தமிழ்நாடு முழுவதும் உள்ள சிபிஎம் அலுவலகங்களில் காதல் திருமணங்கள் நடத்திக் கொள்ளலாம் என்று அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஆணவக் கொலை நடப்பது தொடர்கதையாகி வருகிறது. நெல்லையில் ஐடி ஊழியர் கவின்செல்வகணேஷ் கடந்த ஜூலை 27ஆம் தேதி ஓடஓட வெட்டி ஆணவ படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பான விசாரணை நடந்து வரும் நிலையில், கவினின் தந்தையுடன் வந்து முதல்வர் ஸ்டாலினை விசிக தலைவர் திருமாவளவன் தலைமைச் செயலகத்தில் இன்று சந்தித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ஆணவக்கொலை தடுப்புச் சட்டத்தை இயற்ற வேண்டும் என்பதில் விசிக உறுதியாக உள்ளது என்று தெரிவித்தார்.
இந்தநிலையில் சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தனது பக்கத்தில், “சாதி ஆணவக் கொலை தடுப்புச் சட்டத்தை முதலமைச்சர் கொண்டு வர வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
மேலும் அவர், ” தமிழகத்தில் சாதி மறுப்பு திருமணங்கள் செய்துகொள்ளதனி ஏற்பாடு இல்லை. எனவே, தமிழ்நாடு முழுவதும் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகங்களில் காதல் திருமணங்கள் நடத்திக் கொள்ளலாம். காதலர்களுக்காக மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகங்கள் திறந்தே இருக்கின்றன.
நெல்லையில் ஒரே வருடத்தில் 240 கொலைகள் நிகழ்ந்துள்ளது. இது பதிவு செய்யப்பட்ட கணக்கு. நிலைமை கை மீறி செல்கிறது. கொலைகாரனை கொண்டாடுகிற சூழல் உள்ளது. அதே சமயம் பொதுச் சமூகத்தில் ஆணவக் கொலைக்கு எதிரான நிலை உருவாகி உள்ளது.
இந்த சூழலை அரசு பயன்படுத்திக் கொண்டு சாதி ஆணவக் கொலை தடுப்புச் சட்டத்தை கொண்டு வர வேண்டும் வருகிற சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே சாதி ஆணவக் கொலை தடுப்புச் சட்டத்தை முதலமைச்சர் கொண்டு வர வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.