இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்து கடந்த ஜூன் 12ஆம் தேதி வெளியான ‘மகாராஜா’ திரைப்படம் சீன மொழியில் வெளியாகவுள்ளது.
தமிழ் சினிமாவில் இந்த ஆண்டின் அதிக வரவேற்பைப் பெற்ற திரைப்படங்களின் பட்டியலில் முதன்மை இடத்தில் இருக்கும் திரைப்படம் ‘மகாராஜா’.
சில மாதங்களுக்கு முன்பு தமிழில் வெளியான இந்தத் திரைப்படத்திற்கு விமர்சன ரீதியாக பல பாராட்டுகள் கிடைத்தன. வசூல் ரீதியாகவும் ரூ.100 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்த இந்தத் திரைப்படம் விஜய் சேதுபதியின் 50ஆவது திரைப்படம். மேலும், அவரது திரை வாழ்விலேயே அதிக வசூல் செய்த முக்கிய திரைப்படமாகும்.
நடிகர் ரஜினிகாந்த், நடிகர் விஜய் உட்பட பல்வேறு திரை நட்சத்திரங்கள் இந்தப் படத்தின் இயக்குநர் நித்திலனை நேரில் அழைத்து பாராட்டினர். அதன் பின், சில நாட்களுக்கு முன்பு நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியாகி சர்வதேச அளவிலும் மாபெரும் அங்கீகாரம் பெற்றது. குறிப்பாக அதிக பார்வைகளைப் பெற்ற இந்திய படங்களில் முதல் இடத்தைப் பெற்றது.
இந்த நிலையில், தற்போது இந்தத் திரைப்படம் சீன மொழியில் வருகிற நவ.29ஆம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தை அலிபாபா நிறுவனம் சீனாவில் வெளியிடுகிறது. இந்தப் படத்தில் விஜய்சேதுபதியைத் தவிர்த்து பாரதி ராஜா, அனுராக் கஷ்யப், மம்தா மோகன்தாஸ், அபிராமி, சிங்கம் புலி, ’நட்டி’ நடராஜன், அருள் தாஸ், திவ்யபாரதி, முனிஷ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
தினேஷ் புருஷோத்தமன் இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய, பிலோமின் ராஜ் படத்தொகுப்பு வேலைகளை மேற்கொண்டிருந்தார். இசையமைப்பாளர் அஜனீஷ் லோக்நாத் இந்தப் படத்திற்கு இசையமைத்திருந்தார்.
– ஷா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
தியேட்டரில் இருந்து ரசிகர்கள் தலைவலியுடன் செல்லக்கூடாது- கங்குவா டீமுக்கு ரசூல் பூக்குட்டி அட்வைஸ்!