நம்மில் பெரும்பாலானோருக்கு எது இருக்கிறதோ இல்லையோ முடி உதிர்வு பிரச்சனை கண்டிப்பாக இருக்கும். தினமும் தலை சீவும்போதோ, தலையை கோதும்போதோ முடிகள் வந்து விழுவதை பார்க்கும்போது அவ்வளவு மன உளைச்சல் ஏற்படும்.
மன அழுத்தம், மாசுபாடு, மோசமான தூக்கம், உடல் சூடு, கடுமையான தண்ணீர், எல்லாம் முடி உதிர்வு பிரச்னைக்கு காரணமாக உள்ளன. அத்துடன், குளிர்காலத்தில் ஏற்படும் பொடுகுத் தொல்லையும் முடி வளர்ச்சியை குறைத்து உதிர்வதற்கு முக்கிய காரணமாக மாறிவிடுகிறது.
முடி உதிர்வை (Hair Fall) தடுக்க நாமும் பல்வேறு முயற்சிகள் செய்து வருவோம். எண்ணெய் தடவுவது, விலை உயர்ந்த சீரம் வாங்கிப் பயன்படுத்துவது என பல முயற்சிகளில் ஈடுபடுவோம். ஆகவே, முடி உதிர்வை தடுக்க வெளிப்புறத்தில் செய்யும் முயற்சிகளைத் தாண்டி, உணவுகளை ஊட்டச்சத்து நிறைந்ததாக எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த வகையில் முடி வளர்ச்சிக்கு உதவும் ஐந்து அசைவ உணவுகள், அவை எப்படி முடி வளர்ச்சிக்கு உதவுகின்றன என்பது குறித்து பார்ப்போம்.
முட்டை: முடி வளர்ச்சிக்கு ஏற்ற உணவு என்றால் அது முட்டையாக இருக்கும் என்பதில் மிகையில்லை. ஏனெனில் முட்டையில் அவ்வளவு புரதச்சத்துக்கள் உள்ளன. ஏன் முடியே கூட கெரட்டின் எனப்படும் புரதத்தால்தான் ஆனது. முட்டையில் பயோட்டின், உயர்தர புரதம், வைட்டமின் பி12, இரும்பு மற்றும் துத்தநாகம் உள்ளன.
இதில் பயோட்டின் என்பது கெரட்டின் உற்பத்தியை அதிகப்படுத்துகிறது. இவை முடி உடைவதை குறைப்பதோடு, முடி வளர்ச்சியை துரிதப்படுத்துகிறது. அத்துடன், முடியை அடர்த்தியாகவும் பளபளப்பாகவும் மாற்ற உதவுகிறது.
முட்டையை வேகவைத்தோ, ஆம்லெட்டாகவோ, முட்டை குழம்பாகவோ செய்து சாப்பிடலாம். அதே சமயம் முட்டையை வறுப்பதையும், அதிக எண்ணெய் பயன்படுத்துவதையும் தவிர்த்துவிட வேண்டும். முடி வளர்ச்சிக்கு முட்டையை தலையில் தேய்த்துக்கொள்வதை விட, முட்டையை ஆகாரமாக உட்கொள்வதில் அதிக நன்மைகள் உள்ளதாகக் கூறுகிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள்.
மீன் வகைகள்: மீன் உங்கள் உச்சந்தலைக்கு ஒரு ஸ்பா போன்றதை ஏற்படுத்துகிறது. மீன்களில் முக்கியமாக ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. அவை முடியின் நுண்கால்களை உள்ளிருந்து வளர்க்கின்றன. அத்துடன், உச்சந்தலை வறட்சி மற்றும் பொடுகைக் குறைக்கிறது. இதுதவிர மெலிந்த புரதம், வைட்டமின் டி, இரும்புச் சத்து ஆகியவையும் மீன்களில் உள்ளன.
இவை முடி முடியின் தடிமனுக்கு உதவுவதோடு, அவை பளபளப்பாகவும், ஒட்டுமொத்த உச்சந்தலை ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன. கேட்லா, மத்தி மீன்கள், கானாங்கெளுத்தி, சால்மன் மீன்களை சமைத்து சாப்பிடலாம்.
சிக்கன்: கோழி இறைச்சியில் புரதச்சத்துக்கள் அதிகளவில் உள்ளன. இந்த புரதம் தலைமுடி வளர்ச்சிக்கு மிகவும் முக்கிய பங்காற்றுகிறது. குறிப்பாக மெலிந்த புரதம், பி வைட்டமின்கள், துத்தநாகம் ஆகியவை உள்ளன. இவை வலுவான முடி வேர்களை உருவாக்குகிறது, முடி உதிர்தலைக் குறைக்கிறது. பலவீனமான, உடையக்கூடிய இழைகளைத் தடுக்கிறது. கோழி இறைச்சியை குழம்பு, தந்தூரி கோழி, வறுக்கப்பட்ட கோழி, கோழி சூப் ஆக வைத்து சாப்பிடலாம்.
மட்டன்: ஆட்டிறைச்சி மற்றும் அதன் கல்லீரல் போன்ற உறுப்புகளில் இரும்புச்சத்து, துத்தநாகம் மற்றும் வைட்டமின் பி12 ஆகியவற்றில் நம்பமுடியாத அளவிற்கு நிறைந்துள்ளன. இவை அனைத்தும் குறைந்த ஹீமோகுளோபின் காரணமாக நாள்பட்ட முடி உதிர்தலை எதிர்கொள்ளும் மக்களுக்கு வரப்பிரசாதமாகும்.
குறிப்பாக இவை உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது, முடியின் வேர்களுக்கு ஆக்ஸிஜன் வழங்குகிறது, நுண்ணறைகளுக்கு ஊட்டச்சத்து விநியோகம் செய்கிறது. இதனால் ஒட்டுமொத்த முடி வளர்ச்சி அதிகரிக்கிறது. மட்டனை தினமும் சாப்பிடாமல் அவ்வப்போது இடைவெளி விட்டு எடுத்துக்கொள்ளுங்கள்.
தயிர், நெய், எலும்பு குழம்பு மற்றும் இறைச்சி: உங்கள் தலைமுடிக்கு புரதத்தை விட நல்ல கொழுப்புகள், கொலாஜன் மற்றும் புரோபயாடிக்குகள் தேவை. நாம் மேற்சொன்ன கலவை இவற்றை அதிகமாக வழங்குகிறது. இவை மென்மையான முடி அமைப்பு, செரிமானம், வலுவான முடி வேர்களைப் பெற உதவுகிறது. இவற்றுடன் தேங்காய், பாதாம், இலை காய்கறிகள், நெல்லிக்காய், ஆளி விதைகள் சாப்பிடுங்கள். முடி வளர்ச்சிக்கு கண்டிப்பாக உதவும்.
