’மாஸ்கோவின் காவேரி’ வழியாகத் தமிழில் அறிமுகமானாலும், தெலுங்கு திரையுலகில் தனக்கென்று ‘தனித்துவமான’ இடத்தை உருவாக்கிக் கொண்டவர் நடிகை சமந்தா. நீதானே என் பொன்வசந்தம், அஞ்சான், காத்துவாக்குல ரெண்டு காதல், சீமராஜா என்று சில தமிழ் படங்களில் நடித்தாலும், ‘தி பேமிலிமேன்’ சீசன் 2 வெப்சீரிஸ் அவரை மீண்டும் புகழ் வெளிச்சத்தில் நிற்க வைத்தது.
நாகசைதன்யா உடன் விவாகரத்து, சரும நோயால் பாதிப்பு, இயக்குனர் ராஜ் நிதிமொரு உடன் காதல் என்று ஊடகங்களில் தொடர்ந்து வெளியாகிற செய்திகள் சமந்தாவின் ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியது. இதற்கு மத்தியில் நடிப்பு, தனிப்பட்ட வாழ்வு தொடர்பாகச் சமூகவலைதளங்களில் சமந்தா இடுகிற பதிவுகள் தொடர்ந்து அனைவரது கவனிப்பையும் இருந்து வருகின்றன.
அந்த வகையில், தற்போது தனது இன்ஸ்டாகிராமில் ஒரு கவிதை எழுதியிருக்கிறார் சமந்தா. தான் அழகாகத் தோற்றமளிக்கிற ஒரு வீடியோ உடன் அதனைப் பதிவிட்டிருக்கிறார். தனது ஒப்பனைக் கலைஞர் அவ்னி ராம்பியா உடன் உரையாடியபிறகு அதனை எழுதியதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
முப்பதுகளை அடையும்போது வாழ்வில் அதுவரை இருந்த பொலிவு அனைத்தும் மங்கிவிடும் என உலகம் சொல்லும் என்றும், அப்போது இருபதுகளில் இருந்தது போன்று வாழ்வதற்கான முயற்சிகளைச் செய்வோம் என்றும், ஏற்கனவே நாம் பூரணமாக இருப்பதை அந்த காலகட்டத்தில் சொல்ல மாட்டார்கள் என்றும் அந்த கவிதையில் குறிப்பிட்டிருக்கிறார் சமந்தா.
முப்பதுகளைத் தாண்டியபிறகு உலகத்திற்காக ஒரு முகம், தனிப்பட்ட வாழ்வில் ஒரு முகம் என்ற வேறுபாட்டினைக் களைந்து எங்கும் ஒரே முகத்தோடு இருப்பதே முழுமையான பூரணத்துவம் எனச் சொல்லியிருக்கிறார்.

அந்த முழுமை ஒவ்வொரு பெண்ணுக்கும் கிடைக்க வேண்டும் எனத் தான் விரும்புவதாகச் சொல்லியிருக்கும் சமந்தா, ’நீங்கள் நீங்களாக இருக்கும்போது உங்களை மட்டும் சுதந்திரப்படுத்திக் கொள்ளாமல் ஒட்டுமொத்த உலகையும் சுதந்திரமானதாக ஆக்குகிறீர்கள்’ என்று அக்கவிதையில் சொல்லியிருக்கிறார்.
’கவித வழியா இந்த உலகத்துக்கு சமந்தா ஏதோ சொல்ல வர்றார்’ என ரசிகர்கள் சிலர் ‘கமெண்ட்’ அடித்தாலும், ’அவர் மகிழ்ச்சியாக இருக்கிறார் என்பதே மகிழ்ச்சி தான்’ என்றும் சிலர் கொண்டாடி வருகின்றனர்.
கவிதையைப் பார்த்தால், வெகுவிரைவில் கேமிராவுக்கு பின்னாலயும் சமந்தா ‘அமர்க்களம்’ பண்ணுவார் போலிருக்கே..!