ADVERTISEMENT

வெற்றி பெறுகிறதா; டெபாசிட் இழக்கிறதா, ‘மாண்புமிகு பறை’? – விமர்சனம்

Published On:

| By Minnambalam Desk

Maanbumigu Parai Tamil Movie Review

‘ஆதி பறை’ என்ற பறை இசைக்குழு வைத்து நடத்துகிறார்கள் தாழ்த்தப்பட்ட சமூக நண்பர்கள் இருவர் (லியோ சிவகுமார், ஆர்யன்). பாரம்பரிய இசைக் கருவியான பறை என்பது சாவுக்கு மட்டுமே இசைக்கக் கூடிய — தீண்டத்தகாதது என்று ஒதுக்கப்பட்ட இசை என்று எல்லோரும் நினைக்கும் அவலத்தைப் போக்க,

ADVERTISEMENT

‘சாவு வீட்டுக்கு பறையடிக்க போகக் கூடாது’ என்பது அவர்கள் முடிவு. அதனால் ஊரில் உள்ள ஆதிக்க சாதி ஆட்களின் பகை.

ADVERTISEMENT

பிராமணர்கள் பூஜை செய்யும் கோவிலுக்கு அழைத்தாலும் வாசலில் நின்று வாசிக்க வேண்டும்; உள்ளே நுழைய முடியாது என்பதால், பிராமணர்கள் பூஜை செய்யும் கோவிலுக்கும் செல்வது இல்லை. அதனாலும் பகை.

பூசாரிகள் பூஜை செய்யும் கோவில்களுக்கு மட்டுமே போனாலும் அங்கேயும் தீண்டாமையைக் கடைபிடிக்கும் சில சாதியினர் .

ADVERTISEMENT

எனவே கல்யாணம், காது குத்து , திருவிழா, கலை நிகழ்ச்சிகளில் மட்டுமே வாசிக்கிறார்கள். பொருளாதார இழப்பு வந்தாலும் தாங்குகிறார்கள் .

பள்ளி ஆசிரியை யாழினியை (காயத்ரி ரெமா) காதலிக்கிறான் நண்பர்களில் ஒருவனான வெற்றி (லியோ சிவகுமார்) . அந்த காதலுக்கு உதவுகிறான் இன்னொரு நண்பன் (ஆர்யன்).

ADVERTISEMENT

பள்ளி இசை நிகழ்ச்சிக்கு பறை இசைக்க ஒப்பந்தம் செய்ய வருகிறாள் யாழினி. அதே தேதியில் வெற்றி அன் கோ விற்கு பக்கத்து ஊரில் வேறு நிகழ்ச்சி ஒப்பந்தமாகி இருக்க, வெற்றியை பள்ளி நிகழ்ச்சிக்கு அனுப்பிவிட்டு, அந்த ஊருக்கு போகிறான் நண்பன் .

அங்கே பறை இசைப் பெண்களிடம் சில ஆதிக்க சாதி நபர்கள் தவறாக நடந்து கொள்ள முயல, அவர்களை நண்பன் கண்டிக்க, நண்பன் கொல்லப்படுகிறான். அங்குள்ள ஆதிக்க சாதி நபர்களும் அதே சாதி போலீசாரும் குற்றவாளிகளை காப்பற்றி விடுகிறார்கள் .

மேற்கொண்டு சில இழப்புகள் நடக்கின்றன. அதன் பின்னால் ஆதிக்க சாதி வெறி இருக்கிறது. அதை அறிந்து அதிரும் யாழினி ஆதிக்க சாதி நபர்களைப் பழிவாங்க ஒரு முடிவு எடுக்கிறாள். அது என்ன முடிவு என்பதே,

சியா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபா & சுரேஷ் ராம் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் S. விஜய் சுகுமார் இயக்கத்தில், திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார், மற்றும் ஆரியன், காயத்ரி ரெமா, கஜராஜ், சேரன்ராஜ், ரமா, நடிப்பில் வந்திருக்கும் படம் ‘மாண்புமிகு பறை’ படம்.

கோவை உடுமலையில், தாழ்த்தப்பட்ட சமூக இளைஞர் சங்கர் என்பவர் ஆதிக்க சாதிப் பெண்ணான கவுசல்யா என்பவரைக் காதலித்து மணக்க, கவுசல்யாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சங்கரை 2016 மார்ச் 13 ஆம் நாள் நடுரோட்டில் பட்டப்பகலில் கொடூரமாக வெட்டிக் கொன்றார்கள். அவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட, , கௌசல்யா இறந்த கணவரின் குடும்பத்தில் ஒருவராகவே வாழ ஆரம்பித்தார். அதுதான் சாதி வெறிக்கு, தான் தரும் பதிலடி என்று முடிவு செய்தார்.

சங்கரின் மரணத்திற்குப் பின்னர் சங்கர் குடும்பத்தினருடன் வசித்து வந்த கௌசல்யா சாதி ஒழிப்புச் செயற்பாட்டாளாராக இயங்கினார்.கௌசல்யாவிற்கு மாதந்தோறும் 11,250 ரூபாய் ஓய்வூதியமும், சங்கரின் தந்தை வேலுச்சாமிக்கு சத்துணவுத் துறையில் வேலையும் தமிழக அரசு வழங்கியது .மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் கவுசல்யாவுக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது. நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் கண்டோன்மென்டில் கிளர்க்காக வேலை பார்த்து வந்தார் கௌசல்யா மார்ச் 13 2018 இல் ‘சங்கர் சமூகநீதி அறக்கட்டளை’ என்ற அமைப்பை தொடங்கினார்.

பறை இசையில் இறங்கிய கௌசல்யா, கொளத்தூர் மணி, தியாகு மற்றும் எவிடன்ஸ் கதிர் தலைமையில் 2018 டிசம்பர் 9 ஆம் நாள் தந்தை பெரியார் திராவிடக் கழகத்தில் இருந்த சக்தி என்ற இளைஞரை மறுமணம் செய்து கொண்டார். சக்தி நடத்தி வந்த நிமிர்வு கலையகம் என்ற அமைப்பில் பறை கற்க வந்த பெண்களிடம், சக்தி பாலியல் ரீதியாக அத்து மீற, புகார்கள் வெடித்தன. திருநங்கை ஒருவரும் சக்தி மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். கொளத்தூர் மணி மற்றும் சமூக செயற்பாட்டாளர் தியாகுவால் அந்தப் புகார்கள் விசாரிக்கப்பட்டு, சக்திக்கு 3 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் சக்தி மீதான கசடான விஷயங்களைத் தவிர்த்து விட்டு எழுதப்பட்ட படம் தான் ‘மாண்புமிகு பறை’

உலகின் தமிழினத்தின் ஆதி இசையான பறை. ஒரு காலத்தில் தமிழ் சமூகத்தின் மங்கல இசையாக இருந்தது. பின்னால் அந்த இசையும் அதை வாசிப்பவர்களோடு சேர்த்து தாழ்த்தப்பட்டது. அதற்கு மிகச் சரியாக, ‘ மாண்புமிகு பறை’ என்று பெயர் வைத்து இருப்பது கொண்டாடத்தக்க ஒன்று. பாராட்டுகள்.

ஆரம்பத்தில் கூறப்படும் பறை இசை வரலாறு அருமை.

தேவா இசையில் பறை இசை பாடல்கள் கொஞ்சம் பரவாயில்லை என்றாலும், ‘இங்க மட்டும் இளையராஜா இருந்தால் .. ‘ என்ற ஏக்கம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை.

எப்போதும் முகத்தில் ஒரு கூச்ச சுபாவப் புன்னகையோடு இருக்கும் லியோ சிவகுமார், வெற்றி கேரக்டருக்குப் பொருந்தவில்லை.

ஆர்யனின் தோற்றமும் பேச்சும் கூட அப்படியே.

காயத்ரி ரெமா பாராட்டும்படி நடித்து இருக்கிறார். பறை இசையில் அவர் நடிப்பு சிறப்பு.

நெல் என்பது, நாற்று விடப்பட்டு நாற்று வளர்ந்ததும் பறித்து, கட்டுக் கட்டி, கிளை பிரித்து, நீர் நிறைந்த இளகிய சேறு உள்ள வயலில் ஒவ்வொன்றாக நடப்படுவது என்ற விஷயமே தெரியாமல், நடிகை சுஹாசினி, தான் இயக்கிய இந்திரா என்ற படத்தில் நெல் மணிகளை வயலில் தூவி விதைத்து அது வளர்ந்து நெல் பயிராவது போலக் காட்டி இருப்பார் (நெல் மணிகள் ஊறி அழுகி தான் போகும் )

அது போல , ”என்ன சொல்ற கிழவி.. சாப்பிட்டியா கிழவி? சும்மா இரு கிழவி..” என்று ஒவ்வொரு வாக்கியத்துக்கும் ஒரு கிழவி சொன்னால், அது கிராமத்துப் பேச்சு என்று இந்தப் படக் குழுவுக்கு ஒரு தப்பான புரிதல் வேறு

காமெடி என்ற பெயரில், காதல் சுகுமார் ஒரு காட்சியில் வந்து பேசி, வெறுப்பு சுகுமார் என்று பெயர் வாங்கிப் போகிறார் .

ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், மூணாவது நாலாவது படிக்கும் மாணவர்கள் போடும் ஃபேன்சி டிரஸ் காம்பெட்டிஷனில் கூட, பசங்க ரசிக்கிற மாதிரி காமெடி பண்ணுவார்கள்

பெரும்பாலும் எதிர்பார்க்க முடிகிற, செயற்கையான, வழக்கமான, எந்த ஈர்ப்பும் பாதிப்பும் இல்லாமல் காட்சிகள் நகர்கின்றன.

திடீர் என்று அடுத்து என்ன எடுப்பது என்று புரியாத குழப்பத்தில் என்னென்னமோ காட்சிகள் வருகின்றன. யாருமே தங்கள் கேரக்டர் என்ன என்று உணர்ந்து நடிக்காமல், அந்தந்த காட்சிக்கு மட்டும் ஒரு வித பிளாஸ்டிக் தன்மையோடு நடிக்கிறார்கள்.

உதாரணமாக, முந்தைய காட்சியில் உயிர் நண்பன் அநியாயமாக கொல்லப்பட்டதற்கு கதறிக் கதறி அழும் வெற்றி, அந்த உணர்வின் தொடர்ச்சி சற்றும் இல்லாமல், அடுத்த காட்சியிலேயே மனைவியை படுக்கைக்கு அழைத்து சில்மிஷம் பண்ணி கொஞ்சுகிறான்

பொதுவாக சாதி ஆதிக்கத்தை எதிர்க்கும் படங்களில் சாதிப் பிரச்னை முக்கியமாகவும் பறை இசை பற்றிய விஷயங்கள் கொஞ்சமாகவும் வரும். இந்தப் படத்தில் பிஃப்டி .. பிஃப்டி . அவ்வளவுதான் வித்தியாசம்.

அதே நேரம் சாதி ஆதிக்கத்துக்கு எதிராகவும் சிறப்பாக அழுத்தமாக புதிதாக ஒன்றும் இல்லை.

உண்மையில் இந்தப் படத்துக்குள் ஒரு சிறப்பான திரைக்கதை ஒளிந்து இருக்கிறது .

மிருகங்களை வேட்டையாடி தின்ற மனிதன், மிருகங்களின் மற்ற பாகங்களை தின்று, உண்ண முடியாமல் மிருகங்களின் தோலை வீசி எறிய, , அது மரத்திலும் மண்ணிலும் சிக்கி, காற்று மழை வெயில் இவற்றில் பதப்பட்டு, அந்தத் தோலில் மரங்கள் , கிளைகள் மோதும் போது , சத்தம் வர ஆரம்பிக்க, அதைக் கேட்டு மிருகங்கள் பயந்து ஓட,

அதைப் பார்த்து மனிதன் மிருகங்கள் தோலில் இருந்து மேலும் சிறப்பாக பறை செய்ய,பின்னர் வேலை முடிந்த நிலையில் அதை இசையாக வாசிக்க,அப்படியே ஆடவும் ஆரம்பிக்க, பின்னர் அது ஒரு வீட்டில் ஊரில் நடக்கும் நிகழ்வுகளுக்கு மற்றவர்களையும் மற்ற ஊர் ஆட்களையும் அழைக்கும் அறிவிப்பு இசையாக மாற. அதில் இருந்து பிறகு பலவித தோல் வாத்தியங்கள் வந்த வரலாற்றை…

சும்மா பின்னணி குரலில் மட்டும் சொல்லிவிட்டு, வழக்கமான கதைக்குள் விழுந்து இருக்கிறார்கள் .

அதைத்தானே காட்சிப்படுத்தி இருக்கணும். அதை விட்டுட்டு……!

அதிலும் பறை இசை தமிழிசை என்று சொல்லப்படும் போது , தமிழினத்தில் இருந்து உருவாகிய உலகின் ஆதி இசை என்று பறையை சொல்வதில் என்ன கஷ்டம்?

அதே போல பறை இசையை தீண்டத்தகாத இசை என்ற நிலையில் இருந்து மாற்றும் முயற்சியில், நண்பர்கள் செய்த முயற்சி என்ன? அதில் வந்த சவால்கள் என்ன? என்று யோசித்து ஒரு கதை பண்ணி இருந்தால், இது உண்மையாகவே உலகப்படம். நிஜமாகவே சில நல்ல- உலக அளவிலான விருதுகளை — தரத்தின் அடிப்படையிலேயே இந்தப் படத்துக்கு வாங்கி இருக்கலாம்.

இந்த மாண்புமிகு பறை படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழாவில் தொல். திருமாவளவன், இயக்குனர் பாக்யராஜ், திண்டுக்கல் லியோனி,ஆகியோர் பேசிய பேச்சுகள் அவ்வளவு பிரம்மாதமானவை. அந்த நிகழ்ச்சி அவ்வளவு ரசிப்பாக இருந்தது. மூன்று மணி நேரத்துக்கு மேல் நடந்த… கொஞ்சமும் போரடிக்காத நிகழ்ச்சி அது.

ஆனால் இரண்டு மணி நேரம் மட்டுமே ஓடும் இந்தப் படம், அந்த நிகழ்ச்சியில் ஆயிரத்தில் ஒரு பங்கு கூட இல்லை.

மாண்புமிகு பறை… ரசிக்க வருவோர்க்கு சிறை

— ராஜ திருமகன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share