அனுமதியின்றி எடுத்த விடுப்புக்கு நிர்வாகம் ஊதியம் வழங்கினால், அதற்கு தொழிலாளர் மீது எப்படி குற்றச்சாட்டு சொல்ல முடியும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. Leave without permission
பொதுத்துறை நிறுவனமான நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் நாகப்பட்டினம் கிளை மேலாளராக இளங்கோவன் பணியாற்றி வந்தார்.
2006 முதல் 2008 வரை 117 நாட்கள் விடுப்பு எடுத்து சிங்கப்பூர் இலங்கை போன்ற நாடுகளுக்கு ஏழு முறை பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்த நிலையில் முன் அனுமதியின்றி இளங்கோவன் விடுப்பு எடுத்ததாகவும், அதேசமயம் 1,02,916 ரூபாய் ஊதியமாக பெற்று நிறுவனத்துக்கு இழப்பு ஏற்படுத்தியதாகவும் சிபிஐ வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்கில் இளங்கோவனுக்கு ஓராண்டு சிறை தண்டனையும் 2000 ரூபாய் அபராதமும் விதித்து சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து இளங்கோவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்பு இன்று (ஜூன் 25) விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரர் இளங்கோவன் விடுப்பு கோரி விண்ணப்பித்திருக்கிறார். எனவே அனுமதி இன்றி விடுப்பு எடுத்ததாக கருத முடியாது. அதுபோன்று நிர்வாகம் ஊதியம் வழங்கினால் அதற்கு தொழிலாளர் மீது மோசடி குற்றச்சாட்டு கூற முடியாது.
உயர் அதிகாரியின் அனுமதி இல்லாமல் வெளிநாடு சென்று இருந்தால் அதற்கு ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம். அதற்காக மோசடி குற்றச்சாட்டு கூற முடியாது என்று கூறி இளங்கோவனுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டார். Leave without permission