மகளிர் உரிமைத் தொகை பெரும் பெண்களில் 49 சதவிகிதம் பேர் வீட்டு உபயோகத்துக்காக அந்த பணத்தை பயன்படுத்துவது தெரியவந்துள்ளது.
2023 ஆம் ஆண்டு முதல் தமிழக அரசு மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
சுமார் ஒரு கோடியே 15 லட்சம் பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் மூலம் மாதம்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
2025-26ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் இந்தத் திட்டத்திற்காக ரூ.13,807 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் விடுபட்ட தகுதி வாய்ந்த பெண்களுக்கும் மாதம் 1000 ரூபாய் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்தநிலையில் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடர்பாக ஆய்வு ஒன்று நடத்தப்பட்டுள்ளது. லண்டன் கிங்ஸ் கல்லூரியின் டிக்சன் பூன் சட்டப் பள்ளியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் பிரபா கோடீஸ்வரன் தலைமையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. தர்மபுரி, நாகப்பட்டினம் மற்றும் விருதுநகரைச் சேர்ந்த 1,283 மகளிர் உரிமைத் தொகை பயனாளிகள், வேலூர், காஞ்சிபுரம் மற்றும் கோயம்புத்தூரைச் சேர்ந்த பொருளாதார மற்றும் சமூக பின்னணியைக் கொண்ட 938 பயனாளிகள் அல்லாதவர்கள் ஆகியோரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
இதன் முடிவு நேற்று (ஆகஸ்ட் 12) அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வெளியிடப்பட்டது.
இதில் மகளிர் உரிமைத் தொகை பெரும் பயனாளிகளில் 56 சதவிகிதம் பேர், தங்களுக்கு ஊதியத்துடன் கூடிய வேலையை எதிர்பார்ப்பதாக கூறியிருக்கின்றனர். 23சதவிகித பேர் மட்டுமே பணப் பலனை மட்டுமே தேர்வு செய்வதாகக் கூறியிருக்கின்றனர். மீதமுள்ள 21சதவிகிதம் பேர் ஊதியத்துடன் கூடிய வேலை மற்றும் பணப் பலன் இரண்டையும் பெறுவது சிறந்தது என்று கூறியிருக்கின்றனர்.
இந்த பணப் பரிமாற்றம் வேலைக்கு சென்று ஊதியம் பெரும் பெண்களின் ஆர்வத்தை குறைக்கவில்லை.
இந்த ஆய்வில், 49% பயனாளிகள் வீட்டுப் பொருட்களுக்குப் பணத்தைச் செலவிடுவதாகவும், மற்றவர்கள் அதை மருந்துகள் மற்றும் உணவுக்காகப் பயன்படுத்துவதாகவும் ஆய்வின்போது கூறியுள்ளனர்.