பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோயில் தேரோட்ட திருவிழாவையொட்டி, நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. local holiday announced for tirunelveli
தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றாக திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆனித்திருவிழா தேரோட்டம் ஆண்டுதோறும் வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில், இந்த ஆண்டுக்கான ஆனி திருவிழா இன்று (ஜூன் 30) கொடியேற்றத்துடன் கோலகலமாக தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக வரும் ஜூலை 8ஆம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது.

தமிழகத்தின் மூன்றாவது பெரிய தேரோட்டம் என சிறப்பு வாய்ந்த இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதனை முன்னிட்டு நெல்லை மாவட்டத்துக்கு வரும் ஜூலை 8ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சுகுமார் இன்று உத்தரவிட்டுள்ளார்.
வங்கிகளுக்கு இவ்விடுமுறை பொருந்தாது!
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “திருநெல்வேலி நகர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்மன் திருக்கோயில் தேர் திருவிழா (ஆனி 24) 08.07.2025 செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும். அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும், நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை (Local Holiday ) நாளாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட நாளில் அரசு பொதுத் தேர்வுகள் ஏதுமிருப்பின் பொதுத் தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள், பொதுத் தேர்வு நடைபெறும் பள்ளிகள், பொதுத் தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறையானது பொருந்தாது எனவும், மேற்படி ஜுலை 8 உள்ளூர் விடுமுறை நாளன்று நடத்தப்படும் அரசு பொதுத் தேர்வுகள் அனைத்தும் எவ்வித மாறுதலுமின்றி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மேற்படி உள்ளூர் விடுமுறையானது செலாவணி முறிச் சட்டம் 1881 (Under Negotiable Instrument Act 1881)-இன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால், வங்கிகளுக்கு இவ்விடுமுறை பொருந்தாது.
மேலும், இம்மாவட்ட கருவூலம் மற்றும் அனைத்து சார்நிலைக் கருவூலங்களும் குறைந்தபட்ச பணியாளர்களை கொண்டு அரசு காப்புகள் (Government Securities) தொடர்பாக அவசரப் பணிகளை கவனிப்பதற்காக செயல்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 19.07.2025 அன்று வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.