கொளுத்தும் வெயிலால் தவெக மாநாட்டுக்கு வந்த தொண்டர்கள் மயக்கமடைந்து வரும் நிலையில், அவர்களுக்கு அங்கு தயார் நிலையில் உள்ள ஆம்புலன்ஸில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் மாநில மாநாடு மதுரை பாரபத்தியில் சுமார் 250 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாக இன்று (ஆகஸ்ட் 21) நடைபெறுகிறது. இதனையடுத்து நேற்று இரவு முதலே மாநாட்டு திடலுக்கு தொண்டர்களின் வருகை அதிகரித்தது.
சென்னை, கிருஷ்ணகிரி, கோவை, நெல்லை, குமரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நேற்று இரவு புறப்பட்ட தவெக தொண்டர்கள் இன்று காலை மதுரை மாநாட்டு திடலை வந்தடைந்தனர்.
இதற்கிடையே இன்று காலை முதல் மதுரையில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. தற்போது 100 டிகிரியை தாண்டி வெயில் பதிவாகியுள்ள நிலையில், மாநாட்டுக்கு வந்த சுமார் 300க்கும் மேற்பட்ட தவெக தொண்டர்கள் மயக்கமடைந்துள்ளனர்.
அவர்களுக்கு மாநாட்டு திடலில் அவசர உதவிக்காக வரவழைக்கப்பட்டிருந்த மருத்துவக்குழுவினர் அங்குள்ள மருத்துவ முகாம்களில் முதலுதவி சிகிச்சை அளித்து வருகிறன்றனர். மேலும் 12 பேர் மாநாட்டு திடலுக்கு வெளியே படுக்கை வசதிக் கொண்ட ஆம்புலன்ஸில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மாநாட்டுக்கு முதியவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகளை அழைத்து வர வேண்டாம் என நடிகர் விஜய் ஏற்கனவே வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில், கொளுத்தும் வெயிலில் பிஞ்சு குழந்தைகளை கைகளில் வைத்துக்கொண்டு சிலர் தவிப்பதும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.
