விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்துக்கு சென்சார் சான்றிதழ் வழங்கும் உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி தடை- பொங்கல் ரிலீஸ் இல்லை!

Published On:

| By Mathi

Jananayagan Verdict

விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படத்துக்கு சென்சார் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி பிடி ஆஷா பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா அமர்வு அதிரடியாக தடை விதித்துள்ளது.

ஜனநாயகன் திரைப்படத்துக்கு சென்சார் சான்றிதழ் வழங்க இன்று ஜனவரி 9-ந் தேதி காலை உத்தரவிட்ட நீதிபதி பி.டி. ஆஷா உத்தரவுக்கு எதிராக மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் சென்னை உயர்நீதிமன்றத்தில் உடனடியாக மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தது.

ADVERTISEMENT

இந்த மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா மற்றும் அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

மத்திய தணிக்கை வாரியம் சார்பாக சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜராகி தமது வாதங்களை முன்வைத்தார்.

ADVERTISEMENT

அப்போது, “ இந்த வழக்கில் ஜனவரி 7-ந் தேதி தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட போது ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் பதில் மனுத் தாக்கல் செய்ய போதிய அவகாசம் தரப்படவில்லை. தனி நீதிபதி தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிட்டுள்ளார். தணிக்கை வாரியத்தின் தலைவருக்கு, ஒரு திரைப்படத்தை மறு தணிக்கை செய்ய உத்தரவிட அதிகாரம் உண்டு.” என வாதிட்டார் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா. மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் சார்பாக கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏஆர்.எல். சுந்தரேசனும் ஆஜராகி இருந்தார்.

ஜனநாயகன் படத் தயாரிப்பு நிறுவனம் சார்பாக முன்னாள் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி மற்றும் மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன் ஆஜராகி வாதங்களை முன்வைத்தனர்.

ADVERTISEMENT

இவ்வழக்கு விசாரணையின் போது தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா,

  • தணிக்கை வாரிய தலைவருக்கு அவகாசம் வழங்காமல் நீதிபதி உத்தரவு பிறப்பித்தது ஏன்?
  • தணிக்கை குழு உறுப்பினர் எப்படி புகார் தர முடியும்?
  • சென்சார் சான்றிதழ் வழங்கப்படும் முன்னரே படத்தின் ரிலீஸ் தேதியை எப்படி அறிவிக்க முடியும்?
  • அவசரம் என்று போலியான அவசரத்தை நீதிமன்றத்தில் படத் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்து ஏன் நீதிமன்றத்துக்கு அழுத்தம் தர வேண்டும்?
  • ரிலீஸ் தேதியை முடிவு செய்துவிட்டதாலேயே படத் தயாரிப்பு நிறுவனத்தின் விருப்பத்துக்கு எல்லோரும் செயல்பட்டுவிட முடியுமா?
  • தனி நீதிபதியின் உத்தரவை அமல்படுத்த அனுமதிக்கமாட்டோம் என தெரிவித்தார்.

இதனையடுத்து, ஜனநாயகன் திரைப்படத்துக்கு சென்சார் சான்றிதழை உடனே வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி பிடி ஆஷா பிறப்பித்த உத்தரவுக்கு தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா, அருள்முருகன் அமர்வு இடைக்கால தடை விதித்தது. மேலும் இந்த வழக்கின் விசாரணை ஜனவரி 21-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதனால் பொங்கல் பண்டிகைக்கு விஜய் நடித்துள்ள கடைசி திரைப்படமான ஜனநாயகன் வெளியாகாது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share