தசைகளை வலிமைப்படுத்துவதற்கு உடற்பயிற்சிகளோடு உணவுகளும் மிகவும் முக்கியம். தசை வலிமையை அதிகரிக்கும் 7 உணவுகளைக் காண்போம்.
நம்மில் பெரும்பாலான மக்களுக்கு உடல் பிட்டாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அதற்காக ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்வது, நடைபயிற்சி, ஓட்டப் பயிற்சி மேற்கொள்வது வழக்கம். ஆனால், தசைகள் வலுப்பெற உடற்பயிற்சி செய்வது மட்டுமே முக்கியமல்ல. அதற்கு சரிபாதியாக உணவுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதைப் பொறுத்துதான் உங்கள் தசை எப்படி வலிமை பெறுகிறது என்பதை முடிவு செய்ய முடியும். ஆகவே, உடல் வலிமை பெற என்ன சாப்பிட வேண்டும்? எப்போது சாப்பிட வேண்டும் என்பது மிகவும் முக்கியம். உங்கள் தசை வலிமையை அதிகரிக்கும் 7 உணவுகளின் பட்டியலைக் கீழே கொடுத்துள்ளோம்.
சிக்கன் பிரஸ்ட் (Chicken Breast): சிக்கன் பிரஸ்ட் எனப்படும் கோழி மார்பு இறைச்சியில் அதிகளவில் புரதம் நிறைந்துள்ளது. கொழுப்பு குறைவாகவே உள்ளது. ஆகவே, உங்கள் தசைகள் உடற்பயிற்சிக்குப் பிறகு புரதத்தை சரியான அளவு நெஞ்சுக் கறியின் மூலம் பெறுகிறது. சிக்கன் பிரஸ்ட்டில் 26 முதல் 31 கிராம் புரதம் உள்ளது. அதை கிரில்லில் போட்டு வாட்டி சாப்பிடலாம் அல்லது ஓவனில் வைத்து வேகவைத்து சாப்பிடலாம். உடற்பயிற்சி செய்வதற்கு முன்பு அதனை சாப்பிடுங்கள். அது உங்கள் தசைகளை நன்றாக வலுப்படுத்தும். இறைச்சியுடன் கொஞ்சம் பழுப்பு அரிசி அல்லது சர்க்கரைவள்ளிக்கிழங்கைச் சேர்த்தால் இன்னும் கூடுதல் வலிமை கிடைக்கும்.
க்ரீக் தயிர் (Greek yogurt): க்ரீக் தயிரில் உள்ள புரதத்தைப் பொறுத்தவரை எடையைக் குறைக்க உதவுகிறது. தயிரில் மோர் மற்றும் கேசீன் இருப்பதால், உங்கள் தசைகளுக்கு சீரான அமினோ அமிலங்கள் கிடைக்கின்றன. இது வழக்கமான தயிரைக் காட்டிலும் கிட்டத்தட்ட இரண்டு மடங்கு புரதத்தைக் கொண்டுள்ளது. உடற்பயிற்சி செய்த உடனேயோ அல்லது தூங்குவதற்கு முன்போ கொஞ்சம் க்ரீக் தயிர் எடுத்துக்கொள்ளுங்கள்.
முட்டை (Egg) : முட்டைகள் உங்கள் தசைக்கு தேவையான முக்கியமான உணவாகும். தசைகளுக்குத் தேவையான அமினோ அமிலங்கள், உடற்பயிற்சிக்குப் பிறகு மீண்டும் வலிமை பெற உதவும் வைட்டமின் பி12, வைட்டமின் டி மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளும் முட்டையில் உள்ளன. வேகவைத்த, பொறியல் செய்த, ஆம்லேட் போன்றவையாக முட்டையை எடுத்துக்கொள்ளலாம். முழு முட்டையும் தசை வளர்ச்சிக்கு சிறப்பாக உதவி செய்கின்றன. மஞ்சள் கருவில் உள்ள அனைத்து ஊட்டச்சத்துக்களும் உங்கள் உடலுக்கு வலு சேர்க்கிறது.
சால்மன் மீன் (Salmon) : சால்மன் மீனில் புரதம் மட்டுமல்ல ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களால் நிறைந்துள்ளது. இது உடலில் வீக்கத்தைக் குறைத்து தசை வலிமையை அதிகரிக்கிறது. ஒமேகா – 3 அதிகமாக சாப்பிடுபவர்களுக்கு தசை விரைந்து வலிமை பெறுகிறது. வாரத்திற்கு இரண்டு முறை மதிய உணவு அல்லது இரவு உணவிற்கு சால்மன் மீனை சாப்பிட முயற்சிக்கலாம். குறிப்பாக புதினா, கொத்தமல்லி போன்றவை அல்லது எலுமிச்சையுடன் அதை கிரில் செய்து சாப்பிட்டு பாருங்கள்.
குயினோவா அரிசி (Quinoa) : குயினோவா அரிசி என்பது முழுக்க முழுக்க புரதச்சத்து நிறைந்த தானியம் ஆகும். அதில் அத்தியாவசிய அமினோ அமிலங்களும் உள்ளன. குயினோவா அரிசி மூலம் உங்களுக்கு நார்ச்சத்து, இரும்பு மற்றும் மெக்னீசியம் ஆகியவையும் கிடைக்கின்றன, இவை அனைத்தும் உங்கள் தசைகள் சிறப்பாக செயல்படவும், உங்கள் ஆற்றலை அதிகரிக்கவும் உதவுகின்றன.
பாலாடைக்கட்டி (Paneer): பன்னீர் என்பது முழுவதும் புரதத்தால் நிரம்பியுள்ளது. இது மெதுவாக ஜீரணமாகி உங்கள் தசைகளுக்கு மணிக்கணக்கில் ஊட்டமளிக்கிறது. இரவு நேரத்திலோ அல்லது உணவுக்கு இடையிலோ எடுத்துக்கொள்ளலாம். உங்கள் தசைகளை ஆற்றலாக வைத்திருக்க பன்னீர் உதவுகிறது. காய்கறிகள், சாலடுகள் அல்லது கிரில்லில் சேர்த்து இதனை சாப்பிடலாம். அசைவம் சாப்பிடாத சைவ உணவுப்பிரியர்களுக்கு பன்னீர் மிகச்சிறந்த தேர்வாக உள்ளது.
நட்ஸ் மற்றும் விதைகள் (Nuts): பாதாம், முந்திரி, பூசணி விதை போன்ற நட்ஸ் மற்றும் விதைகளில் புரதம், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் மெக்னீசியம் உள்ளடங்கியுள்ளன. தசை மற்றும் நரம்பு செயல்பாட்டிற்கு அவை மிகவும் சிறந்தவை. புரதம் பெரிதாக இல்லை என்றாலும் உங்களுக்கு நிலையான ஆற்றலையும் ஊட்டச் சத்துக்களையும் தருகின்றன. உணவுக்கு இடையில் அல்லது உடற்பயிற்சிக்கு பிறகு ஒரு கைப்பிடி அளவு சிற்றுண்டியாக எடுத்து சாப்பிடுங்கள்.
