கல்யாணி பிரியதர்ஷனைப் பல திசைகளிலும் அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறது ‘லோகா சேஃப்டர் 1: சந்திரா’.
இவரது தந்தை இயக்குனர் பிரியதர்ஷன். பழைய ‘விக்ரம்’மில் கமல்ஹாசனின் நாயகிகளில் ஒருவராக வந்த லிசி இவரது தாய். இவருக்கு சித்தார்த் என்ற இளைய சகோதரர் இருக்கிறார்.’ஹலோ’ மூலமாகத் தெலுங்கு, ’ஹீரோ’ மூலமாகத் தமிழ் திரையுலகில் அறிமுகமான கல்யாணி, 2020இல் ‘வரனே ஆவஷ்யமுண்டு’ வழியாக மலையாளத்தில் தலைகாட்டினார்.
அப்போது முதல் இப்போது வரை அங்கு தொடர்ச்சியாக நடித்து வருகிறார்.‘மாநாடு’ தவிர்த்து ‘ஹ்ருதயம்’, ‘ப்ரோ டாடி’, ‘தள்ளுமாலா’, சேஷம் மைக்கில் பாத்திமா’, ‘வர்ஷங்களுக்கு சேஷம்’ என கல்யாணி தந்த சூப்பர்ஹிட் எண்ணிக்கை அதிகம். தமிழில் அவரது நடிப்பில் ‘ஜீனி’, ‘மார்ஷல்’ படங்கள் வரவிருக்கின்றன.
’லோகா சேஃப்டர் 1: சந்திரா’ படம் ரிலீஸ் ஆவதற்கு முன் தொடங்கி சமீப நாட்கள் வரை, அப்படம் தொடர்பான செய்திகளில் கல்யாணியின் தந்தை பிரியதர்ஷன் பெயரை எங்காவது பார்த்துவிட முடிகிறது.
ஆனால், தாய் லிசி பற்றி ஒரு வார்த்தை கூட எங்கும் இடம்பெறவில்லை. இந்த நிலையில்தான், படக்குழுவினரை லிசி சந்தித்துப் பேசிய புகைப்படங்கள் அவரால் சமூகவலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன.
சென்னையில் நடந்த இந்த கொண்டாட்டத்தில் லிசி உடன் கல்யாணி, நாயகன் நஸ்லென், தயாரிப்பாளர் துல்கர் சல்மான், அவரது சகோதரி சுருமி ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
அவர்களோடு தான் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ள லிசி, “மாபெரும் வெற்றியைக் கொண்டாடுகிறோம். பணிவு, மகிழ்ச்சி, நன்றிகளைக் கடவுளுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
‘லோகா’ படத்தை உருவாக்கிய ஒவ்வொருவருக்கும் எனது வாழ்த்துகளும் நன்றிகளும்..” என்று இன்ஸ்டாகிராமில் தான் வெளியிட்டுள்ள வாழ்த்தில் குறிப்பிட்டிருக்கிறார். முப்பது கோடியில் தயாரான ‘லோகா சேஃப்டர் 1: சந்திரா’ இப்போதுவரை இந்தியாவில் மட்டும் சுமார் 126 கோடி ரூபாயை வசூலித்திருக்கிறது. உலகளவில் இது கிட்டத்தட்ட 252 கோடி ரூபாயைத் தாண்டியதாகச் சொல்லப்படுகிறது. அப்படியொரு சாதனையை எட்டியபிறகுதான் மகள் கல்யாணியையும் ‘லோகா’ குழுவினரையும் பாராட்ட வேண்டும் என்று லிசி காத்திருந்திருப்பார் போல..!