பெரிய ஹீரோக்கள் நடித்த பழைய படங்களை தரக் கூட்டல் செய்யாமல், படத்தொகுப்பு மேம்பாடு செய்யாமல் , அப்படியே சும்மா டப்பாவை மட்டும் கழுவிக் கொண்டு வந்து திரையிட்டு, அந்தப் படங்களும் பெரிதாக ஓடாமல் , புதுப் படங்களுக்கும் தியேட்டர் கிடைக்காமல் அல்லாடுவது பற்றி நாம் எழுதி இருந்தோம்.
ஒரு படம் நிறைய தியேட்டர்களில் ஒரே நேரத்தில் ரீ ரிலீஸ் செய்யப்பட வேண்டும் என்றால் அந்தப் படம் எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்டு இருக்க வேண்டும் என்பதில் ஒரு கட்டுப்பாடு வேண்டும் என்றும் கூறி இருந்தோம்.
இந்த நிலையில் சிறிய முதலீட்டில் எடுக்கப்பட்ட திரைப்படங்களுக்கு முன்னுரிமை பெற்று தரக்கோரி ராட்ட திரைப்படத்தின் இயக்குனர் சக்திவேல் நாகப்பன் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தமிழ் திரைப்பட வெளியீட்டாளர்கள் சங்கத்திற்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
“சமீப காலமாக திரைப்பட வரலாற்றில் ரீரிலீஸ் என்ற பெயரில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேல் ரிலீஸ் செய்யப்பட்டு வெற்றி பெற்ற படங்களை மீண்டும் திரையரங்குகளுக்கு கொண்டு வருகிறார்கள். இதன் மூலம் சிறிய முதலீட்டில் எடுக்கக்கூடிய திரைப்படங்களுக்கு மாபெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. சிறிய பட்ஜெட்டில் எடுக்கக்கூடிய படங்களுக்கு தயவு செய்து ஒரு மாதத்தில் இரண்டு வெள்ளிக்கிழமையாவது கொடுத்து, சிறிய பட்ஜெட் திரைப்படங்களை வெளியிட தடை இல்லாமல் அவர்களது வாழ்வாதாரத்தையும் பேணி காத்திட வேண்டும்” என்கிறார்
ஆனால் இவரும் அறிக்கை என்ற பெயரில் சொதப்பி இருக்கிறார்.
ரீ ரிலீஸ் படங்கள் புதுப் படங்களை தடுக்கிறது என்பது சரி.
ஆனால் மாதத்தில் இரண்டு வெள்ளிக்கிழமையாவது சிறிய பட்ஜெட் திரைப்படங்களை வெளியிட தடை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்கிறார் .
அது எப்படி முடியும்.? சின்ன பட்ஜெட் படமோ பெரிய பட்ஜெட் படமோ, படம் நல்லா இருந்தால்தான் தியேட்டர் கொடுப்பார்கள்.
‘என் படம் சின்ன படம் ; எப்படி இருந்தாலும் தியேட்டர் தர வேண்டும் மக்கள் பார்க்க வேண்டும்’ என்று கட்டாயப்படுத்த முடியுமா?
கேட்பதை ஒழுங்காகக் கேட்காத கோரிக்கைகள் காற்றில் கத்தி வீசுவது போலத்தான் .
— ராஜ திருமகன்
