எடப்பாடிக்கு எதிராக தயாநிதி மாறன் அவதூறு வழக்கு… ரத்து செய்த உயர்நீதிமன்றம்!

Published On:

| By Selvam

Madras High Court quashes

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திமுக எம்.பி தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் இன்று (ஏப்ரல் 25) ரத்து செய்துள்ளது. Madras High Court quashes

2024 மக்களவைத் தேர்தலின் போது, மத்திய சென்னை தொகுதி தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதியை ஆதரித்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்தார்.

அப்போது மத்திய சென்னை எம்.பி.தயாநிதி மாறன் தொகுதி மேம்பாட்டு நிதியை முறையாக செலவிடவில்லை என்று குற்றம்சாட்டியிருந்தார். எடப்பாடி பழனிசாமியின் பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவித்த தயாநிதிமாறன் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரியதோடு, அவதூறு வழக்கும் தொடர்ந்தார்.

இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏக்கள். மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரியும் வழக்கு விசாரணைக்கு தடைகோரியும் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பாக விசாரணை நடைபெற்று வந்தது.

எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன் ஆஜராகி, “தயாநிதி மாறனுக்கு எதிராக அரசு இணையதளங்களில் உள்ள தரவுகளின் அடிப்படையிலும், நாளிதழ்களில் வந்த செய்தியின் அடிப்படையிலுமே எடப்பாடி பழனிசாமி பேசினார். மற்றபடி அவர் அவதூறு கருத்துக்கள் எதுவும் பேசவில்லை. எனவே, இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும்” என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.

தயாநிதி மாறன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, “தயாநிதி மாறன் தொடர்பாக பிரசுரித்த செய்திக்கு சம்பந்தப்பட்ட நாளிதழ் வருத்தம் தெரிவித்துவிட்டது. இந்தநிலையில், தேர்தல் நேரத்தில் எடப்பாடி பழனிசாமி வேண்டுமென்றே தயாநிதி மாறனை குற்றம் சாட்டி பேசியது அவதூறானது” என்று வாதிட்டார்.

அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்து தீர்ப்பளித்தார். தீர்ப்பு விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார். Madras High Court quashes

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share