மதுரை மாநாட்டில் விஜய் ‘ரேம்ப் வாக்’ வரும் போது தொண்டகள் நெருங்காமல் இருக்க இரும்பு கம்பிகளில் கிரீஸ் பூசப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மதுரையில் தவெகவின் 2-வது மாநில மாநாடு இன்று நடைபெறுகிறது. இந்த மாநாடு சுமார் 2.30 மணிநேரம் மட்டுமே நடக்க இருக்கிறது.
தவெக தலைவர் நடிகர் விஜய் உள்ளிட்ட ஒரு சிலர் மட்டுமே மேடையில் பேச உள்ளனர். மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோர் தீர்மானங்களை வாசிப்பர்.
இந்த மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்க குவிந்து வருகின்றனர். மதுரையில் வெயில் வாட்டி எடுக்கும் நிலையில் தரை விரிப்புகளையே மேற்கூரைகளாக்கி மாநாட்டு வளாகத்தையே குடில்களாக்கிவிட்டனர் தவெக தொண்டர்கள்.
இந்த மாநாட்டில் மேடையில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு விஜய் ரேம்ப் வாக் நடக்கிறார். இதற்காக வலுவான மேடை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ரேம்ப் வாக் சுமார் 30 நிமிடங்கள் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் ரேம்ப் வாக் வரும் போது தொண்டர்கள் ஆர்வகோளாறில் அந்த நடை மேடை மீது ஏறுவதைத் தடுக்க, ரேம்ப் வாக் மேடையைத் தாங்கி பிடிக்கும் இரும்பு கம்பிகளில் கிரீஸ்கள் பூசப்பட்டுள்ளன. இதற்கான ஏராளமான கிரீஸ் டப்பாக்கள் குவிக்கப்பட்டுள்ளன.விஜய்யை தொண்டர்கள் நெருங்குவதைத் தடுக்க கிரீஸ் பூசுவது அக்கட்சியினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.