வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று இரவு இடி, மின்னலுடன் விடிய விடிய மழை பெய்தது. இன்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது.
இந்நிலையில் வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
காற்றழுத்த தாழ்வு பகுதி ஒடிசா- மேற்கு வங்க கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும், தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளது.
அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகப்பட்டினம் மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் அறிவித்துள்ளது.