர்களிடையே பாகுபாட்டை வளர்த்தெடுக்கிறார்கள்!

தொடர்ந்து தயாரிப்பாளரும், இயக்குநருமான தங்கர் பச்சான் பேசுகையில், ”கௌதமன் திரைத்துறைக்கு சம்பாதிப்பதற்காக வரவில்லை. கௌதமன் தமிழனாக இருப்பதால்தான் சினிமாவை தேர்வு செய்திருக்கிறார். தமிழர்களுக்கு எதிராக நடக்கிற அரசியலாகட்டும், அடக்கு முறையாகட்டும், வன்முறையாகட்டும், மொழிக்கு எதிராக இந்த மண்ணுக்கு எதிராக எது நடந்தாலும் அதற்கு எதிராக குரல் கொடுக்கும் தமிழன் கௌதமன்.

இந்த நாட்டில் ஒடுக்கப்படுகிறவர்கள் தமிழர்கள் தான். அழிக்கப்படுவதும், ஒடுக்கப்படுவதும் தமிழ் மொழிதான். இதற்கு எதிராகவும் தமிழ் மொழியை பாதுகாப்பதற்காகவும் தமிழகத்தில் அவ்வப்போது தோன்றிய மனிதர்கள் நிறைய பேர் உள்ளனர். அவர்கள் அனைவரும் இலக்கியங்களாகவும், எப்போதாவது ஒருமுறை திரைப்படங்களாகவும் வருகிறார்கள்.

தமிழர் அல்லாதவர்கள் தமிழ் மொழியையும், இலக்கியத்தையும் அறிந்து கொண்டு தமிழர்களிடையே பாகுபாட்டை, விரோதத்தை வளர்த்தெடுக்கிறார்கள்.

சமூக வலைதளங்களில் கமெண்டுகள், ஃபாலோயர்கள் என்ற பெயரில் ஏராளமான மன நோயாளிகள் வலம் வருகிறார்கள். இவர்கள் அனைவரும் ஒரு அரசியல் கட்சியின் கொத்தடிமைகளாக- கைக்கூலிகளாக இருக்கிறார்கள். இவர்களை வைத்துதான் இன்றைக்கு அரசியல் கட்டமைக்கப்படுகிறது.

பத்து முதன்மையான பத்திரிகைகள், ஐந்து ஊடகங்கள் சொன்ன செய்திகளை மட்டுமே கேட்டு வந்த நமக்கு சமூக வலைதளங்கள் மிகப்பெரிய மாற்றமாக தெரிந்தது. ஒவ்வொரு தனி மனிதனும் சமூக வலைதளங்கள் மூலமாக தங்களுடைய கருத்துக்களை பதிவிடலாம். பகிர்ந்து கொள்ளலாம் என்ற நிலை உருவானது. இதன் மூலமாக நல்லது நடக்கும் என்று எதிர்பார்த்தால், என்ன நடக்கிறது என்பது உங்களுக்கே தெரியும். இந்த சிக்கலுக்கு இடையே தான் உண்மையான செய்திகள் வெளிவர வேண்டியதிருக்கிறது.

படையாண்ட மாவீரா திரைப்படம் யாருடைய மனதையும் காயப்படுத்த வில்லை. ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் வாழும் மக்களுக்கு பிடித்த மக்கள் தலைவனை பற்றி படம் எடுத்தால்.. அது சாதி படம் என்று குறிப்பிடக் கூடாது. இதை இப்படி வகைப்படுத்துபவர்கள் யார்? என்று தெரியவில்லை.

இந்த திரைப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். இந்தப் படத்தை பார்த்த பிறகு மக்களிடத்தில் ஒரு தாக்கம் ஏற்பட வேண்டும். ஒரு படைப்பு மக்களிடத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அப்படிப்பட்ட ஒரு படைப்பாக இந்த படையாண்ட மாவீரா இருக்கும் என்று நம்புகிறேன்” என தங்கர் பச்சான் பேசினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share