ADVERTISEMENT

வெற்றி சேனையா; இல்லை வெட்டி சேனையா? — ‘மகாசேனா’ விமர்சனம்

Published On:

| By Minnambalam Desk

Mahasenha Movie Review 2025

குரங்கணி மலை என்று இப்போது அழைக்கப்படும் யாளி மலைக்கும், அதன் அடிவாரத்தில் வாழும் ஒரு கிராம மக்களுக்கும் மூவாயிரம் ஆண்டு காலப் பகை. யாளி மலையில் உள்ள கோவிலில் இருக்கும் யாளீஸ்வரர் அந்த மக்களின் தெய்வம். அடிவாரத்தில் வாழும் மக்களுக்கு யாளீஸ்வரர் கோவிலுக்குப் போய், அந்த சிலையைப் பார்க்க வேண்டும் என்பது பெரிய ஆசை.

ADVERTISEMENT

அடிவாரத்தில் வாழும் மக்களுடைய தலைவர் மகள் கங்கா, யாளீஸ்வரரைப் பார்க்க குரங்கணிப் பகுதிக்கு மேலே ஏறி வருகிறாள். அப்போது யாளி மலையின் தலைவர் மகன் செங்குட்டுவன் அவளைப் பார்க்க, அவர்கள் இருவருக்கும் மலையில் தீ பிடிப்பது போல காதல் பற்றி எரிகிறது.

ADVERTISEMENT

யாளி மக்கள் தன்னை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பது கங்காவின் பயம்.

இந்நிலையில் கங்காவின் அப்பாவை செங்குட்டுவன் அப்பா கொன்று விட்டார் என்று அடிவார மக்கள் கங்காவிடம் வந்து கதற, ‘என் அப்பா அப்படி செய்திருக்க மாட்டார்’ என்ற செங்குட்டுவனின் வார்த்தைகள் கங்காவுக்கு நம்பும்படி இல்லை.

ADVERTISEMENT

எனவே பழிக்குப் பழியாக செங்குட்டுவன் அப்பாவைக் கொல்கிறாள் கங்கா.

காதல் முறிந்து, பகை பெரிதாகிறது.

ADVERTISEMENT

செங்குட்டுவன் (விமல்), பொம்மி (சிருஷ்டி டாங்கே) என்ற பெண்ணை மணந்து யாளி மலையின் தலைவன் ஆகிறான். அவர்களுக்கு ஒரு மகள். எப்போதும் யானையில் வருபவன் அவன்.

கங்கா (மஹிமா குப்தா), தனது ஊர் நபர் ஒருவனை (விஜய் சேயோன்) திருமணம் செய்து கொண்டு செங்குட்டுவனோடு பகை வளர்க்கிறாள் .

குரங்கணி மலையில் வாழும் மக்கள் சம காலத்திற்கு ஏற்ப வாழ, அடிவாரத்தில் இருக்கும் கங்காவின் ஊர் மக்களோ, பழங்குடிகள் போல உடை அணிந்து வெறி பிடித்த காட்டுமிராண்டிகளாக வாழ்கிறார்கள்.

யாளி மலையில் உள்ள யாளீஸ்வரர் சிலையை கொண்டு வந்து, தங்கள் ஊரில் வைக்க வேண்டும் என்பதும் செங்குட்டுவனைக் கொல்ல வேண்டும் என்பதும், கங்கா மற்றும் அவளது காட்டுமிராண்டிக் கணவனின் ஆசை.

யாளீஸ்வரர் சிலை கண் பார்வைக்கு தெரியாது. தொட்டால் தான் உணர முடியும். வருடா வருடம் சித்திரை முழு நிலவு அன்று மட்டுமே அதைக் கண்ணால் பார்க்க முடியும்.

வடக்கத்தியர்கள் ஒரு முறை, மலையாள நம்பூதிரி கூட்டம் ஒருமுறை, கங்காவின் அப்பா ஒரு முறை…. இப்படி ஒவ்வொரு முறை யாளீஸ்வரர் சிலையை திருட முயன்ற எல்லோருமே, மரணம் அடைந்து இருக்கிறார்கள் .

அது தெரியாமல் ஒரு இன்டர்நேஷனல் சிலை திருடும் நபர் (கபீர் துஹான் சிங்)….. ஒரு கேடுகெட்ட, வக்கிர, கேப்மாரி, அரை லூசு போலீஸ் கமிஷனர் (வேற யாரு? ஒன் அண்ட் ஒன்லி ஜான் விஜய்தான்) துணையோடு, குரங்கணி மக்களைக் கொன்று சிலையைத் திருட முயல்கிறான் .

கங்காவின் ஊருக்கு சிலையைக் கொண்டு வர உதவி செய்வது போல நடித்து, கங்காவின் ஊர் மக்கள் சிலை திருட ஆதரவு தருகிறான் போலீஸ் கமிஷனர்

ஒரு கல்லூரியில் இருந்து மாணவர்கள், குரங்கணி மலைக்கு ட்ரெக்கிங் போகிறார்கள். அவர்களை அடிவாரக் காட்டுமிராண்டிக் கூட்டம் பிடிக்கிறது .

அதில் ஒரு பெண்ணையும் அவளது காதலனையும் நரபலி கொடுக்க முயல்கிறது. கமிஷனர் அங்கு வர , அப்போதுதான் அந்தப் பெண், கமிஷனர் மகள் என்பது தெரிகிறது. கமிஷனர் மகளை அழைத்துக் கொண்டு, காதலனை கொன்று விடச் சொல்கிறார் .

செங்குட்டுவன் வளர்க்கும் யானை மதம் பிடித்து செங்குட்டுவன் மகளை மிதித்துக் கொல்கிறது.

சிலை திருடப்பட்டதா ? யாரால்? செங்குட்டுவன்- கங்கா பகை என்ன ஆனத ? என்பதே …

மருதம் புரடக்ஷன்ஸ் தயாரிப்பில் விமல், சிருஷ்டி டாங்கே,யோகி பாபு, ஜான் விஜய், கபீர் துஹான் சிங், மஹிமா குப்தா,விஜய் சேயோன் நடிக்க, தினேஷ் கலைச்செல்வன் எழுதி இயக்க, இரண்டு மணி நேரம் பதினைந்து நிமிடம் ஓடும், மஹாசேனா Vol .1 படம்

யாளி மற்றும் மலை அடிவாரம் இருவருக்கும் இடையேயான பகை , செங்குட்டுவன் – கங்காவுக்குமான பதின்ம வயதுக் காதல், அதில் நடித்த சிற்றிளம் நடிகர்கள், உடைகள், படமாக்கிய விதம் , அட்டகாசமான பின்புலம் இவற்றை எல்லாம் பார்த்தபோது வியந்து போனது மனசு.

கேமராவை எங்கே வைத்தாலும் மனதை மயக்கும் இயற்கை காட்சிகள், காலை, மாலை, அந்தி, இரவு, முன்னிரவு, பின்னிரவு , அதிகாலை நேரங்களில் இயற்கை காட்டும் வர்ண சொர்ண ஜாலங்கள்…. என்று அட்டகாசமான லொகேஷன்கள் மனதைக் கொள்ளை அடிக்கின்றன. அதையும் மீறி சிறப்பாக இயங்கி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் மனாஸ் பாபு.

உதய் பிரகாஷின் பின்னணி இசை சில இடங்களில் சாதிக்கிறது . சில இடங்களில் சோதிக்கிறது

யாளீஸ்வரர் சிலை உள்ளிட்ட சில விஷயங்களில் ஆர்ட் டைரக்டர் தினேஷ் குமார் கவனிக்க வைக்கிறார்

ஆனால்…..

வளர்ந்த செங்குட்டுவனாக வரும் விமல் ஏதோ… மூணாறு டூரிஸ்ட் ஸ்பாட்டில் ஜீப் ஓட்டும் ஆள் போல் நிற்கும்போதே, படம் யாளி மலையில் இருந்து உருண்டு அடிவாரத்துக்கு வந்து விழுந்து விட்டது.

இளம் வயது செங்குட்டுவனாக வரும் தம்பி, சும்மா நிற்கும்போதே கம்பீரமாக நிற்கிறான். யானையில் அமர்ந்து சவாரி செய்தபடி அறிமுகமாகும் விமல், என்னத்துக்கோ….. என்பது போல பரிதாபமாக வருகிறார் .

கோடாலியால் விறகைப் பிளக்க வேண்டும் என்றால் கோடாரியை தலைக்கு மேல் பின்னால் இழுத்து ஓங்கி உயர்த்தி தம் கட்டி விறகின் மேல் ஓங்கி அடித்து தானே பிளக்க வேண்டும்?

விமல் என்ன செய்கிறார் தெரியுமா?

குனிந்து, மரக்கட்டைக்கு மேலே அரை அடி மட்டும் கோடாலியை உயர்த்தி, கோடாலியின் கூர் முனையால், மரக்கட்டைக்கு கிச்சு கிச்சு மூட்டுகிறார்.

ஆனால் பாருங்கள்,,, விறகு பிளந்து தெறிக்குது! சும்மா சொல்லக் கூடாது.. ரஜினிகாந்த், என் டி ஆர் பாலகிருஷ்ணா கூட செய்யாத மாயம் இது. சபாஷ் விமல் .

செங்குட்டுவன் மனைவி பொம்மியாக சிருஷ்டி டாங்கே…. குண்டுக் கன்னம் , குமிழ் சிரிப்பு என்று தோற்றப் பொருத்தம் ரம்மியம்.

ஆனால் நடிப்பு சுமார் தான்.

முதல் காட்சியில் கையில் கத்தி , கபடா , வேல் எல்லாம் எடுத்துக் கொண்டு, கங்கா கூட்டத்தையே ஒரு வழி செய்வேன் என்று வேலுநாச்சி போல சபதம் விடுகிறார்.

ஆனால் கூட வந்த பெண்ணை ஒரு போலீஸ்காரர் பலாத்காரம் செய்ய முயல, ஓரஞ்சாரமாகக் கீழே விழுந்து, கண்ணீர் வீட்டுக் கதறுகிறார் .

அட, ஒரு கட்டையை எடுத்து போலீசை அடிப்பார்; கல்லை எடுத்தாவது போலீஸ் மேலே எறிவார் என்று பார்த்தால், பக்கத்தில் தரையில் இருக்கும் தூசு — தும்பு, புல்- பூண்டு, இழை- தழைகளைப் பிய்த்து, பெண்மையாக, பொத்துனாப்புல, நோகாமல்.. பலாத்காரம் செய்யும் போலீஸ் மீது எறிகிறார்.

அந்த தூசு — தும்பு, புல்- பூண்டு, இழை- தழை மேலே பட்டு போலீஸ்காரர் வலி தாங்காமல் விட்டு விடுவாராமா?

உண்மையில் நடிப்பில் அசத்தி இருப்பவர் கங்காவாக வரும் மஹிமா குப்தாதான். தெறிப்பு!

ஆனால் அவரையும் நல்லபடியாக விட்டு வைக்கவில்லை டைரக்டர் .

ஆரம்ப பிளாஷ்பேக் முதல் கொண்டு யாளி மலை ஆட்கள், அடிவாரம் ஆட்கள் எல்லோருமே பேச்சுத் தமிழில்தான் பேசுகிறார்கள் ஆனால் இவர் மட்டும் செந்தமிழ், செழுந்தமிழ், பைந்தமிழ், தீந்தமிழ் , மாந்தமிழ், பூந்தமிழ்,தேன்தமிழ், தண்டமிழ், வண்டமிழ் .. அருந்தமிழ், இருந்தமிழ்…. இவற்றில் எல்லாம் பேசுகிறார் .

இவர் இப்படிப் பேச, அவர்கள் அப்படிப் பேச, அவர்கள் அப்படிப் பேச, இவர்கள் இப்படிப் பேச … முருகா முருகா !

ஜான் விஜய் நடிப்பு என்ற பெயரில் கடுப்பேற்றுகிறார். ஓவர் ஆக்டிங் என்றால் கூடப் பரவாயில்லை. பார்க்கச் சகிக்காத ஒரு ஆக்டிங் பண்ணுகிறார்

யோகிபாபுவுக்கு காமெடி நடிகராக இருப்பது. கவுரவக் குறைச்சலாக இருக்கிறது போல. யாரையும் ஒரு தடவை கூட சிரிக்க வைக்க மாட்டேன் என்று சத்தியம் செய்து விட்டு ஷூட்டிங் வருவாரா இருக்கும்!

எந்த லாஜிக்கும் வகை தொகையும் இல்லாமல் புரஃபஸர், கமிஷனர், மாணவிகள் என்று எல்லாரையும், வாடி.. போடி… லூசு… போடா பரதேசி.. என்று திட்டிக் கொண்டே இருக்கிறார் .

செங்குட்டுவன் மகள் மேல் பாசமாக இருக்கும் யானைக்கு மதம் பிடித்து, அவளைக் கொல்ல வருகிறது. செங்குட்டுவன் காப்பாற்றுகிறான். யானை’ பரவாயில்லை’ என்ற நிலைக்கு வந்து விட்டதாக ஒருவர் சொல்ல,

அதை நம்பும் மகள் “ஹய்யா.. குணமாயிடுச்சு.” என்று சொல்லிவிட்டு, விமல் மற்றும் சிருஷ்டி டாங்கே அருகில் இருந்துதான் யானையை நோக்கி ஓடத் துவங்குகிறார்.

சட்டென்று எட்டிப் பிடித்து இழுத்து “அடி பாதகத்தி .. கிட்ட போவாதடி .. ” என்று தடுத்து இருந்தால் பிரச்னையே இல்லை. அல்லது ஓடிப் போய் பிடித்து இழுத்து இருந்தாலும் கூட ஓகேதான்.

ஆனால் விமலும் சிருஷ்டி டாங்கேவும், நின்ற இடத்தில் நின்று கொண்டே , ”போகாத.. போகாத .. வா…. வந்துரு…” என்று, ஸ்பிரிங்கில் நிற்பவர்கள் போல இருந்த இடத்தில் இருந்தே குதிக்கிறார்கள் .

இதற்கெல்லாம் அப்புறம்தான் அந்த சிறுமி யானையிடம் போகிறார். ஒரே அடி….. ஆள் அவுட் !

ஏதோ குடும்பப் பிரச்சினையில் இருந்தபோது எடிட் செய்திருக்கிறார் நாகூர் ராமச்சந்திரன் . திரைக்கதையே உதிரி உதிரியாக இருக்க, இவர் வேறு தன் பங்குக்கு இன்னும் உதிர்த்து இருக்கிறார்.

பழைய விக்ரம் படத்தில் வந்த, ‘என் ஜோடி மஞ்சள் குருவி..’ பாட்டின் சரணத்தின் மெட்டை சந்தடி சாக்கில் கிளைமாக்ஸ் பகுதி பாட்டில் சொருகி இருக்கிறார் பாடலிசை அமைப்பாளர் பிரவீன் குமார் .

படத்தின் பெயரை ஆங்கிலத்தில் MAHASENHA என்று போட்டு இருக்கிறார்கள் . ஏதோ வங்காளப்படம் என்று ரசிகர்கள் நினைத்து பக்கத்து தெரு வழியாகப் போகும் ஆபத்து உண்டு.

ஒன்று சொல்ல வேண்டும்.

படமாக்கலில் இந்தப் படக் குழுவின் உழைப்பு அபாரமானது. காடு மலை அருவி இவர்களுக்கு இடையில் ஊர்ந்து ஊர்ந்து நடந்து படக் குழுவோடு இறங்கி படம் எடுப்பது சாதாரண விஷயம் இல்லை. கொண்டாடத்தக்கது. அதுவும் இவர்கள் வைத்திருக்கும் சில ஃபிரேம்களைப் பார்க்கும்போது இப்படி வர வேண்டும் என்றால் எங்கெல்லாம் கேமரா வைத்து எடுத்திருக்க வேண்டும் என்று புரிகிறது .

ஆனால் என்ன எடுக்கிறோம் என்பது அதைவிட முக்கியம்.

— ராஜ திருமகன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share